வெள்ளி, 13 ஜனவரி, 2012

காதலி


மனதால் பேசி கண்களால் கவர்ந்து
இதழால் மயக்கி இதயத்தால் நினைத்து
அங்கங்கள் குழம்ப அகத்திருந்து காதலிப்பாள்...

செல்லமாய் கோபித்து சோகத்தை மறக்கடித்து
சில்லென்று சிரித்து சேட்டைகள் சில செய்து
உடனிருக்கும்  நொடிகளில் உலகம் மறக்கச் செய்திடுவாள்...

என்னவளே எனக்காகப் பிறந்தவளே எனதருமைக் காதலியே
எந்நாளும் எனைத் தொடரும் நினைவுகளின் உறைவிடமே
எங்கும் எப்பொழுதும் இரு... என்னக்காய், எனக்கே, என்னுடன்!

திங்கள், 9 ஜனவரி, 2012

அரக்கு மாளிகை


1. ஜனனம்


சூரியன் எழ மனமில்லாமல் கண்களை மெல்லமாய்த் திறந்து கொண்டிருந்த காலைப் பொழுது. ஐப்பசி மாதம் பிரிந்து செல்ல மனமில்லாமல் தேம்பியதோ என்று சந்தேகத்தைக் கிளப்பிய லேசான சாரல், வழித்துணையாய் இதமான குளிர் காற்று, கை அசைத்து வழி அனுப்பும் மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் அந்தச் சாலை சில கோடி மக்கள் வசிக்கும் நகரத்தின் இடையே காண்பதற்கரிய காட்சி தான்.

"ஆமாங்க... அவரு சித்தப்பா ஹெல்த்து மினிஸ்டர். பத்து வர்ஷத்துக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லாம ஊருக்கு வந்தாங்க. இப்போ ஊர அடிச்சு உலைல போட்டு பெரிய கோடீஸ்வரங்க ஆயிட்டாங்க... அப்பறம் ஏன் இவ்ளோ பெரிய ஆஸ்பத்திரி கட்ட மாட்டாரு?"  என்ற எதிர் வாதங்களை இப்பொழுது அலசாமல் கதையின் நாயகி... இல்லை இல்லை... கதையின் நாயகனின் அன்னை அனிதா இருக்கும் அறைக்குச் சென்று விடுவோம்.

