என் கருத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் கருத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

யார் தமிழர்?

அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு வாக்குறுதிப் பட்டியலை தயார் செய்து கொண்டு தங்களுக்கு சாதகமான சில உண்மைகளையும், பல பொய்களையும், எதிர்க் கட்சியினர் மேல் திகட்டத் திகட்ட புகார்களையும் மக்களின் முன்பு அடுக்கு மொழியிலோ, அநாகரீகமான வசைகளிலோ, வழக்குத் தமிழிலோ அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப அவிழ்த்து விடும் நேரம் : தேர்தல்.

இந்த முறை தமிழக சட்டமன்ற தேர்தல் பன்முனைப் போட்டியாக உருவாகி இருந்தாலும் பழம் (ஊழல்) பெருச்சாளிகள், ஜாதிக் கட்சிகள், "தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க" என வீர வசனம் பேசும் கட்சிகளையெல்லாம் தாண்டி ஓரளவுக்கு அறிவுப்பூர்வமாய் யோசித்து, தெளிவான வாக்குறுதிகளுடன் களம் காணும் கட்சி இயக்குனர் சீமான் தலைமயிலான நாம் தமிழர் கட்சி. வேளான்மை மேம்பாடு, தன்னிறைவு, நகர் மேம்பாடு/திட்டமைப்பு, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் தெளிவான சிந்தனைகளை முன்வைத்ததால் நிறையவே ஆர்வத்துடன் சீமானின் பேச்சுக்களையும், கட்சியின் பிரச்சாரங்களையும் கவனித்து வந்ததில் நான் புரிந்து கொண்ட விஷயம் - மேலோட்டமாய் நந்தவனம் போலே தோற்றமளித்தாலும் இந்தப் பாதையின் முடிவில் இருப்பது பேரழிவு மட்டும் தான். "புலி" போல் சீறிப் பாயும் முன் நான் சொல்லவிருக்கும் காரணங்களை முழுமையாகப் படித்து விடுங்கள்.

ஹிட்லர் பாதை

நாம் தமிழர் திருச்சி மாநாட்டில் 'வழிகாட்டிகள்' என்று தலைப்பிட்டு வைக்கப்பட்டிருந்த தட்டியில் முதன்மையாய் ஹிட்லரின் பெயரை குறிப்பிட்டிருந்ததாகக் கேள்வி. இது தெரிந்து வைக்கப் பட்டதா தெரியாமல் வைக்கப் பட்டதா தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் வாழ்வை 'வந்தேறிகள்' கெடுத்ததாய் கூறுவதில் தொடங்கி தமிழகம் நிகரற்ற, தன்னிறைவான சொர்க்கபுரி என்று பிரச்சாரம் செய்வது வரை நிஜமாகவே ஹிட்லரின் பாதையில் வெகு வேகமாய் பயணிக்கும் கட்சி இது தான். ஹிட்லரின் சுயசரிதையான 'மயின் காம்ப்' (Mein Kampf) முழுக்க வந்தேரிகளான யூதர்கள் ஜெர்மானியர்களின் வாழ்வைக் கெடுத்தது பற்றியும், ஜெர்மானியர்கள் உலகிலேயே சிறந்த இனம் என்பதற்கான 'சான்றுகளையும்' ஏராளமாகக் காணலாம். சரித்திரம் ஹிட்லரின் கோர முகத்தை மட்டுமே காட்டி நடுநிலை தவறியது உண்மையாய் இருந்தாலும் ஒற்றுமையாய் இருக்கும்/இருக்க முயற்சிக்கும் ஊரில் பிரிவினை பாராட்டத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பதற்கு இரண்டாம் உலகப் போர் வரலாறே சான்று. நடக்கவிருப்பதன் முன்னோட்டமாக நாம் தமிழர் அமைப்பின் பால் தீவிர பற்று கொண்ட சிலர் தங்கள் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவ்ர்களை வந்தேறிகள் என்றும் தமிழ் தேசத் துரோகி என்றும் சமூக வலை தளங்களில் விமர்சிப்பதைக் காண முடிகிறது.

