வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மனசாட்சி

பேசாத சொற்களின் அர்த்தம்
நீ மட்டும் உணர்ந்திடுவாய்  நித்தம்
காண்பதே கடினம் என்றாலும்
காணும் காட்சியெல்லாம் உந்தன் கோலம்
நித்திரையில் வேற்றுலகம் காண்பித்தாய்
நீளும் நாட்களிலே சிந்தை நிறைத்திட்டாய்
எனை விடவும் என்னை நீ நன்கறிந்து
நான் என்றால் நீயும் என்றாகிவிட்டாய்

திங்கள், 24 ஏப்ரல், 2017

தீபாவளி

புதியதாய் வெளிநாடு வரும் மாமாக்களும் மாமிக்களுக்கும்  போன் உபயோகிக்கக் கூடாது என சட்டம் வர வேண்டும். விடிந்ததும் விடியாததுமாய் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல கிழக்கு கடற்கரை (அதாங்க ஈஸ்ட் கோஸ்ட் ) வந்திருக்கும் மனைவியின் மாமா திருவாளர் சுப்ரமணியன் அழைத்ததில் தூக்கம் தொலைத்து ஹாலில் ஜன்னலருகே நின்று கொண்டிருக்கிறேன். பிட்ஸ்பர்கில் காலை மணி 6:30 ஆகி விட்டது. ஆனால் இங்கு சியாட்டிலில் அர்த்த ராத்திரி 3:30 மணி, முப்பத்தி எட்டு பாரெண்ஹெய்ட் (ஏறத்தாழ மூன்று டிகிரி செல்ஸியஸ்), பற்றாத குறைக்கு சியாட்டிலின் அடையாளமான நச நச மழை ஜன்னல் கண்ணாடியில் கோடு கிறுக்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. இது எல்லாவற்றையும் விட பிரமாதமான விஷயம் என் மனைவி - கொடுத்து வைத்த கும்பகர்ணி - கால் வந்தது கூட தெரியாமால் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கிறாள். மொத்தத்தில் ஒரு என்ன கொடுமை சார் இது தொடக்கம் இன்றைக்கு.


ஹ்ம்ம்... ஐ போனை எழுப்பி மணி பார்க்கிறேன். 3:40. கடைசியாக தீபாவளிக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்து சுமார் இருபது இருபத்தைந்து வருடங்கள் இருக்கும். நிசப்தமான இரவில் அரை நித்திரையில் மழையின் சட சட சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் என் நினைவுகளை பின்னோக்கி கொண்டு செல்கிறது. "இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால..." என்று க்ளீஷேவாக ஆரம்பித்தாலும் மலரும் நினைவுகளில் அழகிய மதுரையை நினைத்துப் பார்க்கையில், அதிலும் குறிப்பாய் பள்ளிப் பருவத்தில், தீபாவளிக் காலங்களில் ரசித்து ரசித்து உள்வாங்கிய நினைவுகளில் நிறைந்திருக்கும் மதுரையை நினைத்துப் பார்க்கையில் உள்ளூர மலரும் ஒரு இனம் புரியாத பரவசத்தை சுலபமாக உங்களுக்கு  புரியும்படி,  நீங்கள் உணரும்படி விவரித்து விட முடியுமா என்று தெரியவில்லை. முயற்சிக்கிறேன்.


மதுரையின் மையப்புள்ளி மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில். கோவிலை மையமாகக் கொண்ட செவ்வகங்களான ஆடி, சித்திரை, மாசி, வெளி வீதிகளும் அவற்றின் ஊடே இழையோடும் வீதிகளும் தெருக்களும் தான் மதுரை டவுண் டௌன் ஷாப்பிங் டிஸ்ட்ரிக்ட்.  பாண்டியர் காலத்திலேயே எக்ஸ்போர்ட் செய்து வந்ததாலோ என்பதாலோ என்னவோ அழகாக தொழில்வாரியாக திட்டமிடப்பட்ட சந்தை அது. தீபாவளி நெருங்க நெருங்க ஆங்காங்கே மதுரை மல்லிகை வாசம், பிளாஸ்டிக் பொம்மைகளின் டிகி டிகி சத்தம், கீழ மாசி வீதியில் பளீர் ட்யூப் லைட்டுகள் மின்னும் பட்டாசுக் கடைகள், சித்தநாதர் விபூதியும் சந்தனமும் மணக்கும் எழுகடல் தெரு, அன்னக்குழி மண்டபம் அருகே களை கட்டும் குற்றாலத் துண்டு வியாபாரம், புது மண்டபத்தில் தட தடக்கும் தையல் மெஷின்கள், சோடியம் வேப்பர் விளக்கொளியில் அம்மன் சன்னதியில் கலகலக்கும் வளையல்கள், கோவிலின் நான்கு புறமும் பரபரக்கும் ஜவுளி கடைகள், செவந்தியும் சம்பங்கியும் மல்லியும் அரளியும் வாடாமல்லியும் மரிக்கொழுந்தும் வந்து குவியும் பூ மார்க்கெட், எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் என அந்தச் சந்தை இன்னும் மெருகேறி ஜெகஜ்ஜோதியாய் மாறி விடும்.


இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் அனைவருக்கும் முகத்தில் புன்னகையும், நெற்றியில் திருநீறும் குங்குமமும், மனதில் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. மீனாட்சியின் அருள் எப்படி அனைவருக்கும் உண்டோ அதே போல் ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அவரவர் சக்திக்கேற்ற பொருட்கள் அந்தச் சந்தையில் உண்டு. பணக்காரர்களுக்கு பிராண்டட் ஷர்ட் என்றால் ஏழைகளுக்கு குமார் ஷர்ட். நடுத்தர மக்களுக்கு அணில் மார்க் பட்டாசு என்றால் ஏழைகளுக்கு லேபிள் ஒட்டாத லோக்கல் தயாரிப்பு. இப்படி ஏதோ ஒரு வகையில் எல்லோரும் கைகள் நிறைந்து திரும்பும் நிறைவான ஷாப்பிங் எக்ஸ்பீரியன்சையும், மனது நிறைந்து திரும்பும் ஆத்மார்த்தமான ஆன்மீகத்தையும் காம்போ ஆஃபராய் நான்கு கிலோமீட்டர் பரப்பளவில் அளித்த பிரம்மாண்ட ஷாப்பிங் மால் அது.


மொட்டை மாடியிலிருந்து மீனாக்ஷி கோவில் கோபுரம் தெரியும் ஒரு குறுகிய அக்கிரகாரத்து காரை வீட்டில் குடியிருந்ததால் வீட்டிலிருந்த ஒவ்வொருவருக்கும் துணி வாங்க ஒவ்வொரு முறை, பட்டாசு வாங்க ஒருமுறை, தீபாவளி மருந்தும் பலகாரங்களும் வாங்க ஒருமுறை என பல அந்தி நேர நகர்வலங்களில் இந்த மாற்றங்களை உள்வாங்கி ரசித்திருக்கிறேன். ஷாப்பிங்கை பொறுத்த வரை நான் மூளையை கசக்கியது பட்டாசு விஷயத்தில் மட்டும் தான். நடுத்தர குடும்பங்களுக்கே உண்டான பட்ஜெட்டுகள் எங்கள் வீட்டிலும் உண்டு. பட்டாசுக்கான அப்பாவின் சராசரி நிதி ஒதுக்கீடு அந்த வருடத்தின் நிதி நிலைமைக்கேற்ப ஐநூறில் இருந்து ஆயிரம் ரூபாய். பண வீக்கம், விலைவாசி உயர்வு போன்ற எந்த சலுகையும் இல்லாத நிர்ணயிக்கப்பட்ட தொகை என்பதால் வருடங்கள் செல்லச் செல்ல திட்டமிடுதல் அதிகம் தேவைப்பட்டது. ஒரு நாள் முழுக்க பட்டாசு வெடிக்க வேண்டுமே, அதுவும் அணில் மார்க் பட்டாசுகள். நல்ல வேளையாக அதிக சத்தத்துடன் ஒன்றொன்றாக வெடிக்கும் அணுகுண்டு, காட்ரிட்ஜ் பாம் உள்ளிட்ட வெடிகள் உள்ளவற்றுள் மலிவானவை, என் தேவைகளுக்கு கச்சிதமானவை.  