இப்பொழுது நம் கதாநாயகனின் வயது பூஜ்யம். உலகத்தைப் பார்த்து விட துடிக்கும் ஆர்வத்தில் தாயின் வயிற்றில் உத்வேகமாய் புரண்டிருக்க “எனை மறந்து போகாதே கண்ணா” என்று அவன் அன்னையின் தொப்புள்க் கொடி அவனை அரவணைத்துப் பிடித்திருக்க மருத்துவர்கள் நம் கதாநாயகனின் பக்கம் சேர்ந்திருந்தார்கள். பேசும் கண்கள், ஐந்தரை அடி உயரம், நடு முதுகைத் தொட்டு விளையாடும் கரிய கூந்தல், கொஞ்சும் இதழ்கள், கச்சிதமான உடல் என ஆண்கள் மனத்தைக் கொள்ளை அடிக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்ட அனிதா ஒரு மாநிற தேவதை என்றே சொல்லலாம். ஆனால் கலைந்த கூந்தல், சோர்ந்த முகம், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் சகிதம் இப்பொழுது அனிதாவைப் பார்க்கும் எவருக்கும் பரிதாபமே மேலோங்கும்.
அனிதாவின் அவதி முனகல்கலாகவும், அலறல்களாகவும் பரிமாணங்கள் எடுத்த வண்ணம் இருக்க முதல் முறை தந்தையாகப் போகும் ஆனந்த் அந்த அறையின் வெளியே பரபரத்துக் கொண்டிருந்தான். பொதுவாக சிரித்து, கிண்டல் செய்து கலகலப்பாய் இருக்கும் ஆனந்திற்கு சற்றே கரிய முகத்தில் முத்துக்கள் பதித்தது போன்ற அவன் சிரிப்பு தான் அடையாளம். அப்படிப்பட்டவன் முகத்தில் இப்பொழுது கவலை தோய்ந்த பரபரப்பு... அவனது மெலிந்த ஆறடி உயர உருவம் அவன் பரபரப்பை மிகைப்படுத்திக் காட்டிக் கொண்டிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அலுவலகப் பேருந்து வர டப்பர்வேர் சகிதமாய்க் காத்திருக்கையில் தொடங்கிய பழக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரே பையில் இரண்டு டப்பர்வேர்கள் தாங்கி வரும் ஆதர்ச தம்பதியராய் அவர்களை மாற்றியிருந்தது. ஆனந்த் அவன் வீட்டின் செல்லப் பிள்ளை என்பதாலும், அனிதா தந்தையில்லாப் பெண் என்பதாலும் ஜாதி, வசதி, பெரியோர் குறிக்கீடு, அண்ணன், முறை மாமன் என்று எந்த தடங்கலும் இல்லாமல் திருமணம் ஏற்பாடானது. ஊரே மெச்சும் படி ஆடம்பரமாய் இல்லை என்றாலும் சிறப்பாய் நடந்த திருமணம், சிம்லாவில் தேனிலவு, வார இறுதித் திரைப்படங்கள் என சராசரி நிகழ்வுகள் அனைத்தும் நடந்தேறிய பின்னர் வந்தது அனிதா கருவுற்றாள் என்ற நற்செய்தி. "நாம் வாழ்வும் வாழ்வுக்கு சான்றாவது இன்னோர் உயிர் தானடி" என்று அனிதாவின் இடையைப் பிடித்து பாதம் வலிக்காமல் நளினமாய் நடனமாடியது இன்றும் ஆனந்தின் மனதெங்கும் நிறைந்திருந்தது. ஆனால் இன்று அந்த நினைவுகளை அசை போடும் நிம்மதியோ, தெளிவோ ஆனந்திடம் இல்லை. தாயும் சேயும் எந்த பங்கமும் இல்லாமல் திரும்பி வர வேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே அவன் மனதில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆனந்தின் அன்னை காளியம்மாளோ கவலை தோய்ந்த கண்களுடன் ஆனந்தையும், அனிதா இருந்த அறையையும் மாற்றி மாற்றி பார்த்த வண்ணம் இருந்தாள். முழுக்க முழுக்க சென்னையிலேயே இருந்து வரும் அனிதாவின் அன்னை வனிதாவிற்கும் காளியம்மாளுக்கும் ஏறக்குறைய ஒரே வயது தான் என்றாலும் உடல் தளர்ந்து, எடையும் இடையும் கூடி, முதுமை அதி வேகமாய் நெருங்கி விட்ட வனிதாவிற்கும் காளியம்மாளுக்கும் ஆறு அல்ல அறுபது வித்தியாசங்கள் எளிதாய்க் கூறி விடலாம்.ஐம்பதுகளில் இருந்தாலும் களத்து மேட்டிலும், கல்லுரலிலும் பணி செய்து பழகிய காளியம்மாளின் உடல் அவள் வயதைக் குறைத்துக் காட்டிக் கொண்டிருந்தது. கண்களில் தெரிந்த கவலைக் கோடுகளைத் தவிர முதுமைக்கும், கவலைக்கும், வசதிக்கும் அப்பாற்பட்ட கிராமத்து அழகு அவளிடம் நிறைந்திருந்தது. தற்பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த மிகப் பெரிய ஒற்றுமை அனிதாவும் அவள் சேயும் பத்திரமாய் திரும்பி வர வேண்டும் என்கிற ஆவலும், அதற்காக அய்யனாரிடமும், பெருமாளிடமும் சென்ற பிரார்த்தனைகளும் தான்.

ஓயாத பிரார்த்தனைகள், பரபரப்பை நடையாய்க் காட்டிய தாதிப் பெண்கள், இடை இடையே அனிதாவின் அலறல் என்று இருபது யுகங்கள் கடந்த பின் கேட்டது அந்தக் குரல். ஆம்! நம் கதையின் நாயகன் அவதரித்து விட்டதன் அறிகுறியாய் வந்த அழுகைக் குரல் தான் அது. ஒரே கணத்தில் அத்தனை கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வரவழைத்த அந்த அழுகைக் குரல் ஆனந்திற்கு இறைவனே நேரில் வந்து பேசியதைப் போல் ஒலித்தது.

2. கடவுளின் குரல்

இறைவனின் குரல் எப்படி இருக்கும்? காலம் காலமாக பக்தித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நாம் கேட்டு வரும் "ஏ மானிடா!"  என்றழைக்கும் கட்டைக் குரலின் சொந்தக்காரர்களுக்குக் கூட அது எப்படி இருக்கும் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பரவசத்தின் உருவகமாய் ஆனந்த் கடவுளின் குரலை நினைத்த பொழுது அந்தக் குரல் ஓயாமல் தொடரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டான். ஆம். பிறந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்ட பின்னும், மார்கழிக் குளிர் இதமாய்ப் பரவியிருந்தும், கார்த்திக் என்று பெயர் பெற்ற பின்னும் நம் கதாநாயகனின் அழுகை ஏனோ நிற்கவில்லை. எப்பொழுதும் உறங்கி, அவ்வப்பொழுது உண்டு, எப்பொழுதாவது அழும் குழந்தைகளுக்கு இடையில் எப்பொழுதும் அழுது, எப்பொழுதாவது உண்டு, அவ்வப்பொழுது மயங்கும் கார்த்திக் சற்றே விசித்திரமான சிசுவாக இருந்தான்.  பல ஆயிரங்களை விழுங்கி ஒரேயொரு தாளை விசித்திரமான பல எண்களுடனும் வரைபடங்களுடனும் உமிழும் அதி நவீன மருத்துவப் பரிசோதனை இயந்திரங்கள் கார்த்திக்கின் உடலில் எந்தக் குறையும் இல்லை என்று ஆணித்தரமாய்க் கூற, மருத்துவர்களும் செய்வதறியாது கை வைத்தியங்களை சிபாரிசு செய்ய, மந்திரம், ஹோமம், தகடு என்று அனைத்தையும் தாண்டி ஓங்கி ஒலித்தது நம் கார்த்திக்கின் அழுகைச் சுரம்.

