சனி, 17 அக்டோபர், 2009

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தெள்ளிய தீபமது திக்கெட்டும் ஒளிர
மீளாத் துயர்களவை இருளுடன் விலக
மத்தாப்பு கண்ட மழலையின் சிரிப்பாய்
மனமது மகிழ்ந்து வாழ்வது இனிக்க
பொன்னாய் ஒளிரட்டும் இந்தத் திருநாள்
தேனாய் இனிக்கட்டும் இனி வருநாள்!

வியாழன், 15 அக்டோபர், 2009

பணம்

பித்து முற்றிப் பிறிதொரு சிந்தை மறைத்து
எத்திக்கும் செல்லத் துணிந்தேன் எல்லை மறந்து
மானத்தின் மதிப்பும் நேரத்தின் அருமையும்
மண்ணிற் புதையுண்டு புதையும் உடல் பெருத்து
ஞாயிறு திங்களுக்கும் திங்கள் ஞாயிறுக்கும்
பேதம் மறந்து நொந்துச் சேர்த்தேன்
மாதம் எண்பது ஆயிரம் காகிதங்கள்...

அகராதியில் ஒரு மாற்றம் தேவை...

பணம், புகழ் மட்டுமல்லாது பல ஊர்களிலும் நாடுகளிலும் கோலோச்சிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே... பணம், புகழ் என்ற வட்டத்தைத் தாண்டி பலர் மனதை இந்த மனிதர் கொள்ளையடித்த காரணம் - வெள்ளித்திரைக்கு அப்பாற்பட்ட அவரது குணம்... ரஜினி என்கிற தனி மனிதர் தனக்கென வகுத்துக்கொண்ட பாதை, கடை பிடிக்கும் நெறிகள், எளிமை, அகத்தூய்மை இவை அனைத்தும் அவரை ஒரு தனிப் பரிமாணத்திற்கு உயர்த்தி விட்டன என்று கூறினால் அது மிகை ஆகாது... நரைத்த தலையுடனும், மிகச்சாதாரண உடையிலும் பவனி வரும் இந்த கருப்பு மின்னலைப் பற்றி தெரியாத ஒருவரைத் தேடிப் பிடித்து (சற்று கடினம் தான்) அவரிடம் இவர் ஆசிய அளவில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டார் என்று கூறினால் நிச்சயம் நம்ப மறுத்து விடுவார். சுருக்கமாய்ச் சொன்னால் எளிமையின் வாழும் உதாரணம் இவர்.

சமீபத்தில் நடந்த நடிகர் கமலஹாசனின் பாராட்டு விழாவில் ரஜினி ஆற்றிய உரை நெஞ்சை நெகிழச்செய்தது என்று கூறினாலும் அது இந்த மாமனிதனின் பேச்சில் இருந்த நேர்மையையும், அடக்கத்தையும், நற்குணத்தையும் முழுமையாக விளக்கி விடாது, விட முடியாது... ஆசிய அளவில் இவருக்கு இணையான ஊதியமும், நேயர்களும் உள்ள ஒரே நடிகர் ஜாக்கி சான் மட்டும் தான். அவரும் பல மேலை நாட்டுப் படங்களில் நடிப்பதாலேயே ரஜினியுடன் போட்டியிட முடிகிறது. இத்தனைக்கும் ரஜினி பிரதானமாக நடிப்பதென்னவோ தமிழ்த் திரைப்படங்களில் தான்... ஒரு மாநிலத்தில் மட்டுமே அதிக அளவில் பேசப்படும் மொழியை ஆதாரமாகக் கொண்ட ஒரு திரைத்துறையில் ஒருவர் உலக அளவில் புகழும், ரசிகர் உள்ளத்தில் இடமும் பிடித்திருப்பது வேறெங்குமே காணக்கிடைக்காத அதிசயம் என்றே கூறலாம்...

அப்படி ஒரு நிலையில் இருக்கும் ஒருவர், சற்றும் கர்வமோ, திமிரோ, பகட்டோ, படாடோபமோ இல்லாமல் நான் இன்னாரைப் பார்த்து தான் நடிக்கக் கற்றுக் கொண்டேன் என்று தனக்கு நேரடி போட்டியாக கருதப்படும் ஒருவரை குறிப்பிடுதல், அதுவும் அந்த நடிகருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் முன் வெளிப்படையாய்க் கூறுவது வேறெங்கும் நாம் கண்டிருக்க முடியாது.