ஜான் கீட்ஸ் ஒரு கவிதையில் குறிப்பிடுவார். நாம் கேட்காத, கற்பனை செய்து பார்க்கும் பாடல்கள் நாம் கேட்டு முடித்து விட்ட பாடல்களை விட இனிமையாய் இருக்கும் என்று. நம் மனது அந்தப் பாடல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யும் போது பல விதமாய் கற்பனை செய்யவும் முடியும், அந்தக் கற்பனைகள் நமக்குப் பிடித்த மாதிரியும் இருக்கும். அதே போல் வாங்கி வைத்து வெடிக்கக் காத்திருக்கும் பட்டாசும், வாங்கி வைத்து உடுத்தக் காத்திருக்கும் ஆடையும் அலாதி சுகத்தைக் கொடுத்தன - மற்றவரிடம் பெருமையாக காட்டிக் கொள்ளும் போதும், எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்கும் பொழுதும்.


தீபாவளி நாளன்று காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பூஜை முடியக் கூட காத்திருக்காமல் பழைய ஷார்ட்ஸ் ஒன்றை அவசர அவசரமாய் போட்டுக் கொண்டு ஒரு கையில் லட்சுமி வெடி பாக்கட்டும் மறு கையில் சன்னமாய் புகை கக்கும் சைக்கிள் ஊதுவத்தியும் எடுத்துக் கொண்டு முழு வேகத்தில் வாசலுக்கு ஓடியிருப்பேன். அந்தக் குறுகிய அக்கிரஹாரத்தில் முதலில் எதிரொலிக்கும் வேட்டுச் சத்தம் யாருடையது என்பதில் எனக்கும் என் நண்பர்களுக்கும் எப்பொழுதும் கடுமையான போட்டி இருக்கும். ஒரு மாதத்திற்கு பீத்திக் கொள்ளும் ஏகபோக உரிமை ஆயிற்றே. லேசில் விட்டு விட முடியுமா?


நான் முதலில் வெடித்தால் லட்சுமி வெடி, எதிர் வீட்டு பிரவீன் வெடித்தால் 100 வாலா சரவெடி, போஸ்ட்மாஸ்டர் மகன் சீனு வெடித்தால் டபிள் ஷாட், முருகன் ஸ்டார் அண்ணாச்சி மகன் தீபக் வெடித்தால் புல்லட் பாம் என்று சிக்னேச்சர் வெடிகள் முன்னமே முடிவு செய்திருப்போம். தவிர குளித்து முடித்து விட்டுத் தான் வெடிக்க வர வேண்டும், மூன்றரை மணிக்கு முன் வெடிக்கக் கூடாது என்ற ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் வேறு. மதுரை பாஷையில் சொன்னால் ஆட்டம்னா ஒரு வரைமுறை இருக்கணும்லண்ணே. முந்தைய இரவிலிருந்தே விட்டு விட்டுத் தூங்கி, அலாரம் ஒலிப்பதற்கு முன்னரே எழுந்து தயாராகி உடனே வெடிக்க வேண்டுமென்று திரியைக் கூட பிய்க்காமல் பற்ற வைத்த லட்சுமி வெடியின் சத்தம் காரைச் சுவர்களில் முட்டி தீபாவளியின் வரவேற்பு மணியாக கணீரென எதிரொலிக்கும் போது ஜிவ்வென்று தலைக்கேறும் வெற்றிக் களிப்பை பின்நாட்களில் பணமும் பதவி உயர்வும் கிடைத்த தருணங்களில் கூட உணர்ந்ததில்லை.