சில குழந்தைகளின் முகத்தையும், வெகுளித்தனத்தையும் கண்டால் அவர்கள் மீது அபரிமிதமான அன்பு தோன்றும். அத்திப்பூ பூத்தாற் போல் எப்பொழுதாவது அழாமல் இருக்கும் பொழுது கார்த்திகைப் பார்த்தால் அந்தக் குழந்தைகள் மீது தோன்றிய அன்பெல்லாம் ஒருசேர கார்த்திக்கிடம் சென்று விடும். கரிய பெரிய மாணிக்கங்களை ஒத்த விழிகளும், புதிதாய்ப் பூத்த ரோஜா மலரைப் போன்ற பொலிவும், பொன்னை வெண்ணையில் குழைத்துச் செய்தது போல் மின்னும் அழகான பட்டுக் கன்னங்களும் அகராதியில் அழகின் பொருளாய் கார்த்திக்கைச் சேர்க்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை வைத்த வண்ணம் இருந்தன. அப்படிப்பட்ட ஒரு குழந்தை இத்தகைய வினோதமான சங்கடத்தில் இருப்பது யாருக்குத்  தான் சோகத்தைத் தராது?

இதோ... அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தையும் தாண்டி, கார்த்திக் உறங்கும் நேரத்தில் அவன் முகத்தைப் பார்க்கும் ஆசையில் அவனை வாஞ்சையுடன் தாங்கி நிற்கும் ஆனந்தின் உதடுகள் சிரித்த போதும் கண்கள் சிரிக்கவில்லை. வெளிர் நீல உடையில் மெலிதானதொரு புன்னகையுடன் உறங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை பார்க்கையில் அவன் தந்தைக்குத் தோன்றிய ஏக்கம் கலந்த பரவசம் இமையோர கண்ணீர்த் துளியாய் அவதரித்திருந்தது.

"இன்னைக்கு மீட்டிங் இருக்குனு சொன்னியே. இன்னும் கெளம்பலையா?" என்று பரபரப்பாய் சமையலறையில் இருந்து வந்த அனிதாவை உதட்டின் மேல் விரல் வைத்து (அவன் உதட்டின் மேல் தான்) அமைதியாய் இருக்கச்சொன்னான்.

"கார்திக்க சாயந்தரம் வந்ததும் பாத்துட்டே இரு... இப்போ கெளம்பு. உன் மானேஜர் குருமூர்த்தி சரியான சிடுமூஞ்சி ஆச்சே..." என்று ஆனந்தை திசை திருப்பக் கிசுகிசுத்த போதும் அனிதாவின் உள்ளத்தில் இருந்த கவலை தான் ஆனந்தின் கண்களில் வெளிப்படுகிறது என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள்.

நிலைமை அறியாமல் ஆனந்தின் அலை பேசி அலற, கார்த்திக்கின் ஆவர்த்தனம் மறுபடியும் ஆரம்பமானது.

"என் தங்கத்த நம்ம ஊர் கருப்பசாமி கோவில்ல வச்சு மந்திரிச்சா எல்லாம் சரியா போயிரும்னு சொல்லறேன்... நான் சொல்லறத கேக்க இந்த வீட்ல யாரு இருக்கா... உங்கொப்பன் படுத்த படுக்கையா போனதுல இருந்து எல்லாருக்கும் என் பேச்சு இளக்காரமா தான் போச்சு" என்று காளியம்மாள் தூபம் போட, ஆனந்தின் ஒட்டு மொத்த ஆத்திரமும் காளியம்மாளின் பக்கம் திரும்பியது.

