ஞாயிறு, 27 மே, 2018

பொட்டு

"அம்மா ப்ளீஸ்... திஸ் இஸ் நாட் ஃபேர்!" எண்ணெய்  தடவி சீராய் இழுத்து வாரப்பட்ட கூந்தலை அநாயசமாக குதிரைவால் கொண்டையாய் முடிந்து கொண்டே அங்கும் இங்கும் அலைபாய்ந்த படி அம்மாவிடம் சீறினாள் ஐஸ்வர்யா. இன்று அவள் உயர்நிலை பள்ளிக்குச் செல்லும் முதல் நாள். புதிய பள்ளி, புதிய நபர்கள், புதிய சீருடை, புதிய மாணவர்கள் என எல்லாம் புதிது - அம்மாவின் இந்த அனத்தலைத் தவிர.

"சொன்னா கேளு ஐஷு. பொண் குழந்தைங்க பொட்டு இல்லாம இருக்கக் கூடாதும்மா... அது அமங்களம். வீட்டுக்கு ஆகாது! அம்மா சொன்னா கேளுடா...ப்ளீஸ்..." அம்மாவும் விடாப்பிடியாய் சாந்துக் குப்பியுடன் ஐஸ்வர்யாவைப் பின்தொடர்ந்தாள்.

"யூ நோ வாட்... திஸ் ஈஸ் ஸோ அந்நாயிங்..." அம்மா விட்டுக் கொடுக்கப் போவதில்லை என உணர்ந்து சலித்துக் கொண்டே சரணடைந்தாள் ஐஸ்வர்யா. வழக்கம் போல பள்ளிக்குள் நுழைந்ததும் பொட்டை அழித்து விட வேண்டும்! நெற்றியை வேண்டா வெறுப்பாய் நீட்டினாள்.

அம்மா ஒரு குட்டித் திலகமிட்டு வாஞ்சையாய் கன்னம் வருடி "இப்போ தான் மஹாலக்ஷ்மி மாதிரி இருக்க" என்று புன்னகைத்தாள்.

"வாட்டெவர் அம்மா..." வெடுக்கென்று பள்ளிப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் ஐஸ்வர்யா. அம்மாவின் முகம் வாடியதை அவள் பார்க்கவில்லை; உணர்ந்தாள். ஆனால் அவள் மனதைப் புரிந்து கொள்ளாத அம்மாவிற்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் தேவை தான் எனத் தோன்றியது. அவசரமாய் காலணிகள் அணிந்து அம்மாவிடம் கூறாமல் படார் என கதவை அடைத்து பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினாள். மெல்பர்னின் இதமான கோடைக்காலக்  காலையை ரசிக்க விடாமல் மனதில் அவளது வளர்நிலைப் பள்ளி நினைவுகள் அலைமோதின.

முதல் ஒன்றிரண்டு நாட்களில் "வாட் ஈஸ் தட்?" என்று தொடங்கும் கேள்விகள், இரண்டாம் மூன்றாம் மாதங்களில் "யூ லுக் ஃபன்னி..." நையாண்டிகளாய்  பரிணாமித்து, கல்வி ஆண்டு முடியும் தருவாய்களில் ஆளுக்கு ஒரு முறை வந்து பொட்டைத் தொட்டு "டேக்" செய்வது,  நடந்து செல்லும் போது கால்களைத் தட்டி விடுவது என விஸ்வரூபம் எடுப்பது ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் அவள் அனுபவித்த நரக வேதனை. பெற்றோர்கள் தலையிட்டும், ஆசிரியர்கள் குறுக்கிட்டும் பெரிதாய் எந்த மாற்றமும் வரவில்லை. ஆஸ்கர் அமைதியாய் இருந்தால் ஆண்டி, பெத்தனியைக் கண்டித்தால் ஸ்டெஃபனி என ஏதோ ஒரு வகையில் தொல்லை இருந்து கொண்டே இருந்தது.

