சனி, 17 அக்டோபர், 2009

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தெள்ளிய தீபமது திக்கெட்டும் ஒளிர
மீளாத் துயர்களவை இருளுடன் விலக
மத்தாப்பு கண்ட மழலையின் சிரிப்பாய்
மனமது மகிழ்ந்து வாழ்வது இனிக்க
பொன்னாய் ஒளிரட்டும் இந்தத் திருநாள்
தேனாய் இனிக்கட்டும் இனி வருநாள்!

வியாழன், 15 அக்டோபர், 2009

பணம்

பித்து முற்றிப் பிறிதொரு சிந்தை மறைத்து
எத்திக்கும் செல்லத் துணிந்தேன் எல்லை மறந்து
மானத்தின் மதிப்பும் நேரத்தின் அருமையும்
மண்ணிற் புதையுண்டு புதையும் உடல் பெருத்து
ஞாயிறு திங்களுக்கும் திங்கள் ஞாயிறுக்கும்
பேதம் மறந்து நொந்துச் சேர்த்தேன்
மாதம் எண்பது ஆயிரம் காகிதங்கள்...

அகராதியில் ஒரு மாற்றம் தேவை...

பணம், புகழ் மட்டுமல்லாது பல ஊர்களிலும் நாடுகளிலும் கோலோச்சிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே... பணம், புகழ் என்ற வட்டத்தைத் தாண்டி பலர் மனதை இந்த மனிதர் கொள்ளையடித்த காரணம் - வெள்ளித்திரைக்கு அப்பாற்பட்ட அவரது குணம்... ரஜினி என்கிற தனி மனிதர் தனக்கென வகுத்துக்கொண்ட பாதை, கடை பிடிக்கும் நெறிகள், எளிமை, அகத்தூய்மை இவை அனைத்தும் அவரை ஒரு தனிப் பரிமாணத்திற்கு உயர்த்தி விட்டன என்று கூறினால் அது மிகை ஆகாது... நரைத்த தலையுடனும், மிகச்சாதாரண உடையிலும் பவனி வரும் இந்த கருப்பு மின்னலைப் பற்றி தெரியாத ஒருவரைத் தேடிப் பிடித்து (சற்று கடினம் தான்) அவரிடம் இவர் ஆசிய அளவில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டார் என்று கூறினால் நிச்சயம் நம்ப மறுத்து விடுவார். சுருக்கமாய்ச் சொன்னால் எளிமையின் வாழும் உதாரணம் இவர்.

சமீபத்தில் நடந்த நடிகர் கமலஹாசனின் பாராட்டு விழாவில் ரஜினி ஆற்றிய உரை நெஞ்சை நெகிழச்செய்தது என்று கூறினாலும் அது இந்த மாமனிதனின் பேச்சில் இருந்த நேர்மையையும், அடக்கத்தையும், நற்குணத்தையும் முழுமையாக விளக்கி விடாது, விட முடியாது... ஆசிய அளவில் இவருக்கு இணையான ஊதியமும், நேயர்களும் உள்ள ஒரே நடிகர் ஜாக்கி சான் மட்டும் தான். அவரும் பல மேலை நாட்டுப் படங்களில் நடிப்பதாலேயே ரஜினியுடன் போட்டியிட முடிகிறது. இத்தனைக்கும் ரஜினி பிரதானமாக நடிப்பதென்னவோ தமிழ்த் திரைப்படங்களில் தான்... ஒரு மாநிலத்தில் மட்டுமே அதிக அளவில் பேசப்படும் மொழியை ஆதாரமாகக் கொண்ட ஒரு திரைத்துறையில் ஒருவர் உலக அளவில் புகழும், ரசிகர் உள்ளத்தில் இடமும் பிடித்திருப்பது வேறெங்குமே காணக்கிடைக்காத அதிசயம் என்றே கூறலாம்...

அப்படி ஒரு நிலையில் இருக்கும் ஒருவர், சற்றும் கர்வமோ, திமிரோ, பகட்டோ, படாடோபமோ இல்லாமல் நான் இன்னாரைப் பார்த்து தான் நடிக்கக் கற்றுக் கொண்டேன் என்று தனக்கு நேரடி போட்டியாக கருதப்படும் ஒருவரை குறிப்பிடுதல், அதுவும் அந்த நடிகருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் முன் வெளிப்படையாய்க் கூறுவது வேறெங்கும் நாம் கண்டிருக்க முடியாது.

இது தவிர பலரும் கவனிக்க மறக்கும் மற்றொரு விஷயம், அவரது கவனிக்கும் திறன்... மற்றவரிடம் இருக்கும் திறமையை எந்த விதமான தயக்கமும் இன்றி மனதாரப் பாராட்டி மகிழும் இவரது வெள்ளை உள்ளம், பிரபு தேவா நடன நிகழ்ச்சியின் போதும், இசை ஞானி பேசிய போதும் வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்தது. தான் என்ற அகந்தையை வென்றவன் ஞானி ஆகிறான் என்ற விவாதம் சரியானால், தலைவர் ஒரு ஞானி என்பது திண்ணம்.

குழப்பவாதி, நிலையான சிந்தனை இல்லாதவர், திறமையற்றவர் என்று இவர் வளர்ச்சி பிடிக்காத பலரும் பல விதமாய் அவதூறுகள் பேசினாலும் உண்மையில் இவர் மற்றவர் நலமும், வளமும் மட்டுமே கோரும் ஒரு மிக உயரிய மனிதர் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. தமிழ் அகராதியில் ரஜினி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு அதற்கு பொருளாய் அளவில்லாத அடக்கமும், நிகரில்லாத் தனித்துவமும், கள்ளமில்லா உள்ளமும், உணர்வுப்பூர்வமான உண்மையும் வானளவு கலந்து செய்த கலவை என்ற விளக்கம் இடம் பெற வேண்டும். இதுவே இந்த மனிதருக்கு தகுந்ததோர் மரியாதையாய் இருக்க முடியும். வாழ்க சூப்பர் ஸ்டார். வளர்க அவரது புகழ்!