"அப்பிடியே என்னையும் கருப்பசாமி கோவில்ல வச்சு பலி குடுத்துரும்மா. நிம்மதியா போய் சேர்றேன்" என்றபடி விருக்கென வெளியேறினான். சான்ட்ரோவின் உயிர் நாடியை ஓங்கி மிதித்து போக்குவரத்தில் கலப்பதற்கு முன் "கருப்பசாமி கோவில்ல பலி குடுக்குறதுக்கா உன்ன தவங் கெடந்து பெத்தேன்..." என்கிற காளியம்மாளின் புலம்பல் குரல் ஆனந்தின் செவி வழி புகுந்து அவன் கோபத்தையும், இயலாமையையும் கடந்து அவன் இதயத்தை இளக்கியது.

நகரத்தின் செயற்கைப் பரபரப்பைக் கடக்க ஆனந்தின் கரிய ரதத்திற்கு முப்பது நிமிடங்கள் தேவைப்பட்டது. கார் (அடடே சிலேடை!) கதவை வேகமாய்த் திறந்தால் இடிபடும் அளவிற்கு குறுகலாய் அமைக்கப்பட்ட நிறுத்துமிடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தன் வாகனத்தை நிறுத்தியதும் அனிதாவை அலை பேசியில் அழைத்தான்.

"ம். நான் தான்... இந்த வீக்கெண்ட் எங்க ஊருக்குப் போய்ட்டு வந்துரலாம்னு நெனைக்கிறேன்... இன்னும் ஒரு நாள் தான இருக்கு... தேவையானதெல்லாம் எடுத்து வச்சு பாக் பண்ணிக்கோ. சரியா?"
"..."
"அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். வீட்ல ஒருத்தர் அழுதாலே நிம்மதி போயிரும். இதுல ஜோடி போட்டு அழுதால்லாம் எனக்கு பொறுமை இல்ல கேக்குறதுக்கு"
"..."
"ம். அதான் நானும் சொல்லறேன். சரியா போனா நல்லது. அப்பிடி இல்லாட்டி கொறஞ்ச பட்சம் ஒரு தொணத்தல் கொறையும்... அப்பாக்கும் குழந்தையை காட்டினா மாதிரி இருக்கும்... பாவம் அவருக்கும் ஆசை இருக்கும் இல்ல... பேரனை பாக்கணும்னு "
"..."
"சரி. ஒகே. எனக்கு நேரமாச்சு. நீ பாக் பண்ணற வழிய பாரு. நம்ம சாயங்காலம் பேசலாம்."
"..."
"ஓகே. பை"

வீட்டுக் கவலையை மறக்க ஜாவாவின் துணையை நாட முடிவு செய்தபடி லிப்டின் மந்திரப் பொத்தானை ஆனந்த் அழுத்த, அது அலிபாபாவின் குகையைப் போல் திறந்து அவனை உள்வாங்கிக் கொண்டது.

3. கே. புளியங்குளம்

அந்த மலைப்பகுதியில் அழகை விட ஆபத்து அதிகமாய் இருந்தது. ராட்சத கழுகுகள் ஒருபுறம் வட்டமிட்டபடி இருக்க, குறுகிய கூரிய பாறைகளின் இடை இடையே பாதாளம் கண்ணுக்குப் புலப்பட்டது. மலை உச்சியில் இருந்த ஒரு கண்ணாடிக் கூண்டு வழியாக ஆனந்த் அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, எப்படியோ கார்த்திக் கூண்டின் மறுபுறம் சென்று விட்டான். மலையின் மிகக் குறுகிய பாறைகளில் ஒன்றின் மேல் கார்த்திக் அழுத வண்ணம் இருக்க, வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த கழுகுகளில் ஒன்று அந்த சிசுவை நோக்கி அதிவேகமாய் இறங்கத் தொடங்கியது. ஆனந்த் என்று அனிதா எங்கிருந்தோ அலற கூண்டை உடைத்து கார்த்திக்கை மீட்க பத்தடி பின்னே நகர்ந்து கண்ணாடிச் சுவரை நோக்கி பாய்ந்தான். மார்பிள் தரை தோளில் தட்டியது. கண்ணைத் திறந்து பார்த்த போது அனிதா அதிர்ச்சி கலந்த பார்வையுடன் ஆனந்தை நோக்கி வந்தாள்.

"ஆர் யூ ஓகே?"
"யா.. ஜஸ்ட் எ பாட் ட்ரீம்!" தோள்களைத் தேய்த்துக் கொண்டு எழுந்தான்.
சில வினாடி மௌனத்திற்குப் பின் அனிதா தொடர்ந்தாள் "மணி எட்டாச்சு... ஊருக்கு போறோமா?"
"ஹ்ம்ம்... அரை மணி நேரத்துல ரெடி ஆயிடறேன்... நீ திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கோ"

ராகு காலத்திற்கு முன் கிளம்பி விட வேண்டும் என்று காளியம்மாள் பரபரத்ததால் 8:50 ற்கு சொந்த ஊரை நோக்கிய அவர்கள் பயணம் தொடங்கியது. மதுரையில் இருந்து 80 கி.மீ தூரத்திற்குள் இருந்த போதும் அங்கிருந்து மண் பாதைகள், கரடு முரடான சாலைகளைக் கடந்து கே.புளியங்குளத்திற்குச் செல்ல குறைந்த பட்சம் இரண்டரை மணி நேரம் ஆகும்.