எல்லாவற்றிற்கும் காரணம் பாழாய்ப் போன இந்தப் பொட்டு. மஹாலக்ஷ்மியாம் மஹாலக்ஷ்மி. பள்ளியில் நுழைந்ததுமே அவசரமாய் பெண்கள் ஒப்பனை அறைக்குச் சென்று அவள் பொட்டை அழிக்க ஐஸ்வர்யா மறைந்து ஆஷ் வெளிவந்தாள். புன்னகையுடன் முகத்தை மற்றோர் முறை கண்ணாடியில் பார்த்து விட்டு அவள் வகுப்பைத் தேடிச் சென்று தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தாள். ஆஸ்திரேலிய சொல்லாடல்கள் கலந்த ஆங்கிலமும், சக வெள்ளைக்கார மாணவர்கள் கடினமின்றி அழைக்கக் கூடிய ஆஷ் என்ற பெயரும் தனக்கு இந்தப் புதுப் பள்ளியில் ஒரு அங்கீகாரத்தையும், உரிமையையும் பெற்றுத் தரும் என்று பெரிதும் நம்பினாள். எல்லா விதத்திலுமே அவர்களைப் போலவே இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டாள்.

வகுப்பு தொடங்கும் நேரம். ஐஸ்வர்யாவின் வகுப்பாசிரியை வகுப்பின் முன் வந்து சரளமான ஆங்கிலத்தில் மாணவர்களை வரவேற்று, வாழ்த்தி, பின் சுவாரசியமான விஷயம் ஒன்றைக்  குறிப்பிட்டார். "எல்லா ஆண்டுகளுமே எனக்கு சிறப்பானவை என்றாலும் இந்த ஆண்டு நான் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளேன். காரணம் நம் வகுப்பில் நம்மோடு இணையப்போகும் ஒரு மாணவி. 'ஸ்பெல் பீ' போட்டியில் ஆஸ்திரேலிய அளவில் முதலிடம் பிடித்து, அதோடு மட்டும் நிற்காமல் அறிவியல் போட்டிகள், ப்ரோக்ராமிங், பாட்மிண்டன் என பல துறைகளில் பரிசுகளைக் குவித்த ஒரு ஆல் ரவுண்டர்..."

ஐஸ்வர்யாவிற்கு அதற்கு மேல் எதுவுமே கேட்கவில்லை. பொதுவாகவே இது போன்ற அதி மேதாவி மாணவர்களுக்கு திமிர் அதிகமாய் இருக்கும். பற்றாத குறைக்கு மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு வேறு. அனைவருக்கும் கடவுள் ஆகி விடுவாள். அநேகமாய் ஒல்லியாய், உயரமாய், நீலக் கண்ணும், நீளமான தங்க நிறக் கூந்தலும் கொண்ட ஒரு 'ஹாட் பிளான்ட்'. இனி என் பாடு திண்டாட்டம் தான். ஒரே ஆறுதல் இந்த முறை பொட்டு ஒரு பிரச்சனை இல்லை. ஹ்ம்ம்.

இப்படி ஐஸ்வர்யா யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தப் பிரபல மாணவி உள்ளே நுழைந்தாள். "இது தான் நான் குறிப்பிட்ட மாணவி... கயல்விளி. எல்லோரும் அவளை கைதட்டி வரவேற்கலாம்" என்று ஆசிரியர் கூற கயல்விழி புன்னகையுடன் தலைவணங்கி வரவேற்பை ஏற்றுக்கொண்டாள். ஒரு சிறிய பொட்டும், திருநீற்றுக் கீற்றும் அவள் நெற்றியை அலங்கரித்திருந்தன.