சனி, 10 அக்டோபர், 2009

இசை வாழ்த்து!

அழுத்தமாய் அணைத்த வீணையின் குரலே
மெல்லியதோர் முத்தமிட்ட மேற்கத்திச் சந்தமே
தென்றலாய் வருடிய குழலின் சுவாசமே
நெஞ்சு நெகிழ்வித்த நாதஸ்வர நாதமே
தேனாய் இனித்த தேவதையின் குரலே
கண்ணீரைக் கொள்ளையடித்த கணநேர நிசப்தமே
இறையே இசையே எனைத் தொலைத்தே
இயலும் இயல்பும் மறந்து நின்றேன்!

சனி, 3 அக்டோபர், 2009

விஞ்ஞானம்

கபடமே அறியாத அதிகாலை பனிக்காற்றும்
தாமரை உடையணிந்த அழகியாய்ச் சித்திரைக்குளமும்
காவலுக்கு ஆயுதம் தாங்கி கருப்பனும் காளியும்
கள்ளமற்ற உள்ளங்களின் எல்லையற்ற மகிழ்ச்சியும்
ஈரறுபது நிழற்துளிகளாய் மாறி நின்று
அனுவறுத்த துளிகள் மேல் பயணமாம்
வரவேற்றுத் தனிமையறுக்கும் நாகரீகப்பெட்டி
ஒரே விலை பதினைந்தாயிரம் ரூபாய்!

வெள்ளி, 2 அக்டோபர், 2009

அலையின் அனுபவம்

கரை தொட்டுக் கண நேரம் கண்ணயர
திரை கடலில் மன்றாடி நான் தவிக்க
கரை நின்ற காதலன் காதலியைக் கொஞ்சக்கேட்டேன்
தன் காதல் எனைப் போல் விடா முயற்சி கொண்டதாம்...

ஓடியது ஓடி வலுவும் வழிந்தோடி
உருவிழந்து தவித்து சோர்ந்து நான் சாய
சுனாமி வருவதாய் எச்சரித்தான் விஞ்ஞானி
விலகும் நீர் வெகுண்டு வெள்ளமாய் மாறுமாம்...

அடி மேல் அடிபட்டு அடி சிதைந்து
நுரைகளாய் வெடித்து நான் வெம்பிச் சிதற
மண் வீடு கட்டிய மழலை சிரித்தாள்
கண்ணீர்த் தடத்தில் ஓர் கனவுக்கோட்டை...

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மழைக்காதலி...

மைநிறை பேனா காகித்தக்காதலி தேட
பைந்தமிழ் வர்ணனையின் கருவாய் கனவுக்காதலி...
எண்ணத்துளி கோர்த்து வண்ணம் வடிக்குமுன்
எங்கிருந்தோ காகிதம் வந்ததோர் ஈரத்துளி...
ஒரு துளி பல துளிகளாய் மாறி
ஒரு கோடித்துளிகளென வந்தாள் மாரி...
விழி உயர்த்திப்பார்த்ததில் கண்களில் நீர்
கண்ணீரல்ல கண்களை வருடிய நீர்!
எண்ணங்களின் ஆழங்களில் ஓர் தேடல்
கண்களை மூடிக்கண்மணி குணம் நாடல்...
பார் பரவும் மழை போலே
உலகை அறிய வேண்டும் அவள்...
வடிவங்கடந்த வடிவான நீர் போலே
வடிவழகின் இலக்கணமாக வேண்டும் அவள்...
கதிர் பிரித்த கடைக்கோடி சிகப்பாய்
வெட்கம் கொள்ள வேண்டும் அவள்...
புல்வெளி மேல் தூவும் சாரலாய்
மென்மை கொள்ள வேண்டும் அவள்...
அடர் மழை ரீங்காரம் போலே
மனம் வருட வேண்டும் அவள்...
உயிரூட்டும் வான் நீர் போலே
தாய்மை கொள்ள வேண்டும் அவள்...
உன் நகலாய் ஒருவள் எதற்கு
உடல் தீண்டி உயிர் தொடுபவளே... மழையழகே...
நீயே வா என் காதலியாய்
என்னில் நீ என்றும் இருக்க!


புதன், 18 மார்ச், 2009

ஆசையில் ஓர் கடிதம்...

ஓடும் வாகனத்தின் சக்கரங்கள் போல் நகர வாழ்க்கை மாறி, தொடக்கத்தையோ முடிவையோ தெளிவாய் தரம் பிரிக்க முடியாத சுழற்சிக்குள் நாம் சிக்கி கொண்டு விட்டதை நான் விளக்கி கூறவே அவசியம் இல்லை. அநேகமாய் மற்றோர் வாகனத்தின் மற்றோர் சக்கரமாய் தான் நீங்களும் ஓடிக்கொண்டிருப்பீர்கள். ஓட்டத்தின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க மெதுவாய் செயல்படும் எதுவுமே நம் விரும்பும் விஷயங்கள் பட்டியலில் கடை கோடியில் கூட இடம்பெறுவதில்லை. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் - கடிதங்கள்.