கே. புளியங்குளம்... நகரத்தின் சாயல் சற்றும் இல்லாத ஆர்.வீ.உதயகுமார், பாரதிராஜா படங்களில் வருவது போன்றதொரு கிராமம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்கு மின்சார வசதி கூட கிடையாது. இப்பொழுது கூட மின்விளக்கையும், மின்விசிறியையும்,ஓட்டுக்கு மாற்றாக கழகக் கண்மணிகளுக்கு வழங்கப்பட்ட ஓரிரு தொலைக்காட்சிப் பெட்டிகளையும் தாண்டி அங்கு பெரிதாக மின்சாதனங்கள் ஒன்றும் பார்த்து விட முடியாது. வயலில் நடந்த விபத்தில் ஆனந்தின் தந்தை கணேசன் படுத்த படுக்கை ஆகி விட, ஆனந்த் ஆறு வயதாய் இருந்த பொழுது சென்னையில் இருந்த அவர்கள் தூரத்து உறவினர் வீட்டிற்கு மாற்றப்பட்டான். காளியம்மாள் தான் விவசாயத்தைத் தொடர்ந்து அவனது செலவுகளை கவனித்து வந்தாள். ஆனந்தும் ஓஹோ என்று படித்து தங்கப் பதக்கங்கள் வாங்கி குவிக்கவில்லை என்ற போதும் அனைத்திலுமே சராசரியாய்த் தேறி இறுதியில் தகவல் தொழில்நுட்ப வெள்ளத்தில் கலந்து விட்டான். அவன் தந்தை உடல்நலம் பெரிதாகத் தேராததாலும், கிராமத்தை விட்டு வர மாட்டேன் என்கின்ற அவர் பிடிவாதத்தாலும் காளியம்மாள் காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல் சென்னைக்கும், சொந்த ஊருக்கும் சென்று வந்து கொண்டிருந்தாள். எப்பொழுதாவது ஒரு முறை தந்தையைப் பார்க்கச் சென்ற நாட்களைத் தவிர ஆனந்த் பெரிதாக ஊருக்குச் சென்றதே இல்லை. கடைசியாக அனிதாவைத் திருமணம் செய்து கொண்ட பின் வேண்டுதலுக்காகச் சென்றது. அது கூட காளியம்மாளின் வற்புறுத்தலின் பேரில்.

நகரத்தைத் தாண்டும் வரை தியாகராஜ ஆராதனையில் கடைசி வரிசையில் அமர்ந்து பாடுபவன் குரல் போல் அந்த ஒலிச் சமுத்திரத்தில் இனம் தெரியாமல் கலந்திருந்த கார்த்திக்கின் அழுகை நெடுஞ்சாலைகளில் நுழைந்ததும் செவி நரம்புகளைச் சீண்டிப் பார்க்கும் ஓயாத இரைச்சலாய் உருமாறியது. அந்த இரைச்சல் பழகியதாலோ என்னவோ அதைப் பொருட்படுத்தாமல் காளியம்மாளும் அனிதாவும் பேசிக் கொண்டிருந்தனர். கொரியக் குதிரையோ ஆனந்தின் உந்துதலில் நூறு கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டி தாவி ஓடிக் கொண்டிருந்தது.

அருகருகே அமர்ந்திருந்த அவர்கள் மூவரின் எண்ணங்களும் வேறு வேறு திசைகளில் பயணம் செய்து கொண்டிருந்த போதும் அவைகளின் மைய்யப்புள்ளி அனிதாவின் மடியில் இருந்தான்.

"ஆண்டவா... ஏன் என் மேல உனக்கு இவ்ளோ கோவம்... தயவு செஞ்சு கார்திக்க பத்தரமா எனக்கு திருப்பி குடுத்துரு... உனக்கு கெடா வெட்டி பொங்கலே வைக்கிறேன்..." இது ஆனந்த்.

"அவரு பாத்தா எவ்வளவு சந்தோஷப்படுவாரு... கருப்பசாமி கோவிலுக்கு போனதும் அப்பிடியே அய்யனார் கோவிலுக்கும் கூட்டிட்டு போயிரனும் என் தங்கத்த..." இது காளியம்மாள்.