வன்முறை

பாரத பிரதமராய் இருந்தவர் மீது மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி அவருடன் சேர்ந்து பல அப்பாவித் தமிழர்களைக் கொன்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் உலகத் தமிழர்களின் தலைவராம், ஒருவரை மூளைச் சலவை செய்து மனித வெடிகுண்டாய் மாற்றி, அந்த நபர் மொழியின் பெயரால் தன்னோடு சேர்ந்து அப்பாவி உயிர்களை கோழைத் தனமாய் பலி வாங்குவது பெருமைப் பட வேண்டிய வீரச் செயலாம். தமிழனுக்கு வடிந்தால் இரத்தம், மற்றவர்களுக்கு வடிந்தால் தக்காளிச் சட்னியா?  அட தமிழர்கள் எத்தனை பேரின் இரத்தம் விடுதலைப் புலிகலாளேயே சிந்தப் பட்டிருக்கும்? அதற்கு யார் பதில் சொல்வது? இராஜீவ் மீதோ, காங்கிரஸ் கட்சியின் மீதோ எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. இந்தியாவைச் சுரண்டிச் சாகடித்தது காங்கிரஸ் தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் வெளிநாட்டு தீவிரவாத இயக்கம் இந்தியர் மீது நடத்திய தாக்குதலை இந்தியாவின் மீது நடந்த தாக்குதலாய் தான் பார்க்க வேண்டும்.

அதே போல் ஈழத் தமிழர்களை சகோதரர்களாக நினைப்பதில் தவறில்லை. அங்கு நடந்த கொடூரமான போர்க் குற்றங்களை எதிர்த்து குரல் கொடுப்பதும் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஏதோ காரணம் சொல்லி வன்முறையை நியாயப் படுத்தத் தொடங்கினால், அதை பெருமையாகக் கருதத் தொடங்கினால், பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நியாயம் கேட்கும் உரிமையை நாம் இழந்து விடுகிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. மொழிக்காக உயிர் எடுப்பதும் உயிர் கொடுப்பதும் உங்களுக்கு நியாயமாகப் படுமேயானால் சாதி, மதம் என்று அவரவர்களுக்கு முக்கியமான விஷயங்களுக்காக வன்முறையில் இறங்குவது அவர்களுக்கும் நியாயமாகத் தானே படும்? 

தனித் தமிழகம்

தமிழகம் சட்ட ரீதியாய் தனி நாடாகிறதோ இல்லையோ கொள்கை ரீதியாய் முற்றிலும் தனித்து நிற்கும். நாம் தமிழரின் செயல்பாட்டு வரைவு தமிழகத்தை ஒரு தனி நாடாகத் தான் பார்க்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்தியா எனும் வார்த்தை அதில் இடம் பெறுகிறதா என்று கூடத் தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் அதிகாரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அந்த ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சியில் அந்த மாநிலத்தின் பங்கும் முக்கியம். வேற்றுமையால் ஒன்று பட்ட நம் நாட்டை வேற்றுமையாலேயே வேரறுக்கும் போக்கு ஒவ்வொரு மாநிலமும் தன்னை தனி தேசமாகக் கருதுவது. இலங்கையில் நடந்தது உரிமைப் போராய், ஒரு உள்நாட்டு சுதந்திர போராகக் கூட இருந்திருக்கலாம். அதைப் பற்றி கருத்துச் சொல்ல நான் இலங்கையில் பிறந்து வளரவில்லை. ஆனால் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, தீவிரவாத இயக்கமாய் அறிவிக்கப்பட்ட ஓர் அமைப்பின் தலைவரை தமிழக மக்களின் தலைவன் எனக் குறிப்பிடுவது இந்திய இரையான்மைக்கு எதிரான ஒரு செயல் என்று மட்டும் என்னால் அடித்துக் கூற முடியும்.