குழந்தை பிறந்தது, புதியதாய் எடுத்த மாங்காய் ஜரி போட்ட அரக்கு புடவை, கணவர் அலுவலகத்தில் கிம்பளம் வாங்கும் கிட்டு மாமா, இரட்டை வட சங்கிலியில் முத்துக்கள் சேர்த்து கட்டியது, பக்கத்து வீட்டு சரோஜா மகள் ஓடி போன கதை என்று அவரவர் எண்ணங்களை அவர்கள் கைகளினாலேயே புரியும்படியோ, புரியாத மாதிரியோ எழுதி அனுப்பிய நாட்கள் கிட்ட தட்ட மறைந்தே போய் விட்டன. மறந்தே போன ஒரு சொந்தத்தை ஒரு கிலோமீட்டருக்கு சற்றே குறைந்த தூரத்து சொந்தத்தின் திருமண விழாவில் சந்திக்கையில் "உங்களுக்கு நான் கடிதாசி போட்டுட்டே இருந்தேனே... கெடைக்கலையா... தபால் துறையே சரியில்ல" என்று பழியை அரசாங்கம் மேலே போட்டு நைசாக நழுவும் வசதியும் கூட இப்பொழுது கிடையாது. இதே கதையை இன்று கூறினால் "யாருக்கு யாரோ" சாம் ஆண்டர்சன், கனடாவில் இருக்கும் தன் பழைய காதலி மஞ்சுவிற்கு கடிதம் எழுதியதாய் கூறும் போது பார்பவர்கள் விழுந்து புரண்டு சிரிப்பதை போல் சிரிப்பர்.

"நம்ம கோபால் இருக்கானே... எப்பேர்பட்ட கிறுக்கல் கடிதாசியா இருந்தாலும் தெளிவா படிச்சு சொல்லிருவான் அவ்ளோ கெட்டிக்காரன்", "என் பொண்ணு மல்லிகா முத்து முத்தா எழுதுவா... அவ எழுதுறத பாக்கவே கடிதாசி போட சொல்லுவோம்னா பாத்துக்கோங்களேன்" என்ற ரீதியிலான பாராட்டுக்களும் கடிதங்களுடன் சேர்ந்தே மடிந்து போனது வேதனைக்குரிய விஷயம். "என் பைய்யன் ஈமெயில் எழுதுறதுல எக்ஸ்பர்ட்" என்று பாராட்டினால், அதை கேட்பவர் தன் குடும்பத்திலிருந்தே மூன்றரை அடி உயரத்தில் ஒரு அங்குல தடிமனான கண்ணாடி அணிந்த ஒரு சிறுவனை அழைத்து... "இவன் கூட ஈமெயில் அனுப்புறதுல எக்ஸ்பெர்ட் தான். கண்ணா... அந்த தாத்தாக்கு உன் ஈமெயில் ஐ.டி சொல்லு..." என்று ஜாடையாய் குத்திக்காட்டுவார். அந்த வாண்டும் பதிலுக்கு "ஜிமெயிலா, யாகூவா" என்று கேட்டு ஏகத்திற்கும் நெளிய வைத்து விடும்.

இவை அனைத்தையும் தாண்டிய ஒரு சிறப்பு கடிதங்களுக்கு உண்டு - உயிர். அளவு நிர்ணயிக்கப்பட்ட ஒரு தேசவரைக்குட்பட்ட (ஆங்கிலத்தில் இன்லாண்டு) கடிதத்தில் அளவு கடந்த பாசத்துடன் மடிக்க கொடுக்கப்பட்டிருக்கும் பகுதியில் கூட விடாமல் எழுதப்பட்ட நுண்ணிய எழுத்தில் தெரியும் அம்மாவின் அன்பு... குழம்பிய நிலையில் எழுதப்பட்ட கடிதத்தில் இருக்கும் திருத்தங்கள்... பாரத்துடன் எழுதப்பட்ட கடித்தத்தில் முத்து முத்தாய் காய்ந்து நிற்கும் கண்ணீர் துளிகள்... இப்படி கடிதத்தின் ஒவ்வொரு குணத்திற்கும் பின்னால் ஒரு கதை உண்டு, கவிதை உண்டு. என்ன தான் போல்டு, இடாலிக்ஸ், அண்டர்லைன், ஸ்மைலீஸ் என்று உணர்வை பிரதிபலிக்க வழிகள் இருந்தாலும் அவை அனைத்துமே அலங்கரிக்கப்பட்ட எழுத்துக்களாயிருக்குமே தவிர ஒரு போதும் உயிர் பெற்று நம்மிடம் பேசுவதில்லை. என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு எதிர்பாரா தருணத்தில் வந்த கடிதத்தை பல வருடங்கள் கழித்து பரண் மேல் இருந்து எடுத்து பக்குவமாய் பிரித்து படிப்பதிலிருக்கும் சுகம் தனி தான்... அதை ஏன் நம் நெருக்கமானவர்களுக்கு மறுக்க வேண்டும்?

பி.கு: இவை எல்லாம் கூறி விட்டு நீ இணையத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு... கடிதம் எழுத தொடங்கலாம் என்றிருக்கிறேன்... தாயிற்சிறந்த கோவிலும் இல்லை... தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனால் அவர்களிடம் இருந்து தொடங்கலாமென திட்டம்... :)

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

கலைமாமணி

தமிழக கலை உலக பிரமுகர்களுக்கு நம் மாநிலத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருது என்று கலைமாமணியை கூறலாம்... எத்தனையோ கலை மேதைகளுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்டு வந்த விருது, இப்பொழுது இலவச தொலைக்காட்சிகளை போல் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கெல்லாம் வழங்கப்படுவது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரிய விஷயம். இம்முறை கலைமாமணி விருதுகள் பெற்றவர்கள் பட்டியலை சற்றே அலசி பார்ப்போம்...

