கவிதைகள்(?) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள்(?) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மனசாட்சி

பேசாத சொற்களின் அர்த்தம்
நீ மட்டும் உணர்ந்திடுவாய்  நித்தம்
காண்பதே கடினம் என்றாலும்
காணும் காட்சியெல்லாம் உந்தன் கோலம்
நித்திரையில் வேற்றுலகம் காண்பித்தாய்
நீளும் நாட்களிலே சிந்தை நிறைத்திட்டாய்
எனை விடவும் என்னை நீ நன்கறிந்து
நான் என்றால் நீயும் என்றாகிவிட்டாய்

வியாழன், 28 மார்ச், 2013

அருமை மகளுக்கு...

அழுகைச் சுரத்தில் ஆனந்தம் உணர்த்தும் ஓர் அதிசயப்பிறவி நீ;
கழிவறையென என் கால்ச்சட்டை நனைக்கும் என் செல்லக் கண்மணி;
உறங்கும் தருணமும் உள்ளம் கவரும் என் அழகிய மின்மினி;
உருவத்தில் எனை ஒத்து சருமத்தில் மலரொத்த ரோஜா இதழும் நீ;
பிறந்தே என் பிறப்புக்கு முழுமையும் தந்த நற்பிரம்மனின் சிற்பம் நீ;
இனி எந்தன் கனவிலும் நினைவிலும் உறையும் என் இருதயத் துடிப்பும் நீ!

திங்கள், 7 மே, 2012

வெயில்

மாசம் எட்டாச்சு மறந்த வெயில் வந்தாச்சு
மாசு போலப் படிஞ்ச மேகம் வெலக்கி நீலம் போட்டாச்சு
அழுது வடிஞ்ச மரமெல்லாம் துளிர்த்து மொட்டு விட்டாச்சு
அலுத்துக் கெடந்த மக்களெல்லாம் சிலித்து வெளிய வந்தாச்சு!
தூங்கிக் கெடந்தியோ தூர தேசம் போனியோ
சூரியனே நீ தான் சூடு கொஞ்சம் மறந்தியோ...
சுறுசுறுப்பா எழுந்திரு மேகக்குப்ப பெறுக்கிரு
எட்டு மாசம் தொலையாம எங்களுக்கும் எதம் குடு!

வெள்ளி, 13 ஜனவரி, 2012

காதலி


மனதால் பேசி கண்களால் கவர்ந்து
இதழால் மயக்கி இதயத்தால் நினைத்து
அங்கங்கள் குழம்ப அகத்திருந்து காதலிப்பாள்...

செல்லமாய் கோபித்து சோகத்தை மறக்கடித்து
சில்லென்று சிரித்து சேட்டைகள் சில செய்து
உடனிருக்கும்  நொடிகளில் உலகம் மறக்கச் செய்திடுவாள்...

என்னவளே எனக்காகப் பிறந்தவளே எனதருமைக் காதலியே
எந்நாளும் எனைத் தொடரும் நினைவுகளின் உறைவிடமே
எங்கும் எப்பொழுதும் இரு... என்னக்காய், எனக்கே, என்னுடன்!

சனி, 31 டிசம்பர், 2011

2012

முடிவிலி எனத் தோன்றும் காலத்தை
முடிந்து தொடங்கும் ஆண்டுகளாய்ப் பிரிக்க
இன்பங்கள் பெற்று, பாடங்கள் கற்று,
பயணங்கள் மேற்கொண்டு, பலரையும் சந்தித்து,
சிரித்து, அழுது, சிலிரித்து, உழைத்து 
களைத்து, மறுகிச் சேர்த்த நினைவுகளை
அசை போடக் கிடைத்ததாம் ஆண்டிறுதி...
மனிதம் பெருக்கி மாட்சி பெற்று
சிறுமை தொலைத்து சிறந்து செழிக்க
மற்றுமோர் சந்தர்ப்பமாய்ப் பிறக்குமாம் புத்தாண்டு...
கொண்டாடிக் குதூகலித்துப் புதிதாய்ப் பிறப்போம் 
பிறக்கும் இவ்வாண்டினிலே மேம்படுவோம், மேம்படுத்துவோம்!
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

நட்பு

கைகள் தோள் தொட
அக்கறை உளம் தொடும்!

வியாழன், 28 அக்டோபர், 2010

கடற்கரையில் ஓர் காதல்!

வெண்ணிற ஆடை அழகியவள்
பொன்னிறக் காதலனைக் கொஞ்ச
பொங்கி வந்து அணைக்கும் அந்தப்புரமாம்
அந்தப் புறம் ஓர் தடம்
இந்தப் புறம் ஓர் தடமென
பிரிந்து பொருள் தொலைத்த பாதங்கள்
பிரியமெனும் பொருள் சேர்க்க
பிரிந்து நடக்கப் பொறுமை இழக்க
கால்த் தடங்களில் ஓர் காதல் தடம்!

ஞாயிறு, 2 மே, 2010

நண்பா உனக்கு ஒரு வெண்பா!

