செவ்வாய், 26 ஏப்ரல், 2016

யார் தமிழர்?

அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு வாக்குறுதிப் பட்டியலை தயார் செய்து கொண்டு தங்களுக்கு சாதகமான சில உண்மைகளையும், பல பொய்களையும், எதிர்க் கட்சியினர் மேல் திகட்டத் திகட்ட புகார்களையும் மக்களின் முன்பு அடுக்கு மொழியிலோ, அநாகரீகமான வசைகளிலோ, வழக்குத் தமிழிலோ அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப அவிழ்த்து விடும் நேரம் : தேர்தல்.

இந்த முறை தமிழக சட்டமன்ற தேர்தல் பன்முனைப் போட்டியாக உருவாகி இருந்தாலும் பழம் (ஊழல்) பெருச்சாளிகள், ஜாதிக் கட்சிகள், "தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க" என வீர வசனம் பேசும் கட்சிகளையெல்லாம் தாண்டி ஓரளவுக்கு அறிவுப்பூர்வமாய் யோசித்து, தெளிவான வாக்குறுதிகளுடன் களம் காணும் கட்சி இயக்குனர் சீமான் தலைமயிலான நாம் தமிழர் கட்சி. வேளான்மை மேம்பாடு, தன்னிறைவு, நகர் மேம்பாடு/திட்டமைப்பு, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் தெளிவான சிந்தனைகளை முன்வைத்ததால் நிறையவே ஆர்வத்துடன் சீமானின் பேச்சுக்களையும், கட்சியின் பிரச்சாரங்களையும் கவனித்து வந்ததில் நான் புரிந்து கொண்ட விஷயம் - மேலோட்டமாய் நந்தவனம் போலே தோற்றமளித்தாலும் இந்தப் பாதையின் முடிவில் இருப்பது பேரழிவு மட்டும் தான். "புலி" போல் சீறிப் பாயும் முன் நான் சொல்லவிருக்கும் காரணங்களை முழுமையாகப் படித்து விடுங்கள்.

ஹிட்லர் பாதை

நாம் தமிழர் திருச்சி மாநாட்டில் 'வழிகாட்டிகள்' என்று தலைப்பிட்டு வைக்கப்பட்டிருந்த தட்டியில் முதன்மையாய் ஹிட்லரின் பெயரை குறிப்பிட்டிருந்ததாகக் கேள்வி. இது தெரிந்து வைக்கப் பட்டதா தெரியாமல் வைக்கப் பட்டதா தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் வாழ்வை 'வந்தேறிகள்' கெடுத்ததாய் கூறுவதில் தொடங்கி தமிழகம் நிகரற்ற, தன்னிறைவான சொர்க்கபுரி என்று பிரச்சாரம் செய்வது வரை நிஜமாகவே ஹிட்லரின் பாதையில் வெகு வேகமாய் பயணிக்கும் கட்சி இது தான். ஹிட்லரின் சுயசரிதையான 'மயின் காம்ப்' (Mein Kampf) முழுக்க வந்தேரிகளான யூதர்கள் ஜெர்மானியர்களின் வாழ்வைக் கெடுத்தது பற்றியும், ஜெர்மானியர்கள் உலகிலேயே சிறந்த இனம் என்பதற்கான 'சான்றுகளையும்' ஏராளமாகக் காணலாம். சரித்திரம் ஹிட்லரின் கோர முகத்தை மட்டுமே காட்டி நடுநிலை தவறியது உண்மையாய் இருந்தாலும் ஒற்றுமையாய் இருக்கும்/இருக்க முயற்சிக்கும் ஊரில் பிரிவினை பாராட்டத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பதற்கு இரண்டாம் உலகப் போர் வரலாறே சான்று. நடக்கவிருப்பதன் முன்னோட்டமாக நாம் தமிழர் அமைப்பின் பால் தீவிர பற்று கொண்ட சிலர் தங்கள் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவ்ர்களை வந்தேறிகள் என்றும் தமிழ் தேசத் துரோகி என்றும் சமூக வலை தளங்களில் விமர்சிப்பதைக் காண முடிகிறது.

