திங்கள், 5 ஜூலை, 2010

'தெரு'விழா

ஒளிப்புள்ளிகள் நீர் பீச்சும் யானையையும், ஓடி விளையாடும் முயலையும், மாரியம்மனையும் சீரான இடைவெளியில் மாற்றி மாற்றி உருவாக்கிக் கொண்டிருக்க, எங்கிருந்தோ திடீரென முளைத்த வெளிர் நீல விளக்குகளின் சரம் அந்த இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. "தன்னே நன்னே நானே..." என பாடிக் கொண்டிருந்த பெண்ணின் குரலை ஒலிபெருக்கிகள் கடமையாய் தத்தமது வட்டாரங்களில் கொண்டு சேர்த்த வண்ணம் இருக்க, மஞ்சள் சேலைகளும், மாவிலைகளும், வாழை மரங்களும், வாசனை மலர்களுமாய் தைக்கால் தெரு வட்டாரமே களை கட்டியிருந்தது.

"மாரியம்மனுக்கு முளைப்பாரி எடுக்கும் பக்தர்கள் அனைவரும் உடனடியாக கோவிலுக்கு வருமாறு விழா குழுவின் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளப் படுகிறோம்" உச்சஸ்தாயிக்கும் கத்தலுக்கும் இடைப்பட்ட குரலில் தனக்குத் தெரிந்த செந்தமிழில் வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டியபடி அறிவித்தான் காளி. வியர்வை அவன் வெள்ளைச் சட்டையை நனைத்ததோடு இல்லாமல், நெற்றியில் இருந்த சந்தன குங்கும கலவையையும் கரைத்து அவன் கரிய முகத்தில் சிந்தூரக் கோடுகள் போட்ட வண்ணம் இருந்தது. படிப்பு சற்றும் ஒட்டாத காளி, சகவாசத்தாலும், சூழ்நிலைகளாலும் சிறு வயதிலேயே தடம் மாறி வாழ்க்கையைத் தொலைத்து இருபத்தி மூன்று வயதிலேயே அதை வெறுத்து, போதைக்கு அடிமையாகி, வயிற்றுப் பசிக்குக் கூலி வேலை செய்யும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் தனிப் பெரும் பிரதிநிதி.

"மாரியம்மனுக்கு முளைப்பாரி எடுக்கும் பக்தர்கள் அனைவரும் உடனடியாக கோவிலுக்கு வருமாறு விழா குழுவின் சார்பாக மீண்டும் மீண்டும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளப் படுகிறோம். எல்லாம் சீக்கிரமா வாங்கம்மா... டயம் ஆயிகிருக்கு" செந்தமிழ் பாதியில் கை விட, பேச்சுத் தமிழின் உதவியை நாடினான்.

"எக்கா மீனாக்கா... எத்தன மணிக்கி வர சொன்னா எத்தன மணிக்கி வர்றீக... மித்தவகல்லாம் காத்துருக்காகல்ல என்னாக்கா..."
"ஏலேய் அன்ராசு... உங்கம்மா ஏன்டா இன்னும் வரல... படக்குன்னு கூட்டியாடா... எல்லாம் காத்துருக்கைங்கனு சொல்லு என்னா..."
"இன்னும் ஒரு ஆறு பேறு வர வேண்டி இருக்குண்ணே... வந்ததும் ஆரம்பிச்சுரலாம்... கொஞ்சம் பொறுத்துக்குங்க... கோச்சுக்குராதீக"

பெண்ணைப் பெற்ற தகப்பனைப் போல் பரபரத்துக் கொண்டிருந்த காளியின் குரலே அங்கு ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. மேலும் இரண்டு காரசாரமான அறிவிப்புகளும் நாற்பது நிமிடங்களும் கடந்த பின் பெண்கள் கூட்டம் முளைப்பாரி தாங்கிய வண்ணம் அங்கிருந்து கிளம்ப, விளையாட்டுப் போட்டிகளுக்கான நேரம் வந்தது...

"டேய் முத்து... வரிசைல வாடா... மறுபடியும் முண்டி அடிச்சுட்டு வந்தனு வை... அப்பறம் உன்ன சேத்துக்குரவே மாட்டோம்டி..."
"ஏலேய் பாண்டி... உனக்கு தான் வரலேல்ல... வெளில வா..."
"டேய் சுல்தான்... பேச்சு மட்டும் வக்கனையா பேசுற... அங்க போய் ஒன்னும் காணோமேடா..."
"இப்பொழுது நம் கணேசன் அண்ணன் அவர்கள் சைகிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற சீனிக்கு பரிசை வழங்குவார்கள்"

போட்டி எதுவாக இருந்தாலும், அதன் நாயகன் காளியாகவே இருந்தான். மணி நள்ளிரவை நெருங்கியிருக்க கூடியிருந்த கூட்டம் கலையத் தொடங்கி இருந்தது. பக்தி அத்தியாயம் முடிந்து போதை அத்தியாயம் தொடங்க, ஒலிபெருக்கி திரைப்பட பாடல்களுள் மூழ்கியது. கால்கள் துவண்டு, கண்கள் அடைக்கும் வரை ஆடிய காளியும் அவன் நண்பர்களும் ஒரு வழியாய் சோர்ந்து உட்கார, வாடகை நேரம் முடிந்ததால் விளக்குகளும், ஒலிபெருக்கிகளும் மறைந்து, நிஜத்தின் இருள் சட்டென அவர்களைச் சூழ்ந்தது. படிய வாரிய தலையுடன் சுற்றி வந்த காளி இப்பொழுது பரட்டைத் தலை, கரை படிந்த சட்டை, எங்கோ தொலைந்த வேட்டியை நினைவுறுத்திய உள்ளாடை சகிதமாய் ஒரு சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். மாரியம்மன் மனம் குளிர்ந்திருக்க மழையும் பெய்யத் தொடங்கியிருந்தது.

"அதுக்குள்ள திருவிழா முடிஞ்சு போச்சாடா" காளி நம்ப முடியாமல் அவன் நண்பன் நாகராசைப் பார்த்துக் கேட்டான்.
"ஆமா மாப்ள. போன வட்டம் ரெண்டு மணி வரைக்கும் ஆடிட்டிருந்தோம்ல..."
"ம்ம்"
"நான் சொன்னத கேட்டு புது வேட்டி சட்டையெல்லாம் எடுக்காம இருந்தா இன்னொரு புல்லு வாங்கிருக்கலாம்ல"
"மாப்ள... இது தாண்டா எனக்கு தீவாளி... விடிஞ்சா என் ஆத்தா கூட என் பேச்சு கேக்க மாட்டா... எவன் என்ன சொன்னாலும், வஞ்சாலும் கேட்டுக்கணும்... இன்னைக்கி ஒரு நாள் தான் என்ன நாலு பேறு பாக்குறான்... நான் சொல்றத நாலு பய கேக்குறான்... பணக்கார வீட்டுப் பயலுகள கூட நான் அதிகாரம் பண்ணறேன்... இது என்ன மாதிரி ஈனப் பயலுக்கு கெடைக்கிற ஆறுதல் மாப்ள..." காளியின் குரல் உடைய அவன் கண்ணீர்த் துளிகள் மழைத் துளிகளுள் கரைந்து உருத்தெரியாமல் போயின.