இது தவிர பலரும் கவனிக்க மறக்கும் மற்றொரு விஷயம், அவரது கவனிக்கும் திறன்... மற்றவரிடம் இருக்கும் திறமையை எந்த விதமான தயக்கமும் இன்றி மனதாரப் பாராட்டி மகிழும் இவரது வெள்ளை உள்ளம், பிரபு தேவா நடன நிகழ்ச்சியின் போதும், இசை ஞானி பேசிய போதும் வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்தது. தான் என்ற அகந்தையை வென்றவன் ஞானி ஆகிறான் என்ற விவாதம் சரியானால், தலைவர் ஒரு ஞானி என்பது திண்ணம்.

குழப்பவாதி, நிலையான சிந்தனை இல்லாதவர், திறமையற்றவர் என்று இவர் வளர்ச்சி பிடிக்காத பலரும் பல விதமாய் அவதூறுகள் பேசினாலும் உண்மையில் இவர் மற்றவர் நலமும், வளமும் மட்டுமே கோரும் ஒரு மிக உயரிய மனிதர் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. தமிழ் அகராதியில் ரஜினி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு அதற்கு பொருளாய் அளவில்லாத அடக்கமும், நிகரில்லாத் தனித்துவமும், கள்ளமில்லா உள்ளமும், உணர்வுப்பூர்வமான உண்மையும் வானளவு கலந்து செய்த கலவை என்ற விளக்கம் இடம் பெற வேண்டும். இதுவே இந்த மனிதருக்கு தகுந்ததோர் மரியாதையாய் இருக்க முடியும். வாழ்க சூப்பர் ஸ்டார். வளர்க அவரது புகழ்!

சனி, 10 அக்டோபர், 2009

இசை வாழ்த்து!

அழுத்தமாய் அணைத்த வீணையின் குரலே
மெல்லியதோர் முத்தமிட்ட மேற்கத்திச் சந்தமே
தென்றலாய் வருடிய குழலின் சுவாசமே
நெஞ்சு நெகிழ்வித்த நாதஸ்வர நாதமே
தேனாய் இனித்த தேவதையின் குரலே
கண்ணீரைக் கொள்ளையடித்த கணநேர நிசப்தமே
இறையே இசையே எனைத் தொலைத்தே
இயலும் இயல்பும் மறந்து நின்றேன்!

சனி, 3 அக்டோபர், 2009

விஞ்ஞானம்

கபடமே அறியாத அதிகாலை பனிக்காற்றும்
தாமரை உடையணிந்த அழகியாய்ச் சித்திரைக்குளமும்
காவலுக்கு ஆயுதம் தாங்கி கருப்பனும் காளியும்
கள்ளமற்ற உள்ளங்களின் எல்லையற்ற மகிழ்ச்சியும்
ஈரறுபது நிழற்துளிகளாய் மாறி நின்று
அனுவறுத்த துளிகள் மேல் பயணமாம்
வரவேற்றுத் தனிமையறுக்கும் நாகரீகப்பெட்டி
ஒரே விலை பதினைந்தாயிரம் ரூபாய்!

வெள்ளி, 2 அக்டோபர், 2009

அலையின் அனுபவம்

கரை தொட்டுக் கண நேரம் கண்ணயர
திரை கடலில் மன்றாடி நான் தவிக்க
கரை நின்ற காதலன் காதலியைக் கொஞ்சக்கேட்டேன்
தன் காதல் எனைப் போல் விடா முயற்சி கொண்டதாம்...

ஓடியது ஓடி வலுவும் வழிந்தோடி
உருவிழந்து தவித்து சோர்ந்து நான் சாய
சுனாமி வருவதாய் எச்சரித்தான் விஞ்ஞானி
விலகும் நீர் வெகுண்டு வெள்ளமாய் மாறுமாம்...

அடி மேல் அடிபட்டு அடி சிதைந்து
நுரைகளாய் வெடித்து நான் வெம்பிச் சிதற
மண் வீடு கட்டிய மழலை சிரித்தாள்
கண்ணீர்த் தடத்தில் ஓர் கனவுக்கோட்டை...