தமிழ் எழுத்தாளர் மாதவன்; கவிஞர் சிற்பி; பாடகர் மகாராஜபுரம் ஸ்ரீனிவாசன்; ட்ரம்ஸ் சிவமணி; தவில் வித்வான் ராமநாதன்; பாரதனாட்டியக்கலைஞர்கள் சங்கீதா கபிலன், ஐஸ்வர்யா தனுஷ்; நடிகர்கள் பரத், பசுபதி, மீரா ஜாஸ்மின், நயன்தாரா, அசின்; இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்; கலை இயக்குனர் P.கிருஷ்ணமூர்த்தி, இயக்குனர் சேரன்; வயலின் கலைஞர் எம்பார் கண்ணன்.

இதில் திரைத்துறை சாராதோரை பற்றி எனக்கு தெரியாது. தெரியாதவர்களின் திறமை குறித்து விமர்சிப்பதும் முறையாகாது. குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய பெயர்களில் சில - ஐஸ்வர்யா தனுஷ், மீரா ஜாஸ்மின், பரத், நயன்தாரா, அசின், ஹாரிஸ் ஜெயராஜ்... சூப்பர் ஸ்டாரின் மகள் என்பதை தவிர ஐஸ்வர்யாவுக்கு எந்த விதமான தகுதியும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை... மீரா ஜாஸ்மின் நல்ல நடிகை என்பதில் எனக்கு ஐயமில்லை... ஆனால் கலைமாமணி வழங்க அவர் என்ன செய்தார் என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை... இதே விவாதம் அசினுக்கும், நயன்தாராவுக்கும் பொருந்தும். வளர்ந்து வரும் நடிகர்களில் குறிப்பிட்டு சொல்ல கூடிய நடிகர்களில் பரத் ஒருவர்... ஆனால் அதற்குள் கலைமாமணி என்று அவரை அழைப்பது நிச்சயமாக பொருத்தமானது அல்ல. ஹாரிஸ் ஜெயராஜ்... இவரை பற்றி எனது ஆங்கில பதிவேட்டில் "காப்பி கேட்" என்ற தலைப்பில் ஓர் பதிவு வெளியிட்டிருந்தேன்... அப்படி குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பாரபட்சமின்றி மற்ற இசை தொகுப்புகளில் இருந்து 'திருடி' தன் சொந்த படைப்பை வெளியிடும் இவர் கலைமாமணியா?

பசுபதி போன்ற ஒரு நடிகரும், சேரன் போன்றதொரு இயக்குனரும், ட்ரம்ஸ் சிவமணி போன்றதொரு கலைஞரும் விருது வாங்கும் மேடையில், இவர்களுக்கும் சமமாக விருது வழங்கி கௌரவிக்கப்படுவது உண்மையான திறமைக்கும், கடின உழைப்புக்கும் நேரும் அவமானம் என்பதே ஏன் தாழ்மையான கருத்து! விருது வழங்கும் அளவுக்கு யாரும் ஏதும் செய்யவில்லை எனில் யாருக்கும் விருதே வழங்காமல் இருக்கலாம். உண்மையிலேயே ஒரு விருதுக்கு முற்றிலும் தகுதியான ஒருவருக்கு வழங்கப்படும் போது தான் அந்த விருதை பெறுபவருக்கும் பெருமை, அந்த விருதுக்கும் பெருமை...

திங்கள், 23 பிப்ரவரி, 2009

யார் ஜனநாயகவாதி?

இந்த ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியக்கொடி ஆங்காங்கே தென்பட்டது என்றே சொல்லலாம்... பொதுவாக மேற்கத்திய நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த விழாவில், இந்த முறை இந்தியர்கள் விருதுகள் தந்து கௌரவிக்கப்பட்டது நிச்சயமாக நம் நாட்டிற்கு பெருமை என்பதில் ஐயமில்லை...

விருது பெற்ற ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இந்தியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்தை சேர்ந்த இசை புயல் ரஹ்மான் இந்த முறை இரண்டு விருதுகள் பெற்று இரட்டிப்பு மகிழ்ச்சி சேர்த்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜனநாயகவாதிக்கும் நீ இது வரை பேசியதற்கும் சம்மந்தமே இல்லை என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் உங்கள் எண்ணம் நூறு சதவிகிதம் சரி... நான் பேச வந்த விஷயம் ஆஸ்கார் விருதுகள் சம்மந்தப்பட்டது என்றதால் விருது பெற்றவர்களை பாராட்டி விட்டு ஆதங்கப்பகுதிக்கு வரலாம் என்றிருந்தேன். அவ்வளவே... :)

விருது வாங்கிய நம் இசை புயலுக்கு நமது மாண்புமிகு முதல்வர் தெரிவிக்கும் வாழ்த்து -

"I consider the awards won by Rahman as precious jewels in the crown of one of our own with pride. I join 100 crore Indians and six crore Tamils in showering flowers of appreciation with pure minds on this scion from a minority community"

ஒரு வாழ்த்து தெரிவிக்கப்படும் பொழுது கூட ஜாதி, மதம், இனம், சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரிவினைவாத நோக்கத்தோடு வாழ்த்து கூறும் இவர் ஒரு பகுத்தறிவாளி, சீர்திருத்தவாதி, ஜனநாயகவாதி. இன்னும் ஒரு படி மேலே சென்று கூறினால் ரஹ்மான் பிறப்பினால் இஸ்லாமியர் அல்ல என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு உண்மை. அப்படி இருக்கும் பொழுது அதை ஒரு தனிப்பட்ட மேற்கோளாக காட்டுவதே அர்த்தமற்றது. தமிழக மக்கள் எதை கூறினாலும் அதை கிரகித்து கொள்ளும் சக்தி உடையவர்கள் அல்ல என்றே முடிவு செய்து விட்டார் போலும். அவர் முடிவை முற்றிலுமாய் ஆமோதிப்பதை போல் நாமும் அவர் கூறும் எந்த முன்னுக்கு பின் முரணான விஷயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மக்களின் 'எனக்கென்ன' மனப்பான்மையை புரிந்து கொண்டு அவதூறு பிரச்சாரங்களும், மதவாத அரசியலும் செய்பவன் ஜனநாயகவாதி என்று நாம் விளக்கம் எடுத்துக்கொண்டால் இன்றைய தேதிக்கு இவரை மிஞ்ச ஜனநாயகவாதி கிடையாது.

