ஓடும் வாகனத்தின் சக்கரங்கள் போல் நகர வாழ்க்கை மாறி, தொடக்கத்தையோ முடிவையோ தெளிவாய் தரம் பிரிக்க முடியாத சுழற்சிக்குள் நாம் சிக்கி கொண்டு விட்டதை நான் விளக்கி கூறவே அவசியம் இல்லை. அநேகமாய் மற்றோர் வாகனத்தின் மற்றோர் சக்கரமாய் தான் நீங்களும் ஓடிக்கொண்டிருப்பீர்கள். ஓட்டத்தின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க மெதுவாய் செயல்படும் எதுவுமே நம் விரும்பும் விஷயங்கள் பட்டியலில் கடை கோடியில் கூட இடம்பெறுவதில்லை. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் - கடிதங்கள்.
குழந்தை பிறந்தது, புதியதாய் எடுத்த மாங்காய் ஜரி போட்ட அரக்கு புடவை, கணவர் அலுவலகத்தில் கிம்பளம் வாங்கும் கிட்டு மாமா, இரட்டை வட சங்கிலியில் முத்துக்கள் சேர்த்து கட்டியது, பக்கத்து வீட்டு சரோஜா மகள் ஓடி போன கதை என்று அவரவர் எண்ணங்களை அவர்கள் கைகளினாலேயே புரியும்படியோ, புரியாத மாதிரியோ எழுதி அனுப்பிய நாட்கள் கிட்ட தட்ட மறைந்தே போய் விட்டன. மறந்தே போன ஒரு சொந்தத்தை ஒரு கிலோமீட்டருக்கு சற்றே குறைந்த தூரத்து சொந்தத்தின் திருமண விழாவில் சந்திக்கையில் "உங்களுக்கு நான் கடிதாசி போட்டுட்டே இருந்தேனே... கெடைக்கலையா... தபால் துறையே சரியில்ல" என்று பழியை அரசாங்கம் மேலே போட்டு நைசாக நழுவும் வசதியும் கூட இப்பொழுது கிடையாது. இதே கதையை இன்று கூறினால் "யாருக்கு யாரோ" சாம் ஆண்டர்சன், கனடாவில் இருக்கும் தன் பழைய காதலி மஞ்சுவிற்கு கடிதம் எழுதியதாய் கூறும் போது பார்பவர்கள் விழுந்து புரண்டு சிரிப்பதை போல் சிரிப்பர்.
"நம்ம கோபால் இருக்கானே... எப்பேர்பட்ட கிறுக்கல் கடிதாசியா இருந்தாலும் தெளிவா படிச்சு சொல்லிருவான் அவ்ளோ கெட்டிக்காரன்", "என் பொண்ணு மல்லிகா முத்து முத்தா எழுதுவா... அவ எழுதுறத பாக்கவே கடிதாசி போட சொல்லுவோம்னா பாத்துக்கோங்களேன்" என்ற ரீதியிலான பாராட்டுக்களும் கடிதங்களுடன் சேர்ந்தே மடிந்து போனது வேதனைக்குரிய விஷயம். "என் பைய்யன் ஈமெயில் எழுதுறதுல எக்ஸ்பர்ட்" என்று பாராட்டினால், அதை கேட்பவர் தன் குடும்பத்திலிருந்தே மூன்றரை அடி உயரத்தில் ஒரு அங்குல தடிமனான கண்ணாடி அணிந்த ஒரு சிறுவனை அழைத்து... "இவன் கூட ஈமெயில் அனுப்புறதுல எக்ஸ்பெர்ட் தான். கண்ணா... அந்த தாத்தாக்கு உன் ஈமெயில் ஐ.டி சொல்லு..." என்று ஜாடையாய் குத்திக்காட்டுவார். அந்த வாண்டும் பதிலுக்கு "ஜிமெயிலா, யாகூவா" என்று கேட்டு ஏகத்திற்கும் நெளிய வைத்து விடும்.
இவை அனைத்தையும் தாண்டிய ஒரு சிறப்பு கடிதங்களுக்கு உண்டு - உயிர். அளவு நிர்ணயிக்கப்பட்ட ஒரு தேசவரைக்குட்பட்ட (ஆங்கிலத்தில் இன்லாண்டு) கடிதத்தில் அளவு கடந்த பாசத்துடன் மடிக்க கொடுக்கப்பட்டிருக்கும் பகுதியில் கூட விடாமல் எழுதப்பட்ட நுண்ணிய எழுத்தில் தெரியும் அம்மாவின் அன்பு... குழம்பிய நிலையில் எழுதப்பட்ட கடிதத்தில் இருக்கும் திருத்தங்கள்... பாரத்துடன் எழுதப்பட்ட கடித்தத்தில் முத்து முத்தாய் காய்ந்து நிற்கும் கண்ணீர் துளிகள்... இப்படி கடிதத்தின் ஒவ்வொரு குணத்திற்கும் பின்னால் ஒரு கதை உண்டு, கவிதை உண்டு. என்ன தான் போல்டு, இடாலிக்ஸ், அண்டர்லைன், ஸ்மைலீஸ் என்று உணர்வை பிரதிபலிக்க வழிகள் இருந்தாலும் அவை அனைத்துமே அலங்கரிக்கப்பட்ட எழுத்துக்களாயிருக்குமே தவிர ஒரு போதும் உயிர் பெற்று நம்மிடம் பேசுவதில்லை. என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு எதிர்பாரா தருணத்தில் வந்த கடிதத்தை பல வருடங்கள் கழித்து பரண் மேல் இருந்து எடுத்து பக்குவமாய் பிரித்து படிப்பதிலிருக்கும் சுகம் தனி தான்... அதை ஏன் நம் நெருக்கமானவர்களுக்கு மறுக்க வேண்டும்?
பி.கு: இவை எல்லாம் கூறி விட்டு நீ இணையத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு... கடிதம் எழுத தொடங்கலாம் என்றிருக்கிறேன்... தாயிற்சிறந்த கோவிலும் இல்லை... தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனால் அவர்களிடம் இருந்து தொடங்கலாமென திட்டம்... :)
புதன், 18 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)