இவளா அது? ஐஸ்வர்யாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. கயல்விழி என்றால் அநேகமாக தமிழ் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். இப்படிப் பொட்டும் திருநீறும் அணிந்து கொண்டா அத்தனை போட்டிகளில் கலந்து கொண்டாள்? என் பெயரை கடித்து விழுங்கும் நபர்கள் இவ்வளவு கடினமான பெயரை ஏறத்தாழச் சரியாகச் சொல்கிறார்கள். இவளை யாரும் 'டேக்' செய்யவில்லையா? என்ன நடக்கிறது இங்கே?! எனக்கு மட்டும் தானா இந்த அநீதி? முதல் நாளே இவ்வளவு உணர்வு ரீதியான, உளவியல் ரீதியான தாக்கங்களை எதிர்பார்க்காததால் அவளால் எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை. இடைவேளை வந்ததும் அவளிடமே கேட்டு விட வேண்டும்.

***
இடைவேளை வந்ததுமே கயல்விழியை மாணவர்கள் சூழ்ந்து கொண்டனர். பரஸ்பர அறிமுகங்கள், மெல்லிய சிரிப்பொலிகள், பிரமிப்பு, கொஞ்சம் பொறாமை இவையனைத்திற்கும் இடையே கயல்விழி தீர்க்கமான பார்வையுடனும், புன்சிரிப்புடனும் அனைவரையும் அனுசரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். மேதாவித்தனம், திமிர் துளியும் இல்லை. கண்களில் அப்படி ஒரு தீர்க்கம், பேச்சினில் அதற்கேற்ற தெளிவு. மாணவர் வட்டத்தின் விளிம்பில் ஐஸ்வர்யா பல நிமிடங்கள் தொங்கிக் கொண்டிருக்க, கயல்விழி தானாக முன்வந்து அவளுக்குக் கை கொடுத்தாள். 

"ஹாய்... ஐ ஆம் கயல்விழி..."

"ஹலோ. ஐ ஆம் ஆஷ்..."

"ஆஷ்?" 

"யா... ஐஸ்வர்யா"

"ஓ... நைஸ் மீட்டிங் யூ ஐஸ்வர்யா"

"டூ யூ ஸ்பீக்  தமிழ் அட் ஹோம்?" ஐஸ்வர்யா ஆர்வத்தை அடக்க முடியாமல் வினவினாள்.

"எஸ். டூ யூ?"

"யா"

"ரொம்ப சந்தோஷமா இருக்கு... யூ நோ... ஒரு தமிழ் பொண்ணு கூட படிக்கிறது" கயல்விழி குரலில் நிஜமான ஆனந்தம் பிரதிபலித்தது. நல்ல சரளமான தமிழுக்கு சாதாரணமாய் மாறினாள்.

"எனக்கும்..." தன் மனதை வதைக்கும் கேள்வியை நேரடியாய்க் கேட்டால் தவறாக நினைத்து விடுவாளோ என்ற குழப்பத்தில் ஐஸ்வர்யா வழிந்தாள். "கேன் ஐ ஆஸ்க் யூ சம்திங்?"

"தாராளமா..."

"இந்த விபூதி, பொட்டு... இதெல்லாம்... யாரும் கிண்டல் பண்ணலயா?" தயங்கித் தயங்கி கேட்டாள் ஐஸ்வர்யா.

இதைக் கேட்டு கயல்விழி  மெலிதாய்ச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் புரிதல், விரக்தி, அக்கறை அனைத்துமே சம அளவில் கலந்திருந்தன. "உன்னையும் கிண்டல் பண்ணாங்களா? ஹ்ம்ம். நாம இருக்குறது வெளிநாட்டில ஐஸ்வர்யா. இங்க நம்ம கலாச்சாரம் தெரியாது. தெரியாத விஷயத்த கிண்டல் பண்ணறது தான மனித இயல்பு?"

"உன்னையும் கிண்டல் பண்ணாங்களா? உனக்குக் கஷ்டமா இல்லையா?" ஐஸ்வர்யாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சும்மா நடிக்கிறாளோ?