எல்லாம றிந்துணர்ந்து தானே யுரைப்பானே
எல்லோரும் நகைத்தும் பெருமிதங் கொள்வானே
இல்லாப் புகழை யுருவாக்கத் தவிப்பானே
கல்லைக் கனியாக்கு மிவன்!

குறிப்பு: தலைப்பு வைரமுத்து கவிதை ஒன்றிலிருந்து சுட்டது! :)

சனி, 17 அக்டோபர், 2009

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தெள்ளிய தீபமது திக்கெட்டும் ஒளிர
மீளாத் துயர்களவை இருளுடன் விலக
மத்தாப்பு கண்ட மழலையின் சிரிப்பாய்
மனமது மகிழ்ந்து வாழ்வது இனிக்க
பொன்னாய் ஒளிரட்டும் இந்தத் திருநாள்
தேனாய் இனிக்கட்டும் இனி வருநாள்!

வியாழன், 15 அக்டோபர், 2009

பணம்

பித்து முற்றிப் பிறிதொரு சிந்தை மறைத்து
எத்திக்கும் செல்லத் துணிந்தேன் எல்லை மறந்து
மானத்தின் மதிப்பும் நேரத்தின் அருமையும்
மண்ணிற் புதையுண்டு புதையும் உடல் பெருத்து
ஞாயிறு திங்களுக்கும் திங்கள் ஞாயிறுக்கும்
பேதம் மறந்து நொந்துச் சேர்த்தேன்
மாதம் எண்பது ஆயிரம் காகிதங்கள்...

சனி, 10 அக்டோபர், 2009

இசை வாழ்த்து!

அழுத்தமாய் அணைத்த வீணையின் குரலே
மெல்லியதோர் முத்தமிட்ட மேற்கத்திச் சந்தமே
தென்றலாய் வருடிய குழலின் சுவாசமே
நெஞ்சு நெகிழ்வித்த நாதஸ்வர நாதமே
தேனாய் இனித்த தேவதையின் குரலே
கண்ணீரைக் கொள்ளையடித்த கணநேர நிசப்தமே
இறையே இசையே எனைத் தொலைத்தே
இயலும் இயல்பும் மறந்து நின்றேன்!

வெள்ளி, 2 அக்டோபர், 2009

அலையின் அனுபவம்

கரை தொட்டுக் கண நேரம் கண்ணயர
திரை கடலில் மன்றாடி நான் தவிக்க
கரை நின்ற காதலன் காதலியைக் கொஞ்சக்கேட்டேன்
தன் காதல் எனைப் போல் விடா முயற்சி கொண்டதாம்...

ஓடியது ஓடி வலுவும் வழிந்தோடி
உருவிழந்து தவித்து சோர்ந்து நான் சாய
சுனாமி வருவதாய் எச்சரித்தான் விஞ்ஞானி
விலகும் நீர் வெகுண்டு வெள்ளமாய் மாறுமாம்...

அடி மேல் அடிபட்டு அடி சிதைந்து
நுரைகளாய் வெடித்து நான் வெம்பிச் சிதற
மண் வீடு கட்டிய மழலை சிரித்தாள்
கண்ணீர்த் தடத்தில் ஓர் கனவுக்கோட்டை...

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மழைக்காதலி...

மைநிறை பேனா காகித்தக்காதலி தேட
பைந்தமிழ் வர்ணனையின் கருவாய் கனவுக்காதலி...
எண்ணத்துளி கோர்த்து வண்ணம் வடிக்குமுன்
எங்கிருந்தோ காகிதம் வந்ததோர் ஈரத்துளி...
ஒரு துளி பல துளிகளாய் மாறி
ஒரு கோடித்துளிகளென வந்தாள் மாரி...
விழி உயர்த்திப்பார்த்ததில் கண்களில் நீர்
கண்ணீரல்ல கண்களை வருடிய நீர்!
எண்ணங்களின் ஆழங்களில் ஓர் தேடல்
கண்களை மூடிக்கண்மணி குணம் நாடல்...
பார் பரவும் மழை போலே
உலகை அறிய வேண்டும் அவள்...
வடிவங்கடந்த வடிவான நீர் போலே
வடிவழகின் இலக்கணமாக வேண்டும் அவள்...
கதிர் பிரித்த கடைக்கோடி சிகப்பாய்
வெட்கம் கொள்ள வேண்டும் அவள்...
புல்வெளி மேல் தூவும் சாரலாய்
மென்மை கொள்ள வேண்டும் அவள்...
அடர் மழை ரீங்காரம் போலே
மனம் வருட வேண்டும் அவள்...
உயிரூட்டும் வான் நீர் போலே
தாய்மை கொள்ள வேண்டும் அவள்...
உன் நகலாய் ஒருவள் எதற்கு
உடல் தீண்டி உயிர் தொடுபவளே... மழையழகே...
நீயே வா என் காதலியாய்
என்னில் நீ என்றும் இருக்க!


வியாழன், 19 பிப்ரவரி, 2009

நரமாமிசபட்சணி

ருசி அறியாப்பசி தீர்க்க
நிசி தோற்கும் நெஞ்சங்கொண்டு
தொப்புள் கொடியறுத்துத்தின்பவன் மனிதனோ
மொட்டில் உயிரிழக்கச்செய்வதும் மனிதமோ!

