வெள்ளி, 9 செப்டம்பர், 2016

நீதி

எனக்கு இருட்டுன்னா பயம்... ஆனா... இப்போ நான் இருக்கிற ரூம்ல... கடுகளவு வெளிச்சம் கூட இல்லை... இப்போ என் கவலை... இருட்டை பத்தினதில்லை… சொல்ல போனா... இன்னைக்கு... இந்த நிமிஷம்... இருட்டு தான் என் நண்பன்... காரணம்... உயிர் பயம்... என்னை... சில பேர் கொல்ல தேடிட்டு இருக்காங்க… ஒரு நிமிஷம்… ஓடி வந்ததுல மூச்சு வாங்குது.

யாரு கொல்ல வர்றாங்கன்னு கேக்குறீங்களா? பரம்பரை பரம்பரையா எங்க கூட்டத்தை அடக்கி ஒடுக்கி சித்திரவதை செஞ்சு கொன்னுட்டு வர்ற அதே கும்பல் தான். காரணம் நாங்க அநாதைங்க. அதுலையும் அநாதை பெண்கள். கேக்கணுமா? நாங்க அனுபவிச்சதெல்லாம் நெனச்சு பாத்தா உடம்பே நடுங்குது. எப்பிடியும் நான் சாகுறது உறுதி.  அதுக்கு முன்னாடி நடந்த கொடுமைகளை சொல்லிட்டு போறேன். நீங்க எதாவது பண்ணுவீங்கங்குற நம்பிக்கையில்…

நாங்க வளர்ந்த ஊர் நாமக்கல். அநாதைங்களுக்கு வளந்த ஊர் தானே சொந்த ஊர் மாதிரி… இப்பிடி வாழ்றதுக்கு செத்துறலாம்ன்னு தினமும் தோண்ற வாழ்க்கை. ரொம்ப சின்ன வயசுலயே கொத்தடிமை ஆயிட்டோம். எங்களை பெத்தவங்க யாரு, ஏன் இப்பிடி எங்களை துச்சமா தூர போட்டாங்க… எதுவுமே தெரியாது. என்னை மாதிரி ஐநூறு அறுநூறு பேர். பச்சை குழந்தைங்கன்னு கூட பாக்காம கூட்டமா உள்ள தள்ளி விடுவாங்க. நெரிசல்ல ரெண்டு மூணு குழந்தைங்க செத்து கூட போயிட்டாங்க. அப்போ கூட நாங்க செத்ததை விட போட்ட காசு போச்சேன்னு தான் வருத்தப்பட்டாங்க எங்க “முதலாளி"கள். இது இப்பிடி இருக்க, நாங்க சாப்பிட்டது எப்படி தெரியுமா? ஒரு பெரிய கூண்டுக்குள்ள ஜெயில் மாதிரி அடச்சு தான் வச்சுருப்பாங்க எப்பவும். சாப்பாடு எங்க ஜெயில ஒட்டி வீசிட்டு போவாங்க. நாங்க கூண்டு வழியா எட்டினதை சாப்பிடணும். முரட்டுத் தனமா இருக்கற ஆளுங்க திடீர்ன்னு வந்து தூக்கி முடியெல்லாம் தடவிட்டு, எங்க உதட்டை வெட்டி காயப்படுத்திட்டு போவாங்க. அதிகமா சாப்பிட்டுற போறோம்னு. சத்தம் போட்டா கூட கேக்க நாதி இருக்கணுமே. அழுது அழுது ஒரு கட்டத்துல மரத்தே போச்சு.

இதெல்லாம் கூட பரவாயில்லை. வயசுக்கு வந்ததும் எங்களுக்கு கண்ட ஊசியை போட்டு உணர்ச்சியைத் தூண்டி எங்களை ஆண்களோட சேரவும் விடாம, கரு தரிக்கவும் விடாம கரு முட்டைகளை மட்டும் திருடி வித்துறுவாங்க. செயற்கை கருத்தரிப்பு, ஆராய்ச்சி ஒரு பக்கம்ன்னா,அதை சாப்பிட்டா வியாதியே வராது, ஆயுசு கூடும், உடம்பு நல்லா இருக்கும்ன்னு என்னென்னமோ காரணம் சொல்லி இரக்கமே இல்லாம வாங்கி சாப்பிடுற கும்பல் வேற இருக்குன்னு தெரிய வந்தப்போ நடுங்கிட்டோம். எங்க உடம்பு சளைக்கிற  வரைக்கும் இது தான் எங்க விதி. ஒரு கட்டத்துல இப்பிடி எடுத்து எடுத்து உடம்புல அப்பிடி ஒரு வலியும் களைப்பும் வந்துரும். சீக்கிரமே தளர்ந்து போய் கரு முட்டை வர்றது கூட நின்னப்பறம் எங்களை மறுபடியும் கும்பலா லாரிக்குள்ள ஏத்தி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, இல்லை நம்ம மாநிலத்துலையே ஏதாவது ஊருக்கு அனுப்பி விட்டுருவாங்க. பசியே எடுக்காம இருக்க ஏதோ குடுத்து குடிக்க வேற சொல்லுவாங்க. வர்ற வழில வெயில் மழைன்னு எது வந்தாலும் ஒரு தார்ப்பாய் கூட கிடையாது. நாங்க உயிர் இல்லையே… பொருள் தானே! இதெல்லாம் போதாதுன்னு இப்போ ஒரு கொலைகார கும்பல் கிட்ட வந்து மாட்டிகிட்டோம். என் கண்ணு முன்னாடியே வெள்ளையம்மா அக்காவை கழுத்தை பிடிச்சு தூக்கி... கத்தியால ஒரே வெட்டு... துடி துடிச்சு முண்டமா கீழ விழுந்தாங்க. வெலவெலத்துப் போயிட்டோம். இத்தனைக்கும் எங்க கூட்டத்துலையே எப்பவும் சிரிச்சுட்டு, நல்ல வார்த்தை சொல்லிட்டு குண்டா அழகா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மனசு விடாம இருக்கும் அந்த அக்கா. இப்போ பொணமா கெடக்கு. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எளவெடுத்த உசிரு மேல அப்பிடி ஒரு ஆசை, அது போயிடும்ன்னு பயம். எல்லாம் தலைக்கு ஏற ஒரே ஓட்டமா ஓடி இங்க வந்து… ஐயையோ அவங்க வந்துட்டாங்க… காப்பாத்துங்க… நான் வாழணும்… ப்ளீஸ்… காப்பாத்துங்… விடுடா… விடுடா என்னை… விட்.
(மடக் என ஓர் சத்தம், அதன் பின்னே ஒரே ஒரு விநாடி மயான அமைதி… திடீரென “மனிதன் மனிதன்” பாடல் பாடி கைபேசி அழைத்தது)

“ஆங். சொல்லுண்ணா”
“...”
“லோடு காலேலயே வந்திச்சுண்ணா. ஒரு கோயி ஓடி வந்து ஸ்டோர் ரூமாண்ட ஒய்ஜினிர்ந்தது. இப்போ தான் கய்த்த திருவுனேன். நான் பாத்துக்குரேண்ணா…”
“...”
“கொய்ந்தைக்கு இப்போ பரவால்லண்ணா… ஆட்டுக் கால் சூப்பு வச்சு குத்தா சம்சாரம்…”

(பேசியபடி அவன் கதவை மூடி நகர்ந்து செல்ல, அந்த கிடங்கில் அமைதியும் இருளும் மறுபடியும் சூழ்ந்தது)