மன்னர் காலத்தில் தொடங்கி இன்று வரை நாம் நசுக்கப்படுவது பிரிவினைவாதம் எனும் மத யானையால் தான். சரித்திரம் தெரிந்திருந்தும், தார்மீகம் புரிந்திருந்தும் நாம் இந்த பிரிவினைவாதத்தை தூக்கி எரிந்து தேச முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்காததே வருத்தத்திற்குரிய விஷயம்!

சனி, 21 பிப்ரவரி, 2009

எது நீதி?

இந்தியாவின் தலையாய சமூக பிரச்சனைகள் என்று சமூகவியல் பாடங்களில் காலம் காலமாக அச்சுகள் மாறியும், மாறாமல் தொடரும் பட்டியல் ஒன்று உண்டு. ஜனத்தொகை பெருக்கம், வேலையில்லா திண்டாட்டம், வறுமை என்று நீளும் அந்த பட்டியல் நடைமுறைக்கேற்ப மாற்றப்பட்டதும் இல்லை. மாற்றப்படும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை... கல்வித்தரம் சம்மந்தப்பட்ட என் ஆதங்கத்தை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு கூற வந்த விஷயத்தை கூறி விடுகிறேன்...

இந்தியாவின் தலையாய சமூக பிரச்சனை எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதிலளிப்பீர்கள்? மக்கள் தொகை? சீர் கெட்ட அரசியல்? ஐ.டி? (சிலர் இதை கூட சமூக பிரச்சனையாகவே கருதுகிறார்கள் :)) இவை அனைத்தையும் மீறிய ஒன்று இருக்கிறது - நீதி. "காலத்தாற் செய்த உதவி" என்ற வள்ளுவரின் கூற்று உதவிக்கு பொருந்துவதை விட நீதிக்கு இரண்டு மடங்கு பொருந்தும், பொருந்த வேண்டும். ஒரு அநீதி இழைக்கப்படுகையில் அதன் தண்டனை கடுமையானதாகவும், உடனடியாகவும் இருந்தால் அந்த குற்றம் மறுபடியும் நடக்க கூடிய வாய்ப்பு பன்மடங்கு குறைகிறது. அதே தண்டனை இழுத்தடிக்கப்பட்டு, வழக்கு வலுவிழந்து, வழக்கு நடத்துபவன் உருவிழந்து தவிக்கும் வரை நடந்தால் அங்கு வழங்கப்படுவது நீதியும் அல்ல, அதை வழுங்கவது ஒரு நீதி மன்றமும் அல்ல. மேலை நாடுகளில் மக்கள் விழிப்புணர்வு அதிகம், சராசரி குடிமகனின் சமூக அக்கறை அதிகம் என்றெல்லாம் கருத்துகள் நிலவினாலும் உண்மை காரணம் அவைகளல்ல. பயம்... தண்டனை பயம். ஒரு வழக்கு நீதி மன்றங்களுக்கு செல்லுமேயானால் அந்த வழக்கு ஆறு மாதங்களுக்குள் முடிந்தாக வேண்டும். அதே போல் ஒரு சிறிய சாலை விதிமுறை மீறலில் தொடங்கி அனைத்து குற்றத்திற்கும் உடனடியாய் தண்டனை வழங்கப்படுகின்றது. இதன் பிரதிபலிப்பே மக்களின் தேர்ந்த நடத்தையாகவும், சமூக பொறுப்பாகவும் வெளியுலகிற்கு தெரிய வருகிறது.

இது இந்தியாவில் நடக்குமா? நடக்க வாய்ப்பிருக்கிறதா? சற்றே சிந்தித்து பார்ப்போம்... முதல் தடங்கல் - சீர்கெட்ட அரசியல். அரசியல்வாதிகளே சட்டம் இயற்றுகிறார்கள்... அவர்களே அதை மீறவும் செய்கிறார்கள்... ஆகையால் மிகக்கடுமையான நடவடிக்கைகள் கொண்டு வரப்படுவது அரிதினும் அரிது. அப்படியென்றால் அரசியல் தானே முழு முதல் சமுதாய பிரச்சனையாக கருதப்பட வேண்டும்? இல்லை... ஏனென்று தொடர்ந்து பாருங்கள். இரண்டாம் தடங்கல் - நீதிபதிகள்/வழக்கறிஞர்கள். ஒரு அரசியல்வாதி தவறு செய்பவனாக இருந்து வக்கீல்களும், நீதிபதிகளும் நீதியை நிலைநாட்டுவதில் குறியாக இருந்தால், அந்த அரசியல்வாதி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நியாயமில்லை. ஆனால் இதுவாவது நடைமுறைக்கு சாத்தியமானதா என்றால் சாத்தியமே... ஆனால் நிச்சயமாய் அதை நோக்கி நாம் பயணிக்கவில்லை. நீதிமன்றத்தினுள் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சட்ட அறிஞர் மற்றும் சட்ட பேராசிரியரான சுப்ரமணிய சுவாமி நீதிமன்ற வளாகத்தினுள் சக வழக்கறிஞர்களால் தாக்கப்படுகிறார். அதை செய்த வழக்கறிஞர்களை கைது செய்ய வந்த போலீஸார் மீது கல் வீச்சு... சட்டக்கல்லூரியில் ஜாதி வெறி தாண்டவமாடி ஒரு மாணவனை சக மாணவர்கள் போலீஸார் முன் இரும்பு தடிகளால் அடித்து சிதைக்கின்றனர். இவர்களா நாளைய வழக்கறிஞர்கள், நீதிபதிகள்? நீதியை நிலை நாட்ட ஒரு குற்றவாளி? இதுவல்லவோ ஜனநாயகம்!