"எதுக்கு? இது என் அடையாளம். என் கலாச்சாரம். இது மத்தவங்களுக்கு புரிஞ்சாலும் புரியாட்டியும் என்னோட ஒரு அங்கம் இது அண்ட் ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் இட், யூ நோ வாட் ஐ மீன்? நாம யாருன்னு நமக்கு தெளிவா புரிஞ்சுட்டா அதுக்கப்பறம் மத்தவங்க ஒப்பீனியன்ஸ்க்கு அங்க என்ன வேலை?" புன்னகைத்தபடி சாதாரணமாய்க் கூறினாள்.

அந்த பதிலையும் கயல்விழி சிரிப்பையும் முழுதாய் கிரஹித்துக் கொள்ளும் முன் அடுத்த வகுப்புக்கான மணி அடிக்க, இருவரும் தத்தம் இருக்கைக்குச் செல்ல நேர்ந்தது.

ஐஸ்வர்யாவால் கயல்விழி கூறியதை முழுமையாய் ஏற்க முடியவில்லை. கொஞ்சம் பேர் வாங்கிட்டா போதும். உலகத்தயே கரைச்சு குடிச்சா மாதிரி பேசுறது. உன்ன டேக் பண்ணிருக்கணும். தட்டி விட்டு ஓடிருக்கணும். விரட்டி விரட்டி அழ விட்டிருக்கணும். அப்போ தெரிஞ்சுருக்கும். கயல்விழிங்கற பேரை கே னு மாத்திட்டு என் பக்கத்து சீட்டுல தான் பெக்கே -பெக்கேன்னு முழிசிச்சுட்டு உக்காந்துருப்ப. 'நாம யாருன்னு நமக்கு தெளிவா புரிஞ்சுட்டா அதுக்கப்பறம் மத்தவங்க ஒப்பீனியன்ஸ்க்கு அங்க என்ன வேலைன்னு' தத்துவம் பேசியிருக்க மாட்ட. ஹ்ம்ம். லேசாய் முகம் சுழித்து கயல்விழியை பார்க்க எத்தனிக்கையில் தான் அவளுக்குத் தெரிந்தது கயல்விழி அவளைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்துக் கொண்டிருப்பது. சட்டென ஒளிந்து கொண்டாள். ச்சே... சொதப்பல்!

பள்ளி முதல்வர் ஆண்டிரூஸ் முகத்தில் பெரிய புன்னகையுடன் உள்ளே நுழைந்தார். சம்பிரதாய "குட் மார்னிங் மிஸ்டர் ஆண்டிரூஸ்" ரீங்காரித்து ஓய்ந்த பின் ஓரிரு நிமிடம் மாணவர்களை தீர்க்கமாய்ப் பார்த்து விட்டு ஆங்கிலத்தில் தன் உரையை தொடங்கினார். "உயர்நிலைப் பள்ளி என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு பகுதி. தொடக்கப் பள்ளியிலும் வளர்நிலைப் பள்ளியிலும் நீங்கள் பெற்றது அறிவைத் தேடத் தேவையான கருவிகள். மொழி, அடிப்படைக்  கணிதம், அறிவியல் பற்றிய புரிதல், சக மாணவர்களையும் மனிதர்களையும் புரிந்து அனுசரித்து நடத்தல், நல்லொழுக்கம் உள்ளிட்ட இந்தக் கருவிகள் இந்த ஆண்டில் இருந்து அடுத்த கட்ட அறிவையும் புரிதலையும் பெற உங்களுக்கு உதவப் போகின்றன. அதற்குண்டான எல்லா வித உதவிகளையும் முயற்சியும் இந்தப் பள்ளியும் ஆசிரியர்களாகிய நாங்களும் செய்ய கடமை பட்டிருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து உங்களுள் ஒருவரும் இந்த அறிவுத் தேடலில் உடனிருந்து உதவி செய்யப் போகிறார் - கயல்விளி."

ஐஸ்வர்யாவிற்கு ரவரவ என்று வந்தது. போச்சுடா! மறுபடியும் கயல்விழி அஷ்டோத்திரம். என் தலை விதி!