பனிப்பெண்ணே வருக!

தூய்மையின் இலக்கணமே தூய வெண்பனித்துளியே
சில்லிடும் சித்திரமே சிலிர்க்கும் நீரோவியமே
மௌனமாய் பொழிபவளே மென்மையின் மறுபெயரே
ஆண்டிரண்டு காக்கவைத்து அரவணைத்த அதிசயமே
உன்னிடத்தில் நானும் என்னிடத்தில் நீயும்
உணர்வில் குளிர்ச்சி உடம்பிலோ குளிர்
நீயிருக்கும் இடமறிந்தும் மெய்வருடும் நொடியறிந்தும்
உனை நாட மனமில்லை நடுங்குமெனுடலுக்கு
வெள்ளிச்சிதறலே வெப்பமறுத்துக்கொல்பவளே
மனதிற்கினியவளே மந்தம் புகுப்பவளே
மாயக்கண்ணனவன் மனதிலென்ன கொண்டானோ
மதுரமும் விஷமும் எதிலும் உண்டென்றானோ?

இலையுதிர் காலம்!

குங்குமச்சிகப்பில் கோலமிடும் மஞ்சள்
வரப்போகும் பட்டினியால் ஓலமிடும் உயிர்கள்
இலையுதிர் காலம்!

ஏமாற்றம்

நான்கே மனிதரும் நாலாயிரம் கொசுக்களும் சாட்சி கூண்டிலிருக்க
விநாடி முள்ளுடன் பொருமையிற்போட்டி...
தோல்வியும் விரும்ப முடியா விருப்பமற்ற போட்டியில்
நோகக்காரணங்களையும் பழிக்க மனிதர்களையும்
சோகக்கோலம் பூண்டு தேடுமென் மனதும்
தோற்று பழக்கமற்ற இறுமாப்பில் விநாடி முள்ளும்...

தாயகத்திலிருப்பதுணர்த்த ஈராயிரம் காரணமிருந்தும்
துவாரபாலகர்கள் ஏனோ இன்முகம் காட்டவில்லை
உட்கார வசதி மறுத்த சர்வதேச விமான நிலையமும்
உறக்கம் மறக்க உற்சாக பானமுண்ட ஓட்டுனனும்
உறக்கத்திற்கு காவலை காவு கொடுத்த காவலாளிகளும்
உலகத்தை சுருக்க உள்ளங்கை சுருக்கிய இரயில்துறையும்
உள்ளந்நிறை உற்சாகத்தை உருவின்றி சிதைத்து விட
போட்டியிடத்தான் செய்கிறோம்...
விநாடிகளை நினைவுகளால் தள்ளும் நானும்
விநாடியின் விளக்கம் மறவா விநாடி முள்ளும்!

தனிமைக்கவிதை

கவி படைக்க அமைதி தேடி
மனித வாடை முற்றும் மறந்து
அமைதி தனையே அணியாய் பூண்டு
சிந்தனைக்கு வடிவளித்து சிற்பமாக்க முனைந்தேன்...

ஜகத்தின் அமைதிக்குஞ்சேர்த்து அகத்தின் ஓலமொலிக்க
அர்த்தமற்று வாழும் எனைக்கண்டது நகைக்க
விதேசத்திலமர்ந்து விண்ணை வெறித்த கண்களுள்
பூமிப்பந்தின் மறுபுறமிருக்கும் தாயுந்தாய் நாடும்...

தாக்கத்தை வெளிப்படுத்த தன்னந்தனியே வந்தமர்ந்து
தனிமையுணர்ந்து தனிமயாலேயே தாக்கப்பட்டுத்திரும்புகையில்
கவியெழுதும் முயற்சி வெல்லத்தான் செய்ததுகண்ணீர்த்துளிகள் மைத்துளிகளாய்... கண்ணீர்ச்சிதரல்கள் கவிதைகளாய்!

கடற்கரை

அலை நனைத்த கடற்கரையில்
அகம் தொலைத்து நடை தொடர்ந்தேன்...
கால்கள் இரண்டே ஆயினும்
அவை எனதே ஆயினும்
வண்ணத்து பூச்சி கொண்ட
வண்ண திட்டுக்களென தடங்கள்!
ஒரு பூச்சி இறகுறைந்தும்
ஒவ்வொன்றும் ஓர் கவிதை
சோகத்தில் சொந்தங்கள் சிரித்த அடி
மகிழ்ச்சியில் நடை மறந்த அடி
மங்கையர் பார்க்க மன்மதனென ஓரடி
பரபரப்பில் எனை மறந்த நூறடி
அடி மேல் அடி தொடர்ந்தும்
அடி மேல் அடி வைத்தேன்
அலை நனைத்த கடற்கரையில்
அகம் தொலைத்து நடை தொடர்ந்தேன்...

உலகப்பொதுமறை!

மனிதம் கொன்று
மனிதர் வளர்த்தல் வேண்டுமோ?
மனிதம் கொன்றவனை
மனிதனென்றும் அழைத்தல் வேண்டுமோ?