வியாழன், 19 பிப்ரவரி, 2009

நரமாமிசபட்சணி

ருசி அறியாப்பசி தீர்க்க
நிசி தோற்கும் நெஞ்சங்கொண்டு
தொப்புள் கொடியறுத்துத்தின்பவன் மனிதனோ
மொட்டில் உயிரிழக்கச்செய்வதும் மனிதமோ!

பனிப்பெண்ணே வருக!

தூய்மையின் இலக்கணமே தூய வெண்பனித்துளியே
சில்லிடும் சித்திரமே சிலிர்க்கும் நீரோவியமே
மௌனமாய் பொழிபவளே மென்மையின் மறுபெயரே
ஆண்டிரண்டு காக்கவைத்து அரவணைத்த அதிசயமே
உன்னிடத்தில் நானும் என்னிடத்தில் நீயும்
உணர்வில் குளிர்ச்சி உடம்பிலோ குளிர்
நீயிருக்கும் இடமறிந்தும் மெய்வருடும் நொடியறிந்தும்
உனை நாட மனமில்லை நடுங்குமெனுடலுக்கு
வெள்ளிச்சிதறலே வெப்பமறுத்துக்கொல்பவளே
மனதிற்கினியவளே மந்தம் புகுப்பவளே
மாயக்கண்ணனவன் மனதிலென்ன கொண்டானோ
மதுரமும் விஷமும் எதிலும் உண்டென்றானோ?

இலையுதிர் காலம்!

குங்குமச்சிகப்பில் கோலமிடும் மஞ்சள்
வரப்போகும் பட்டினியால் ஓலமிடும் உயிர்கள்
இலையுதிர் காலம்!

ஏமாற்றம்

நான்கே மனிதரும் நாலாயிரம் கொசுக்களும் சாட்சி கூண்டிலிருக்க
விநாடி முள்ளுடன் பொருமையிற்போட்டி...
தோல்வியும் விரும்ப முடியா விருப்பமற்ற போட்டியில்
நோகக்காரணங்களையும் பழிக்க மனிதர்களையும்
சோகக்கோலம் பூண்டு தேடுமென் மனதும்
தோற்று பழக்கமற்ற இறுமாப்பில் விநாடி முள்ளும்...

தாயகத்திலிருப்பதுணர்த்த ஈராயிரம் காரணமிருந்தும்
துவாரபாலகர்கள் ஏனோ இன்முகம் காட்டவில்லை
உட்கார வசதி மறுத்த சர்வதேச விமான நிலையமும்
உறக்கம் மறக்க உற்சாக பானமுண்ட ஓட்டுனனும்
உறக்கத்திற்கு காவலை காவு கொடுத்த காவலாளிகளும்
உலகத்தை சுருக்க உள்ளங்கை சுருக்கிய இரயில்துறையும்
உள்ளந்நிறை உற்சாகத்தை உருவின்றி சிதைத்து விட
போட்டியிடத்தான் செய்கிறோம்...
விநாடிகளை நினைவுகளால் தள்ளும் நானும்
விநாடியின் விளக்கம் மறவா விநாடி முள்ளும்!

தனிமைக்கவிதை

கவி படைக்க அமைதி தேடி
மனித வாடை முற்றும் மறந்து
அமைதி தனையே அணியாய் பூண்டு
சிந்தனைக்கு வடிவளித்து சிற்பமாக்க முனைந்தேன்...

ஜகத்தின் அமைதிக்குஞ்சேர்த்து அகத்தின் ஓலமொலிக்க
அர்த்தமற்று வாழும் எனைக்கண்டது நகைக்க
விதேசத்திலமர்ந்து விண்ணை வெறித்த கண்களுள்
பூமிப்பந்தின் மறுபுறமிருக்கும் தாயுந்தாய் நாடும்...

தாக்கத்தை வெளிப்படுத்த தன்னந்தனியே வந்தமர்ந்து
தனிமையுணர்ந்து தனிமயாலேயே தாக்கப்பட்டுத்திரும்புகையில்
கவியெழுதும் முயற்சி வெல்லத்தான் செய்ததுகண்ணீர்த்துளிகள் மைத்துளிகளாய்... கண்ணீர்ச்சிதரல்கள் கவிதைகளாய்!

கடற்கரை

அலை நனைத்த கடற்கரையில்
அகம் தொலைத்து நடை தொடர்ந்தேன்...
கால்கள் இரண்டே ஆயினும்
அவை எனதே ஆயினும்
வண்ணத்து பூச்சி கொண்ட
வண்ண திட்டுக்களென தடங்கள்!
ஒரு பூச்சி இறகுறைந்தும்
ஒவ்வொன்றும் ஓர் கவிதை
சோகத்தில் சொந்தங்கள் சிரித்த அடி
மகிழ்ச்சியில் நடை மறந்த அடி
மங்கையர் பார்க்க மன்மதனென ஓரடி
பரபரப்பில் எனை மறந்த நூறடி
அடி மேல் அடி தொடர்ந்தும்
அடி மேல் அடி வைத்தேன்
அலை நனைத்த கடற்கரையில்
அகம் தொலைத்து நடை தொடர்ந்தேன்...