சுருங்கச் சொன்னால் கம்யூனிசப் போராளி போல் சிந்திக்க தமிழகம் சீனாவோ, ஈழமோ அல்ல என்பதை நினைவில் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சியையும் அதில் தமிழகம் ஆற்ற வேண்டிய பெரும் பங்கையும் மனதில் கொண்டு திட்டங்களை வகுத்தால் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டுக்கும் நல்லது. வாழ்க தமிழ். வளர்க இந்தியா.

செவ்வாய், 16 மார்ச், 2010

ரஹ்மான்...

அண்மையில் இங்கிலாந்தின் தேசிய தொலைக்காட்சிக்கு இசை அமைப்பாளர் ரஹ்மான் அளித்த பேட்டியைக் கண்டேன். அதில் அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் - "நான் இசையமைப்பாளர் ஆகும் முன் வந்த அனைத்து திரைப்படங்களிலும் டோலக் வயலின் என ஒரே மாதிரியான சலித்துப் போக வைக்கும் (monophonic எனும் பொதுவான வார்த்தையை அவர் பிரயோகித்திருந்தாலும், நான் அதை மாற்றம் சற்றும் இல்லாத, சலிக்கத்தக்க இசை என்றே புரிந்து கொள்ள நேர்ந்தது) இசை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. நான் மேற்கத்திய இசையை திரைப்படங்களுக்கு பிரயோகித்ததன் மூலம் திரை இசைக்கு ஒரு புது ரத்தம் பாய்ந்தது. அது வரை திரை இசையை வெறுத்து வந்த இளைஞர்கள் என் இசையைக் கேட்க ஆரம்பித்தனர்..."

ரஹ்மான் அடி எடுத்து வைக்கும் காலத்தில் கோடி கட்டிப் பறந்தது இளையராஜா அவர்கள். அவரது இசையை "ஒரே மாதிரியான" "சலிக்கத்தக்க" இசையாக எப்படி ரஹ்மானால் குறிப்பிட முடிந்தது என்று எள்ளளவும் எனக்கு விளங்கவில்லை. எத்தனை அருமையான பாடல்கள், இன்று கேட்டாலும் நெஞ்சம் உருகும் அருமையான மெட்டுக்கள் அமைத்திருக்கிறார் இசைஞானி.

தொழிலில் போட்டியாளர்களை சில நேரங்களில் கடுமையாக விமர்சிப்பது மனித இயல்பு என்று வைத்துக் கொண்டாலும், அவர் குறிப்பிட்ட வார்த்தைகளின் அர்த்தம் என்ன? இந்திய இசையைப் பற்றி சற்றும் தெரியாத மேற்கத்திய மக்கள் இதைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? இந்திய இசை அடிப்படையற்ற சலிக்கும் இசை. மேற்கத்திய இசை இல்லாத எதுவும் இனிதாக இருக்க வாய்ப்பில்லை என்ற அபர்த்தம் தானே அனைவர் மனத்திலும் எதிரொலிக்கும்? இந்தியாவின் கலாச்சாரத்தை, திறமையை முன்னிறுத்தும் ஒருவர் இது போல் குறிப்பிடுதல் என்ன நியாயம்? இது வரை தன்னடக்கம் மிக்கவர் என்று அவர் மேல் வைத்திருந்த அபிமானமும் மரியாதையும் சென்ற இடம் தெரியவில்லை!

திங்கள், 1 மார்ச், 2010

வங்கிகள் எனப்படும் வஞ்சகர்கள்!