தனி ஆவர்தனமாக தொடங்கும் இந்த வெடிச்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி டப் டஸ் டும் சத்தங்கள் வீதியெங்கும் பரவி கூட்டுப் பிரார்த்தனையாக மாறிய பின் அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் தொடங்கும்.  கொட்டாங்குச்சிக்குள், சாணிக்குள், கயிறு சுத்தி,  சேர்த்துத் திரித்து, பிரித்து மருந்தாக்கி கொழுத்தி, புஸ்ஸானால் மொத்தமாய் நெருப்பில் கொட்டி என சிவகாசி தொழிற்சாலைகளுக்கு அடுத்தபடியாக வெடி மருந்து அதிகப்படியாக அலசி ஆராயப்பட்ட இடம் எங்கள் வீதியாக இருக்கலாம். எங்கள் கால கட்டத்தில் வளர்ந்த ஒவ்வொரு சிறுவனும் அப்படித் தான் நினைத்திருப்பான். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் என் நண்பர்கள் வெவ்வேறு சமூகத் தட்டில் இருந்து வந்தவர்கள். அதில் சிலரால் நூறு ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்க முடியாது. கூலி வேலை செய்வதாலும் பட்டாசுகள் விலை மலிவாக இருக்கும் என்பதாலும் தீபாவளி அன்று காலை நாங்கள் போட்டியிட்டு வெடிக்கும் பொழுது தான் சிலர் கீழ மாசி வீதி சென்று பட்டாசே வாங்குவார்கள். அப்பொழுது கூட அவர்களால் ஒரு நாள் முழுக்க வெடிக்கும் அளவுக்கு பட்டாசுகள் வாங்க முடியாது. சீனுவின் அப்பாவால் கூட பெரிதாக பட்டாசு வாங்கித் தர முடியாது. பிரவீனின் அப்பா கஞ்சூஸ். அலுவலகத்தில் வரும் கிஃப்ட் பாக்ஸ் ஒன்றை கொண்டு வந்து கொடுத்து இவ்வளவு தான் என்று சொல்லி விடுவார். அநேக கிஃப்ட் பாக்ஸ்களில் 100 வாலா இருக்கும் என்பதால் தான் அவன் அதை தனக்கென சிக்னேச்சர் வெடியாக தேர்வே செய்தான். இவர்கள் அனைவருக்குமே மதியம் நெருங்க நெருங்க காலி டப்பாக்கள் மட்டுமே மிஞ்சியிருக்கும்.யாருக்கும் குறை தெரியாமல் இருக்க மதியமானால் யாருடைய வெடி எது என்று தெரியாத அளவுக்கு ஒன்றோடொன்று கலந்து நாங்கள் ஒரு கும்பலாகத் தான் வெடித்துக் கொண்டிருப்பபோம். இதற்காகவே நான் பெரிதாக விரும்பாவிட்டாலும் எண்ணிக்கை அதிகம் இருக்கட்டும் என்று சீனி/யானை வெடி பாக்கட்டுகள் சில வாங்குவது வழக்கம்.


எத்தனை கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் இருந்தாலும் தீபாவளி நாளிலும் இருபத்தி நான்கு மணிகள்  தானே. நாள் முழுக்க பட்டாசு வெடிக்க வேண்டும், அப்படியே ஒரு திரைப்படமாவது பார்க்க வேண்டும், சொந்தபந்தங்களை சந்திக்க வேண்டும், பலகாரங்களை கபளீகரம் செய்ய வேண்டும், கோவிலுக்குச் செல்ல வேண்டும், இது தவிர வீட்டில் ஏதாவது எடுபிடி வேலை சொன்னாலும் செய்ய வேண்டும். கடைசி ஐட்டத்தை சாய்சில் விட்டாலும் மற்றவை செய்தாக வேண்டுமே. அதனால் அன்றைய தினம் நான் எங்கு சென்றாலும் கையில் ஒரு பட்டாசுக் கலவை தாங்கிய பிளாஸ்டிக் பை இருக்கும். ஒரு சரம் வெடிக்கும் நேரத்தில் உள்ளே ஓடி பஜ்ஜியோ மனோஹரமோ சத்துமாவு லட்டோ கையில் கிடைத்ததை வாய் கொள்ளும் அளவுக்கு அடைத்துக் கொண்டு அம்மா திட்டுவதை (“கை கழுவிட்டு சாப்பிடேண்டா”) நேக்காய் காதில் விழாதது போல் சமாளித்து, அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆவதில் தொடங்கி, சொந்தங்களுடன் அப்பா அம்மா பேசிக் கொண்டிருக்கையில் நைசாக நழுவி சில குருவி வெடிக்களை வெடிப்பது வரை பிரதான குறிக்கோளான பட்டாசை மறக்காமல் மற்ற எல்லா வேலைகளையும் செய்வது தான் நான் கற்றுக் கொண்ட முதல் மல்டி டாஸ்கிங்.