முதல்வர் ஒரு சிறிய இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். "பொதுவாக ஒரு மாணவரின் புகழைப் பாடிக் கொண்டே இருந்தால் அது மற்ற மாணவர்களுக்கு வெறுப்பை உருவாக்கி விட வாய்ப்பிருக்கிறது. அதையும் மீறி நான் ஒரு மாணவரை மட்டும் சுட்டிக் காட்டி பேசிக் காரணம் அவர் அடைந்த வெற்றிகள் மட்டுமல்ல. வெற்றிகளை புரிந்து கொள்வது எளிது. ஏனென்றால் நாம் அனைவருமே முனைவது அதற்குத் தான், கோருவது அதைத் தான். ஆனால் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் இருக்கக் கூடிய வலிகளும், அந்த வலிகளை மீறிய விடா முயற்சியும், அந்த விடா முயற்சியினால் அவர்கள் சந்தித்த எதிர்ப்புகளும் அவப்பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை, தெரிந்து கொள்வதில் யாரும் அக்கறை காட்டுவதும் இல்லை."

என்ன பெரிய வலி. அது என்னை மாதிரி நொந்து போய் பேரை மாத்திட்டு ஓரமா உக்காந்துருக்குறவங்களுக்குத் தான் தெரியும் ஐஸ்வர்யாவிற்கு மனது ஒப்பவில்லை.

இவளது எண்ண ஓட்டம் புரிந்தது போல் முதல்வர் பேச்சு இருந்தது. "கயல்விளி உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். பல பெரிய அரங்குகளில் பெற்ற வெற்றிகள், புகழ், தெளிவான சிந்தனை, வயதுக்கு மீறிய பக்குவம், அடக்கம் என்று ஒரு உதாரணமாய் உங்கள் முன் நிற்கும் கயல்விளியை உங்களுக்குத் தெரியும். ஆனால் ஆரம்பப் பள்ளியிலிருந்தே நிறத்தினாலும், கலாச்சார வேறுபாட்டினாலும் சக மாணவர்களால் மீண்டும் மீண்டும் நோகடிக்கப் பட்டு, அதே சமயத்தில் அவளது அன்னையும் தவறி விட, இதே கயல்விளி தீவிர மன அழுத்தம் காரணமாக ஒரு ஆண்டு மருத்துவமனையில் இருந்ததும், மூன்றாண்டுகள் வீட்டிலிருந்து கல்வி பயின்றதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வளவும் நடந்த பின் தந்தையின் உதவியுடன் மெல்ல மெல்ல மீண்டெழுந்து இன்று உங்கள் முன் வெற்றியாளராக நிற்பது தான் விதிவிலக்காய் கயல்விளியை நான் உதாரணம் காட்டும் காரணம்."

வகுப்பே நிசப்தமாய் இருக்க ஐஸ்வர்யாவின் மனதிலோ கயல்விழியின் குரல் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இது என் அடையாளம். என் கலாச்சாரம். இது மத்தவங்களுக்கு புரிஞ்சாலும் புரியாட்டியும் என்னோட ஒரு அங்கம் இது அண்ட் ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் இட், யூ நோ வாட் ஐ மீன்? நாம யாருன்னு நமக்கு தெளிவா புரிஞ்சுட்டா அதுக்கப்பறம் மத்தவங்க ஒப்பீனியன்ஸ்க்கு அங்க என்ன வேலை? இவ்வளவு பிரச்சனைக்கப்பறம் இவ்வளவு தெளிவா யோசிகிச்சு பேச முடியுமா? எப்பிடி கயல்விழி? சிந்தித்த வண்ணம் கயல்விழியை ஐஸ்வர்யாவின் கண்கள் தேட கயல்விழி தாங்க மாட்டாமல் உடைந்து கைக்குட்டையில் முகம் புதைத்து சத்தமின்றி அழுது கொண்டிருந்தாள். அழாத கயல்விழி. ப்ளீஸ். அழாத. கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் துளிர்த்திருந்தது. கயல்விழியின் மேலிருந்த காழ்ப்புணர்ச்சி மிகப்பெரிய மரியாதையாய் மாறியிருந்தது.