"பாவம் ஆனந்த். கார்த்திக் மேல உயிரையே வச்சுருக்கான். அவனுக்காகவாவது கார்த்திக் குணமாயிடனும்..." இது அனிதா.

சான்ட்ரோ ஒரு முறை உணவருந்தி, சூரியன் தனது ஒரு நாள் பயணத்தில் முக்கால் பங்கை முடித்த பின் தார் சாலைகள் தொலைந்து மண் பாதை தொடங்கியது. வெகு நேரமாய் அழுது ஓய்ந்த கார்த்திக் தன் வழக்கமான தூக்க மயக்கங்களில் ஒன்றில் ஆழ்ந்திருந்தான். காளியம்மாளும் அனிதாவும் கூட கண்களை மூடி ஜன்னலோரத் தூக்கங்களில் லயித்திருந்தனர்.

மார்கழி மாத மாலைப் பொழுது இதமான தென்றலாய் மாறி குளிர்வித்துக் கொண்டிருக்க, தென்னை மரங்கள் அந்த மண் பாதையின் இருபுறமும் மகிழ்ச்சியில் தலையசைத்துக் கொண்டிருந்தன. சான்ட்ரோ கூட இருபுறமும் ஆடிக் கொண்டிருந்தது காற்றடிக்கும் மகிழ்ச்சியில் அல்ல... பல்லாங்குழி போல் மேடு பள்ளமாய் இருந்த பாதையினால். எப்பொழுதாவது இவர்களைக் கடந்து செல்லும் டிவிஎஸ் 50, ஹெர்குலிஸ் சைக்கிள்கள் அனைத்தும் வெகு லாவகமாய் பள்ளங்களைக் கடந்து போக, எடையும் இடையும் கூடிய ஆனந்தின் ரதம் சுணங்கித் தான் செல்ல வேண்டியிருந்தது.

மேலும் பல பள்ளங்களையும் சில வாகனங்களையும் கடந்து கே.புளியங்குளம் சென்றடைவதற்குள் பொழுது சாய்ந்து விட்டது. எங்கோ கேட்டுக் கொண்டிருந்த அம்மன் கோவில் மணி ஓசை, மரங்கள் சலசலக்கும் சப்தம், வழி மறித்துச் சென்ற ஆட்டுக்கூட்டம், விறகு தாங்கிக் கொண்டு வீடு நோக்கி நடக்கும் மூதாட்டி என கிராமிய சுற்றுச் சூழலின் இடையே ஆனந்தும் அனிதாவும் நகரத்துக் கலப்படம் தாங்கி நின்றனர். கார்த்திக் அனிதாவின் தோள்களிலே அழகாய் அயர்ந்திருந்தான். மெலிதாய்க் கேட்ட கணேசனின் இருமல் ஒலி இவர்கள் வீட்டை வந்தடைந்ததை உறுதிபடுத்தியது. இதற்குள் இவர்கள் வந்தது சுற்றார் அனைவருக்கும் தெரிந்து விட, அந்தத் தெருவே கூடி அவர்களை வரவேற்றது. கூட்டத்தின் சலசலப்பு அதிகமான நொடியில் நடந்தது அந்த அதிசயம்.

4. மழலைச் சிரிப்பு

கூடியிருந்தவர்கள் காட்டிய அன்பில் அந்த அதிசயம் கவனிக்கப் படாமலேயே போயிருக்கும். பக்கத்து வீட்டுக் கிழவி கருப்பாயி அது நடக்காமல் தடுத்து விட்டாள்.

"குழந்த என்ன அழகாச் சிரிக்கிது..." என்று வாஞ்சையாய் கார்த்திக்கின் கன்னத்தை அவள் வருடிக் கொடுத்த போது தான் குழந்தை எழுந்ததே மற்றவர்களுக்குத் தெரியும். வழக்கமாய் கண்களைத் திறக்கும் முன்னேயே அழுகையைத் தொடங்கி விடும் கார்த்திக் மகிழ்ச்சியாய்க் கை அசைத்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

"என் ராசா... நான் சொல்லல... நம்ம ஊருக்கு வந்தாலே என் தங்கம் சரி ஆயிருவான்னு" என்று காளியம்மாள் பெருமிதத்துடன் கார்த்திகைத் தாங்கிக் கொள்ள, அவனது பெற்றோர்களுக்குள் அடைபட்டிருந்த சோகம் ஆனந்தக் கண்ணீர் வழியே விடுதலை பெற்றிருந்தது. அந்த நொடியை மட்டும் நிரந்தரமாக்கும் சக்தி ஆனந்த் நிச்சயம் அந்த நொடியிலேயே சிறைபடச் சித்தமாய் இருந்தான். இல்லாத ஒன்றை நினைத்தே பழக்கப்பட்ட மனம் நிகழ் காலத்தில் இருப்பதே இல்லை. கார்த்திக் சிரித்து கொண்டிருந்த போதும் எந்த நொடியில் அழத் தொடங்குவானோ என்ற பயமே ஆனந்தின் உள்மனதை அரித்துக் கொண்டிருந்தது.