"பாங்கு கடனை எல்லாம் நம்பாதப்பா..." - தந்தைமார்களும், பாட்டன்மார்களும் அடிக்கடி குறிப்பிடும் வாக்கியம் இது. நவீன யுகம், கடன் சார்ந்த பொருளாதாரம் என்று பல நவீன வாசகங்கள் திசையெங்கும் எதிரொலித்தாலும் மேற்கண்ட வாக்கியம் இன்றளவிலும் உண்மையாகவே விளங்குகிறது. ஏனோ நியாயமான தேவைகளுக்கு பொறுப்புணர்ச்சியுடன் கடன் வாங்கும்/வாங்க நினைக்கும் மக்களுக்கு வங்கிகள் இன்முகம் காட்டுவதே இல்லை. எனக்குத் தெரிந்து முந்தைய தலைமுறைக்கும், தற்போதைய தலைமுறைக்கும் உள்ள வேறுபாடு ஒன்று தான். முன்பு வங்கிகள் கடன் கோரிக்கைகளை நேரடியாக நிராகரித்து வந்தனர். இப்பொழுது, தருவதாய்க் கூறி நேரத்தைக் கடத்தி பிறகு இல்லை என்பதை எப்படியெல்லாம் வேறு விதமாகக் கூற முடியும் என சிந்தித்து, அதில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு மிகப் பொருந்தி வரும் சாக்கைக் காரணம் காட்டுவது புதிய நீதி ஆகி விட்டது.

நான் சமீபத்தில் கேட்ட சில முன்னுக்குப் பின் முரணான வாசகங்கள்:

முன்: "உங்களுக்கு எண்பது லட்சங்கள் வரை கடன் வழங்கப்படும்"
பின்: "நீங்கள் வாங்க நினைக்கும் நிலத்திற்கு வாரிய அங்கீகாரம் இல்லை. அதனால் கடன் கொடுக்க இயலாது"

முன்: "சொத்துக்களை அடமானமாக வைத்தால் தாராளமாகக் கடன் தருவோம்"
பின்: "சொத்து நிலமாக இருந்தால் கடன் கொடுப்பதில்லை. ஒரு குடியிருப்பு வளாகம் (வீடோ, விடுதியோ) இருந்தால் நிச்சயம் கடன் கொடுக்கப்படும்.

முன்: "வீடு இருந்தால் போதும். புதிது பழையது என்றெல்லாம் பேதம் எங்களுக்கு இல்லை. என்ன இருந்தாலும் நிலம் இருக்கிறதல்லவா. நிச்சயம் கொடுப்போம்"
பின்: "வீடு சற்று பழையதாக உள்ளது. இது போன்ற சொத்துக்களுக்கு கடன் தருவதில்லை"

முன்: "உங்கள் வருமானத்தை வைத்துப் பார்க்கும் பொழுது எளிதாக முப்பது லட்சங்கள் வரை தனி நபர்க் கடன் வழங்க முடியும்"
பின்: "நீங்கள் இந்தியாவில் பணி புரிய வேண்டும்"

முன்: "எங்கள் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ள அனைவருக்கும் கடனுதவி வழங்கப்படும்"
பின்: "நீங்கள் தற்போதய பணியில் ஏழு மாதமாகத்தான் உள்ளீர்கள். அதனால் தங்களுக்குக் கடன் தர இயலாது"

எத்தனை வாசகங்கள், அதில் தான் எத்தனை வஞ்சனைகள்... இந்த நிலை நீடித்தால் வங்கிகள் என்பதை வஞ்சகர்கள் என மாற்றினால் மிகப்பொருத்தமாக இருக்கும்.

வியாழன், 15 அக்டோபர், 2009

அகராதியில் ஒரு மாற்றம் தேவை...

பணம், புகழ் மட்டுமல்லாது பல ஊர்களிலும் நாடுகளிலும் கோலோச்சிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே... பணம், புகழ் என்ற வட்டத்தைத் தாண்டி பலர் மனதை இந்த மனிதர் கொள்ளையடித்த காரணம் - வெள்ளித்திரைக்கு அப்பாற்பட்ட அவரது குணம்... ரஜினி என்கிற தனி மனிதர் தனக்கென வகுத்துக்கொண்ட பாதை, கடை பிடிக்கும் நெறிகள், எளிமை, அகத்தூய்மை இவை அனைத்தும் அவரை ஒரு தனிப் பரிமாணத்திற்கு உயர்த்தி விட்டன என்று கூறினால் அது மிகை ஆகாது... நரைத்த தலையுடனும், மிகச்சாதாரண உடையிலும் பவனி வரும் இந்த கருப்பு மின்னலைப் பற்றி தெரியாத ஒருவரைத் தேடிப் பிடித்து (சற்று கடினம் தான்) அவரிடம் இவர் ஆசிய அளவில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டார் என்று கூறினால் நிச்சயம் நம்ப மறுத்து விடுவார். சுருக்கமாய்ச் சொன்னால் எளிமையின் வாழும் உதாரணம் இவர்.