அனைவரின் மனத்திலும் சோகத்தின் கனம் அழுத்திக் கொண்டிருக்க முதல்வர் தெளிவாக, அழுத்தமாக அவரது உரையின் முடிவிற்கு வந்தார். "இவ்வளவு வெற்றிக்குப் பின்னும் கயல்விளியின் தந்தை நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவளை நம் பள்ளியில் சேர்க்கும் பொழுதே இந்த விவரங்களைக் கூறி மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி உணர்ச்சிகரமாய் வேண்டினார். எங்கள் பள்ளி மாணவர்கள் நிச்சயம் உங்கள் மகளுக்கு துணையாய் நிற்பார்கள் என்று உங்கள் மேல் இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையில் அவரிடம் வாக்கு கொடுத்திருக்கிறேன். அதை காப்பாற்றுவீர்கள் என்றும் நம்புகிறேன். இதை நீங்கள் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் அவரிடமும் கயல்விளியிடமும் அனுமதி பெற்று உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். என் அருமைப் பிள்ளைகளே... சக மாணவர்களிடம் பாகுபாடு இன்றிப் பழகுங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள். நல்ல மனிதர்களாக இருப்பது தான் நம் சமுதாயத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு. நல்ல குணமே உங்களுக்கு நல்ல எண்ணங்களைத் தரும். நல்ல எண்ணங்கள் உங்களை பெரிய இலக்குகளை நோக்கிக் கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றவை. அந்த இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் பொழுது தோல்விகள் வரலாம். ஏமாற்றங்கள் வரலாம். துவண்டு விடாதீர்கள். தொடர்ந்து முயற்சியுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும். மீண்டும் இந்தப் பள்ளியின் சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறேன். உங்கள் இலட்சியங்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள். நன்றி!"

அதன் பிறகு கயல்விழி அனுமதி பெற்று சீக்கிரமே வீடு சென்று விட்டதால் அவளுடன் பேசும் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் அன்று முழுவதும் ஐஸ்வர்யாவின் மனதில் கயல்விழி மட்டுமே நிறைந்திருந்தாள். வகுப்புகள் முடிந்ததும் அவள் உடைமைகளை எடுத்துக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே வருகையில் அவளுக்காக அம்மா அம்மாவுக்கே உரிய அன்புடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருந்தாள்.

"ஐஷு மா... எப்பிடிடா இருந்தது முதல் நாள்?" வாஞ்சையாய் தலை கோதியபடி கேட்டாள்.

ஐஸ்வர்யாவிற்கு கதவை படார் என அடித்துச் சாத்தியது நினைவுக்கு வர உணர்வுகளின் பாரம் தாங்காமல் அம்மாவை கட்டிக் கொண்டாள். கண்களின் ஓரம் லேசாகக் கண்ணீர் துளிர்த்திருந்தது.
"சாரி மா..."

"சேச்சே... அம்மா தாண்டா உன்கிட்ட சாரி சொல்லணும். இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆயிடும்ன்னு நெனச்சு நெனச்சே உன்ன ரொம்ப புஷ் பண்ணிட்டேன்ல? இனிமே நான் உன்ன கம்பெல் பண்ண மாட்டேன்... சாரி டா..."

அம்மா கூறியது இன்னும் நெஞ்சைப் பிசைய அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டு, அவள் மார்புக் கூட்டின் கதகதப்பில் பாதுகாப்பாய் உணர்ந்தபடி ஐஸ்வர்யா "அம்மா..." என்றழைத்தாள்.

"ஹ்ம்ம்... சொல்லுடா" அம்மா அவள் தலை கோதியபடி கேட்டாள் 

இரண்டொரு நிமிட இடைவேளைக்குப் பின் ஐஸ்வர்யா மெல்லமாய்க் கேட்டாள் "பொட்டு வைச்சா நான் நெஜம்மா மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கேனா?"