பட்டாசை மீறி என்னை கட்டிப் போட்ட ஒரே விஷயம் ரஜினி. கோவிலுக்கு சென்றால் கூட வீடு திரும்பி வெடி மருந்து நுகர மனம் ஏங்கும். ஆனால் ரஜினி படம் என்றால் முழு கவனமும் திரையில் தான். முதல் நாள் படம் பார்ப்பதே ஒரு பெருமை என்றால் அதை நன்றாக கவனித்துப் பார்த்து அடுத்த சில நாட்களுக்கு, வாரங்களுக்கு படத்தில் வந்த வசனங்களையும், காட்சிகளையும் குறிப்பாக ரஜினியின் ஸ்டைலையும் மற்றவர்களுக்கு நடித்துக் காட்டுவது பரம சுகம். சில வருடங்கள் டிக்கட் கிடைக்காததாலோ, வீட்டில்  விருப்பம் இல்லாததாலோ படம் பார்க்க முடியாமல் போய் விடும். அந்த சமயங்களில் மற்ற நண்பர்களும் படம் பார்க்கவில்லை என்றால் நானே அந்த படத்திற்கு ஒரு உட்டாலக்கடி கதை தயார் செய்தோ, எனக்கு மட்டும் பரிச்சயமான வேறு ஒருவரிடம் கேட்டோ தயாராகி விடுவேன். பிறகென்ன தெரிந்ததும் தெரியாததும் கலந்து அடித்து விட வேண்டியது தான். குழந்தைத் தனமான அட்டென்க்ஷன் ஸீக்கிங் என்றாலும் அதை கும்பலாக சேர்ந்து பண்ணும் பொழுது அது நடைமுறை ஆகியிருந்தது - நம் ஜனநாயகத்தைப் போல.


இப்படியாக தீபாவளி என்பது எனக்கும் நண்பர்களுக்கும் ஒரு நாள் பண்டிகையாய் இருந்ததில்லை. இரண்டு மூன்று மாத திருவிழாவாகத் தான் இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் தனித்து நின்று ஜெயிப்பதில் தொடங்கி திட்டமிடுதல், பகிர்தலில் இருக்கும் மகிழ்ச்சி, ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களை ஒரு சேரச் செய்வது, பணத்தின் அருமை என பல வாழ்வியல் பாடங்களை மகிழ்ச்சி கலந்து கற்றுக் கொடுத்த ஒரு ஆசிரியராகக் கூட இருந்திருக்கிறது. இந்த காலத்துச் சிறுவர்களுக்கு இந்தியாவிலேயே இது போன்றதொரு சூழல் இருக்கிறதா என்று தெரியவில்லை. இங்கு பெரும்பாலும் தீபாவளி வேலை நாட்களில் வந்தால் அதைக் கொண்டாடுவதே வார இறுதியில் தான். இந்த முறை தப்பித் தவறி சனிக்கிழமையில் வந்து விட்டது. அப்படி இருக்க இங்கிருக்கும் பண்டிகை கொண்டாட்டங்கள் எவ்வளவு கற்றுக் கொடுத்து விட முடியும். மேலை நாடுகளில் வசிப்பதன் மூலம் நம் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கிறோமா பறிக்கிறோமா என்ற ஆழமான குழப்பத்தை எனக்கு ஏற்படுத்தும் நாட்களாகத் தான் இப்பொழுதெல்லாம் தீபாவளியும் ஏனைய பண்டிகைகளும் திகழ்கின்றன.

சரி… அறையில் அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டது. தமிழ் சங்கத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் இன்று என் மகள் நான் சிரித்தால் தீபாவளி பாடலுக்கு நடனம் ஆடுகிறாள் (தீபாவளி என்ற வார்த்தை வருவதால் மட்டுமே பாடலை தேர்வு செய்திருக்கிறார்கள்), என் மகன் வீர பாண்டிய கட்டபொம்மனாக மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்கிறான் (அவனே ஜாக்சன் துரை போல் தான் பேசிக் கொண்டு திரிகிறான்). அங்கிருந்து திரும்பியதும் பல்பம் சைஸ் கம்பி மத்தாப்பு நான்கை கொழுத்தி விட்டு க்ராண்ட் ஸ்வீட்ஸில் ஆர்டர் செய்த பலகாரங்களுடன் புவ்வா. நல்லதாய் நான்கு போட்டோக்கள் ஃபேஸ்புக்கில் ஏற்றி எங்கள் மகிழ்ச்சியை உலகுக்கே தெரியப்படுத்தி எட்டரை மணிக்கெல்லாம் சத்தமின்றி துயில்வோம். இப்பொழுது ஏற்பாட்டைத் தொடங்கினால் தான் நேரம் சரியாக இருக்கும். மீண்டும் ஒரு முறை இந்தியாவும் மதுரையும் நினைவுக்கு வருகையில் இன்னும் சற்று வயதானவனாக சந்திக்கிறேன். ஹாப்பி தீபாவளி.