உலகப்பொதுமறை!

மனிதம் கொன்று
மனிதர் வளர்த்தல் வேண்டுமோ?
மனிதம் கொன்றவனை
மனிதனென்றும் அழைத்தல் வேண்டுமோ?

குண்டு வெடிப்பு!

மக்கள் நிறைந்த ரயில்கள்
சந்தர்ப்பவாதிகளின் சந்தோஷம்
மனிதத்தின் மரணம்!

காதலர் தினம்!

ஆயிரம் மைல்கள் கடந்திருக்கும் கணவன்...
அறிமுகமில்லா இளைஞன் வீடேறி பூங்கொத்தளித்தான்...
காதலர் தினம்!

கவியுரையாடல்

கே: காற்றை கண்டதும் ஓடையின் முகத்தில் ஏன் இவ்வளவு சுருக்கங்கள்?

ப: இதழ் வருடும் மாயக்காதலனை காண இயலாக்கோபமோ சோகமோ
வானெங்கும் உள்ளக்கள்வன் ஓடித்திரிகையில் சிறைப்பட்ட இயலாமயோ சிந்தனையோ!

வல்லுனன்

வரவுகளின் பால் காதல் கொண்டு
உறவுகளின் அருமை மறந்து - உடல்
நலம் கெடுத்து, புறம் பெருத்து
தலம் மறந்து வாழ்பவன் வல்லுனனோ!

பொன் செய் மனத்துடை அகமகிழ்ந்து
தன் சுற்றம் கிட்டமர்த்தி - மகிழ்ச்சி
பொங்கும் வாழ்வுடை மாந்தன் இழியவனோ
தங்கும் உயிரற்ற காகிதம் அளவிற்குறைந்ததால்!

அமெரிக்கா!

நிலை குத்தி சிந்தனையில் ஆழ்ந்த கண்கள்...
கணிணியின் துல்லியத்தில் மனம் வருடும் இசைஞானி...
அமெரிக்கா!

புதுமைப்பெண்

பட்டாடை சரசரக்க
பயிர்ப்போங்கி பதம் பார்த்த
பாரம்பரிய பதுமைகளாம் பாரதப்பெண்கள்...
போதையில் புகை சூழ
ஆடவர் புடை சூழ
ஆடல் பாடலென்ற பெயரில்
பாதகம் செய்வதை காண
நல்ல வேளை புரட்சிக்கவி இப்புவியிலில்லை!

வெறுமை...

சொந்தக்களுக்காக கவலை பெற்று
சுகமாய் வாழ பணம் தேடி
சிந்திக்க இடமில்லா வேகம் பூண்டு
சிரிப்பு மறந்த முகங்கள் கண்டு
பெற்றதும் தேடியதும்
பூண்டதும் கண்டதும்
அமைதி கொன்றதாயுறைத்தான்...
அமைதியின் தீவிரம் மறக்க
அவசரத்தின் உதவி நாடியவன்!

தேடல்

மெல்லிசையை பிரசவித்து
பரவசத்தில் கண்ணீர் மல்கி
இலை வருடும் காற்றாய்
தனை வருடிய உன் நினைவை
மௌன மொழியினில் பறைசாற்றியது
தந்தி அறுந்த வீணை!

கருமி

பனி போர்த்திய இளவெயில்
பசுமை படர்ந்த புல்வெளி
முடிவிலியாய் தொடரும் தார்ச்சாலை
இராகம் பயிலா கானக்குயில்கள்
அனைத்தும் அருளினும் 'நீ' கருமியே
இரசித்து மகிழ நேரம் அருளாததால்!

புத்தாண்டு

கிட்டத்தட்ட முழுவதுமாய் காலி ஆகி விட்டிருந்த அந்த அலுவலக வளாகத்தினுள் ப்ரீத்தியின் பேச்சுக்குரல் மட்டுமே நிசப்தத்திரையை கிழித்துக்கொண்டிருந்தது.
"ஒ.கே சார். இந்த வாரத்துக்குள்ள முடிக்க ட்ரை பண்ணறேன். அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர்..." பெருமூச்சுடன் தொலைபேசியை துண்டித்து விட்டு கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தாள். வருடத்தின் கடைசி நாளில் கணினிக்குள் அடைபட்டுக்கிடப்பதும், அதை உறுதி செய்ய தொலைபேசியில் அழைத்த மேலாளரும் எரிச்சல் மூட்டினாலும், அதை விட பெரிய பாரமொன்று அவள் மனதை அழுத்திக்கொண்டிருந்தது. மறுதினம் பிறக்கவிருந்தது புத்தாண்டு மட்டும் அல்ல, ப்ரீத்தியின் இருபத்தி நான்காம் வயதும் தான். எப்பொழுதும் இந்நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் வலம் வருபவள் முகத்தில் இம்முறை சோக ரேகைகள் மட்டுமே இழையோடின. அமெரிக்க வாழ்வின் தனிமை நன்றாகவே பழகி இருந்தும் ஊரே ஆரவாரமாய் கொண்டாடும் தன் பிறந்த நாளில் தனித்திருப்பதை ஏனோ அவள் மனம் ஏற்கவில்லை.