வன்முறை

பாரத பிரதமராய் இருந்தவர் மீது மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி அவருடன் சேர்ந்து பல அப்பாவித் தமிழர்களைக் கொன்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் உலகத் தமிழர்களின் தலைவராம், ஒருவரை மூளைச் சலவை செய்து மனித வெடிகுண்டாய் மாற்றி, அந்த நபர் மொழியின் பெயரால் தன்னோடு சேர்ந்து அப்பாவி உயிர்களை கோழைத் தனமாய் பலி வாங்குவது பெருமைப் பட வேண்டிய வீரச் செயலாம். தமிழனுக்கு வடிந்தால் இரத்தம், மற்றவர்களுக்கு வடிந்தால் தக்காளிச் சட்னியா?  அட தமிழர்கள் எத்தனை பேரின் இரத்தம் விடுதலைப் புலிகலாளேயே சிந்தப் பட்டிருக்கும்? அதற்கு யார் பதில் சொல்வது? இராஜீவ் மீதோ, காங்கிரஸ் கட்சியின் மீதோ எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. இந்தியாவைச் சுரண்டிச் சாகடித்தது காங்கிரஸ் தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் வெளிநாட்டு தீவிரவாத இயக்கம் இந்தியர் மீது நடத்திய தாக்குதலை இந்தியாவின் மீது நடந்த தாக்குதலாய் தான் பார்க்க வேண்டும்.

அதே போல் ஈழத் தமிழர்களை சகோதரர்களாக நினைப்பதில் தவறில்லை. அங்கு நடந்த கொடூரமான போர்க் குற்றங்களை எதிர்த்து குரல் கொடுப்பதும் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஏதோ காரணம் சொல்லி வன்முறையை நியாயப் படுத்தத் தொடங்கினால், அதை பெருமையாகக் கருதத் தொடங்கினால், பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நியாயம் கேட்கும் உரிமையை நாம் இழந்து விடுகிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. மொழிக்காக உயிர் எடுப்பதும் உயிர் கொடுப்பதும் உங்களுக்கு நியாயமாகப் படுமேயானால் சாதி, மதம் என்று அவரவர்களுக்கு முக்கியமான விஷயங்களுக்காக வன்முறையில் இறங்குவது அவர்களுக்கும் நியாயமாகத் தானே படும்? 

தனித் தமிழகம்

தமிழகம் சட்ட ரீதியாய் தனி நாடாகிறதோ இல்லையோ கொள்கை ரீதியாய் முற்றிலும் தனித்து நிற்கும். நாம் தமிழரின் செயல்பாட்டு வரைவு தமிழகத்தை ஒரு தனி நாடாகத் தான் பார்க்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்தியா எனும் வார்த்தை அதில் இடம் பெறுகிறதா என்று கூடத் தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் அதிகாரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அந்த ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சியில் அந்த மாநிலத்தின் பங்கும் முக்கியம். வேற்றுமையால் ஒன்று பட்ட நம் நாட்டை வேற்றுமையாலேயே வேரறுக்கும் போக்கு ஒவ்வொரு மாநிலமும் தன்னை தனி தேசமாகக் கருதுவது. இலங்கையில் நடந்தது உரிமைப் போராய், ஒரு உள்நாட்டு சுதந்திர போராகக் கூட இருந்திருக்கலாம். அதைப் பற்றி கருத்துச் சொல்ல நான் இலங்கையில் பிறந்து வளரவில்லை. ஆனால் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, தீவிரவாத இயக்கமாய் அறிவிக்கப்பட்ட ஓர் அமைப்பின் தலைவரை தமிழக மக்களின் தலைவன் எனக் குறிப்பிடுவது இந்திய இரையான்மைக்கு எதிரான ஒரு செயல் என்று மட்டும் என்னால் அடித்துக் கூற முடியும்.


சுருங்கச் சொன்னால் கம்யூனிசப் போராளி போல் சிந்திக்க தமிழகம் சீனாவோ, ஈழமோ அல்ல என்பதை நினைவில் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சியையும் அதில் தமிழகம் ஆற்ற வேண்டிய பெரும் பங்கையும் மனதில் கொண்டு திட்டங்களை வகுத்தால் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டுக்கும் நல்லது. வாழ்க தமிழ். வளர்க இந்தியா.