சமீபத்தில் நடந்த நடிகர் கமலஹாசனின் பாராட்டு விழாவில் ரஜினி ஆற்றிய உரை நெஞ்சை நெகிழச்செய்தது என்று கூறினாலும் அது இந்த மாமனிதனின் பேச்சில் இருந்த நேர்மையையும், அடக்கத்தையும், நற்குணத்தையும் முழுமையாக விளக்கி விடாது, விட முடியாது... ஆசிய அளவில் இவருக்கு இணையான ஊதியமும், நேயர்களும் உள்ள ஒரே நடிகர் ஜாக்கி சான் மட்டும் தான். அவரும் பல மேலை நாட்டுப் படங்களில் நடிப்பதாலேயே ரஜினியுடன் போட்டியிட முடிகிறது. இத்தனைக்கும் ரஜினி பிரதானமாக நடிப்பதென்னவோ தமிழ்த் திரைப்படங்களில் தான்... ஒரு மாநிலத்தில் மட்டுமே அதிக அளவில் பேசப்படும் மொழியை ஆதாரமாகக் கொண்ட ஒரு திரைத்துறையில் ஒருவர் உலக அளவில் புகழும், ரசிகர் உள்ளத்தில் இடமும் பிடித்திருப்பது வேறெங்குமே காணக்கிடைக்காத அதிசயம் என்றே கூறலாம்...

அப்படி ஒரு நிலையில் இருக்கும் ஒருவர், சற்றும் கர்வமோ, திமிரோ, பகட்டோ, படாடோபமோ இல்லாமல் நான் இன்னாரைப் பார்த்து தான் நடிக்கக் கற்றுக் கொண்டேன் என்று தனக்கு நேரடி போட்டியாக கருதப்படும் ஒருவரை குறிப்பிடுதல், அதுவும் அந்த நடிகருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் முன் வெளிப்படையாய்க் கூறுவது வேறெங்கும் நாம் கண்டிருக்க முடியாது.

இது தவிர பலரும் கவனிக்க மறக்கும் மற்றொரு விஷயம், அவரது கவனிக்கும் திறன்... மற்றவரிடம் இருக்கும் திறமையை எந்த விதமான தயக்கமும் இன்றி மனதாரப் பாராட்டி மகிழும் இவரது வெள்ளை உள்ளம், பிரபு தேவா நடன நிகழ்ச்சியின் போதும், இசை ஞானி பேசிய போதும் வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்தது. தான் என்ற அகந்தையை வென்றவன் ஞானி ஆகிறான் என்ற விவாதம் சரியானால், தலைவர் ஒரு ஞானி என்பது திண்ணம்.

குழப்பவாதி, நிலையான சிந்தனை இல்லாதவர், திறமையற்றவர் என்று இவர் வளர்ச்சி பிடிக்காத பலரும் பல விதமாய் அவதூறுகள் பேசினாலும் உண்மையில் இவர் மற்றவர் நலமும், வளமும் மட்டுமே கோரும் ஒரு மிக உயரிய மனிதர் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. தமிழ் அகராதியில் ரஜினி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு அதற்கு பொருளாய் அளவில்லாத அடக்கமும், நிகரில்லாத் தனித்துவமும், கள்ளமில்லா உள்ளமும், உணர்வுப்பூர்வமான உண்மையும் வானளவு கலந்து செய்த கலவை என்ற விளக்கம் இடம் பெற வேண்டும். இதுவே இந்த மனிதருக்கு தகுந்ததோர் மரியாதையாய் இருக்க முடியும். வாழ்க சூப்பர் ஸ்டார். வளர்க அவரது புகழ்!