"ஆதி கூட விட்டுட்டு போயிட்டானே" என்பதே அவளது பிரதான கவலை. வருட இறுதியில் விடுமுறையில் செல்வது அமெரிக்கர்களுக்கோ அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கோ புதிதல்ல என்ற போதும் ஆதி அவளை தனியே விட்டுச்சென்றதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆதி - ஆறு மாதங்களுக்கு முன் ப்ரீத்தி அமெரிக்கா வந்த போது சூழ்நிலை காரணமாய் அவனுடன் தங்க வேண்டிய கட்டாயம். காலப்போக்கில் அந்தக்கட்டாயம் இவளுக்குள் காதலாய் பூத்திருந்தது. பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளாத போதும் இருவருக்குமே தெரிந்த ரகசியம் அது. "யார் எப்பிடி போனா எனக்கென்ன... நான் சந்தோஷமா தான் இருப்பேன். இன்னைக்கி இளையராஜா பாட்டு கேப்பேன். நல்லா சமைச்சு சாப்பிடுவேன்... அடுத்த வருஷம் என்னல்லாம் பண்ணனும்னு யோசிப்பேன்... ஆனாலும் ஆதி இப்பிடி பண்ணிருக்கக்கூடாது..." எங்கு சுற்றியும் அவள் மனது அந்த வாக்கியத்தை மட்டும் தாயைத்தேடும் குழந்தை போல் மறக்க மறுத்தது. வேண்டா வெறுப்பாய் வீடு வந்தவளுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. "என்னது கதவு இப்பிடி திறந்திருக்கு... ஆதி கூட ஊர்ல இல்லையே... ஐயய்யோ" என்று பதட்டமாய் உள்ளே நுழைந்தவள், காற்றில் கருப்பு மை கலந்தது போன்ற இருட்டில் கைகளை சுவற்றில் படர விட்டு விளக்கை உயிர்ப்பித்தாள். கூடத்தின் நடுவில் கேக் சகிதமாய் உட்கார்ந்திருந்த ஆதியை கண்டு சற்றே திருக்கிட்டவள் "ஆதி... நீ என்னடா பண்ணற இங்க" எனக்கேட்டாள். "உன்ன விட்டுட்டு போயிட்டேன் னு நம்பிட்டல்ல" குறும்பாய் கண்ணடித்து சிரித்த அவனிடம் ப்ரீத்தி "நீ ஒண்ணும் என் கூட பேச வேணாம் போ" என பொய்க்கோபம் காட்டினாலும், அவள் கண்ணோரத்தில் சாகசம் செய்து விழாமல் தப்பிய கண்ணீர் முத்து உண்மையை உரக்கக்கூறியது.

மெல்லத்திறந்தது கதவு

மறையத்தொடங்கிய ஆதவனின் பொன்னிறக்கதிர்கள் முயன்றும் நுழைய முடியா இருட்டறையில் இருண்ட நெஞ்சமொன்றும் இருப்பதன் அறிகுறியாய் ஓர் அழுகைக்குரல். மூடிய கதவும், இருள் சூழும் இருளும், முட்டித்தெறித்த கதறலும் அப்பாவையின் வலி உயிர் வரை ஆழ்ந்திருப்பதை உணர்த்தின. முப்பது வயது தாண்டியும், முடிகளில் சில வெள்ளிகள் முளைத்தும் மனைவியாகி முழுமை பெறாத முதிர்கன்னியின் மனச்சுமையை சமுதாயம் ஏனோ புறக்கணித்தே விடுகிறது. காதலித்தவனை காரணங்கண்டு பிரிய வைத்து, அக்காரணத்தின் காரணமாகி, நம்பிக்கையை இழக்க வைத்து, ஆயிரம் பேர் சுற்றத்திலும் தனிமைச்சிறையில் அடைய வைத்து கை கொட்டிச்சிரிப்பதும் ஏனோ அதன் பண்பாடும் ஆகிப்போனது. ஆண் போல் இருப்பதாய், அழகிற்குறைவதாய் ஆயிரமாயிரம் காரணம் கேட்டு தன்னையே வெறுத்தவளின், வெறுப்பவளின் வேதனை பொங்கும் வாழ்கையை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

இருளும் இன்னலும் மட்டுமே நிறைந்த அத்தருணத்தை இரவிற்பூத்த மின்னல் கொடியாய்க்கலைத்தது சிணுங்கிய அவள் கைத்தொலைபேசி. கண்ணீர்த்துளி வழியே அழைப்பவன் பெயர் மங்கித்தெரிய மனதை இறுக்கி மூடி வாய் திறந்தாள். இதயத்தரையில் இருந்து அவன் மேல் ஈர்ப்பிருந்தும் இன்முகம் காட்ட ஏனோ இயலவில்லை அவளுக்கு. பயம் - தன்னையே நம்ப மறுக்கும், வாழ்க்கையில் தடுமாறித்தோற்ற, தனிமைப்பட்ட, தனித்து விடப்பட்ட ஒரு தாரகைக்கே உண்டான பயம். பல முறை உடைக்கப்பட்டு ஒட்டப்பெற்ற நெஞ்சம், மற்றுமோர் விரிசல் தாங்காதெனும் கலவரம். தனித்தும் தோற்க்கக்கூடாதெனும் அவள் வைராக்கியம் ஏனோ சில நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை. அன்பை வார்த்தைகளாக்கி, அரவணைப்பை வாக்கியங்களாக்கி, தாய்ப்பாலின் நேர்மையுடன் "எனை மணந்து கொள்வாயா?" என ஏக்கமாய்க்கேட்ட அவன் குரல் திறந்தது மூடிய அவள் அறைக்கதவை மட்டுமல்ல, மூடப்பட்ட அவள் மனக்கதவையும் தான்.

புதன், 18 பிப்ரவரி, 2009

தமிழ் தந்தருள்வாய்...

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா


இறை வாழ்த்துடன் படைப்புகளை தொடங்குவது நமது பண்பாட்டில் ஊறிய ஒரு விஷயம். இதோ... எனது பிரார்த்தனைகளை வினை தீர்க்கும் விநாயகனிடம் சமர்பித்து விட்டேன்... தடைகள் நீங்கட்டும்... தமிழ் வெல்லட்டும்...