மணித் துளிகள் ஓடி மணிகளில் கலந்து உறங்கும் நேரமும் வந்தது. பேரக் குழந்தை கொண்டு வந்த மகிழ்ச்சி அந்த வீடெங்கும் நிறைந்திருந்தது.

"என்ன அருமையாச் சிரிக்கிறான் என் பேரன்" என்று மீசை முறுக்கியபடி காளியம்மாளிடம் கணேசன் பெருமை பேசிக்கொண்டிருந்தார்.

மற்றொரு அறையில் கார்த்திக்கும் அனிதாவும் நீண்ட நாட்களுக்குப் பின் மனமார்ந்த மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

"கார்த்திக் சிரிச்சா எவ்ளோ அழகா இருக்கான்ல... பாவம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்..."
"ஹ்ம்ம்...”
"உனக்கு ஞாபகம் இருக்கா? நான் கன்சீவ் ஆனதும் குழந்தை யார மாதிரி இருப்பான்னு நம்ம சண்ட போட்டுப்போம்..."
"ஹ்ம்ம்... எப்பிடி ஞாபகம் இல்லாம இருக்கும்? என்ன மாதிரி தான் இருக்கணும்னு நான் வீம்புக்கு பேசினாலும், உண்மைலயே குழந்தை உன்ன மாதிரி இருக்கணும்னு தான் நெனைப்பேன்..."
"அப்பிடியா..." கொஞ்சலாகக் கேட்டபடி ஆனந்தை அனிதா அணைக்க ஏறக்குறைய மறந்தே விட்ட சுகங்களை மீண்டும் அனுபவித்து, சில மாதங்களாய் நிம்மதியாய் உறங்காத கண்களுக்கு ஓய்வளித்தனர். கார்த்திக்கும் பெற்றோர் உள்ளம் புரிந்தது போல் பசி தூக்கத்திற்குக் கூட அழவில்லை.

கருப்பசாமி கோவில்...

கணேசன் குடும்பத்தார் கிடா வெட்டி பொங்கல் வைப்பது கே.புளியங்குளம் மொத்தமும் தெரிவிக்கப்பட அந்த சிறிய கிராமத்தின் அனைத்து குடும்பங்களும் விழாவில் பங்கு கொண்டன. அரசியல் நிலவரங்கள் பேசும் கரை வேட்டிகள், பழங்காலப் பெருமை பேசும் பெருசுகள், அழும் குழந்தைகளை சமாளிக்கப் பாடுபடும் கணவன்மார்கள் சகிதம் அனிதாவின் குடும்பத்தின் சார்பாக அவளது அன்னை வனிதாவும், தாய் மாமன் முறைக்கு தூரத்து உறவான நரேந்திரனும் வந்திருந்தனர்.

நரேந்திரன் நல்ல நிறம், சராசரி உயரம், கட்டுக் கோப்பாய் பராமரித்து வரும் திடமான உடல் சகிதம் பார்ப்பதற்கு ஒரு சாயலில் நடிகர் சூர்யாவைப் போல் இருப்பான். நகரத்தில் பிறந்தவன் என்றாலும் தான் படித்த குழந்தை நல மருத்துவம் ஏழைகளைச் சென்றடைய வேண்டும் என்ற காரணத்திற்காக கிராமங்களில் சுற்றித் திரியும் ஒரு பழமைவாதி.  நல்ல புத்திசாலியும் கூட. அனிதாவிற்கு அவன் மேல் அபரிமிதமான மரியாதை இருந்த போதும், ஆனந்திற்கு நரேந்திரனை கண்டால் ஏக வெறுப்பு. உள்ளூர மரியாதை இருக்குமோ என்னவோ தெரியாது, கிராமத்தை விட்டு நகரத்திற்கு வந்து தனித்துவம் தொலைத்து வெளிநாட்டவற்கு கூஜா தூக்கும் தொழில் தேவையா என்ற ரீதியில் நரேந்திரன் ஒரு முறை கேட்டது ஆனந்திற்கு ரணமாகப் பதிந்து விட்டது. இந்த முறை கூட நரேந்திரனிடம் ஆனந்தால் சகஜமாகப் பேச முடியவில்லை. அடிப்படை குசல விசாரப்புடன் நிறுத்திக் கொண்டான்.

வெட்டப்பட்ட கிடாக்களின் உதிரி பாகங்கள் இலைகளில் வந்த வண்ணம் இருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் அனைவரின் கவனமும் சாப்பாட்டில் செல்லத் தொடங்கியது. வந்தவர்களை உபசரிப்பதில் காளியம்மாளும் ஆனந்தும் ஆழ்ந்து விட அனிதாவும் நரேந்திரனும் பேசத் தொடங்கினர்.

"எப்பிடி இருக்க நரேன்... பாத்து ரொம்ப நாள் ஆச்சுல?"
"ஐ யாம் பைன். நான் ஊரு பக்கம் கடேசியா வந்தது உன் கல்யாணத்துக்கு தான்... அப்பறம் எங்க மீட் பண்ணறது..." என்றான் புன்சிரிப்புடன்.
"கரக்ட் தான்... ஹே... அவரு சரியா பேசலனு உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே..."
"ச்சே ச்சே... டோன்ட் ஒர்ரி அபௌட் இட்... பை தி வே, கார்த்திக் செம்ம க்யூட்... யூ ஆர் லக்கி"
"நீ வேறடா... ஊருக்கு வந்தப்பறம் தான் அவன் நார்மலா இருக்கான்..."
"புரியல..."
"கார்த்திக் பொறந்ததுல இருந்து அழாத நாளே இல்லடா..."
"குழந்தைங்கனா அழ தான செய்வாங்க..."
"ஐயோ நரேன்... நான் என்ன அவ்ளோ முட்டாளா? ஒரு நாளைக்கி கூட நிம்மதியா இருந்ததே இல்லைடா அவன்... நாள் பூரா அழுதிட்டே இருப்பான். அப்பறம் மயங்காத குறையா தூங்கிருவான். ஏதோ கருப்பசாமி புண்ணியம் கட்டிகிட்டாரு... இங்க வந்தப்பறம் தான் அவன் சிரிச்சிட்டிருக்கான்!"
"இவ்ளோ நடந்தப்போ கூட எனக்கு ஒரு கால் அடிக்கணும்னு கூட உனக்கு தோணலை இல்ல?"
"அப்படி இல்லைடா... பாமிலி டாக்டர்ஸ், பூஜை, பரிகாரம்னே நாள் ஓடிருச்சு... அத்தை தான் இங்க வந்தா சரியா போயிடும்னு சொன்னாங்க... சொன்னா மாதிரியே கருப்பசாமி தயவுல கார்த்திக் சரி ஆயிட்டான்..."
"சில சமயங்கள்ல ஒரு புது எடத்துக்கு போற மாறுதலே பல குழந்தைங்களுக்கு உடம்பு தேறிரும்... எது எப்பிடியோ, அவன் இப்போ ஹேல் அண்டு ஹெல்தி. அதான் வேணும்..."
"ஹ்ம்ம்... உன் மொபைல் நம்பர் என்னடா? என்கிட்ட உன் பழைய நம்பர் தான் இருக்கு..."
"நான் சுத்துற பாதி கிராமத்துல உருப்படியான கவரேஜ் இல்ல... அதுனால லான்ட்லைன் தான்... காமப்ல இல்லாத நேரம் இந்த நம்பர்ல நீ ரீச் பண்ணலாம்..." என்றபடி அவன் முகப்பு அட்டையை நீட்டினான். அந்த நேரத்தில் காளியம்மாள் அனிதாவை அழைக்க அட்டையைப் பெற்றுக் கொண்டு அவனிடம் இருந்து விடை பெற்றாள்.


5. புரியாத புதிர்

விழா தடபுடலாக முடிந்தது. வார இறுதிக்கு மட்டுமே வந்திருந்ததால் அன்று இரவே ஆனந்த் குடும்பத்தார் கிளம்ப வேண்டி இருந்தது. இரண்டு நாட்கள் மட்டுமே இருக்க முடிந்தது வருத்தம் அளித்தாலும் வேறு வழியின்றி பிரியாவிடை பெற்றனர். நீண்ட நாட்களுக்குப் பின் ஊருக்கு வந்ததால் காளியம்மாள் ஒரு வாரம் இருந்து விட்டு வருவதாகக் கூறி விட்டாள்.

சான்ட்ரோ தனது கண்களில் இருந்து ஒளியைக் கக்கியபடி நகரத்தை நோக்கிக் கிளம்பியது.  கார்த்திக் குணமானது மனதிற்கு நிம்மதியைக் கொடுத்திருந்ததாலும், களைப்பினாலும் அனிதா ஆழ்ந்து உறங்கி இருக்க, ஆனந்த் பிளாஸ்கில் இருந்த காபியின் உதவியுடன் கிராமத்துச் சாலைகளைக் கடந்தான். ஒரு வழியாக நெடுஞ்சாலையைச் சென்றடைந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆனந்திற்கு அந்த நிம்மதி நெடு நேரம் நீடிக்கவில்லை. முன்னமே முடிவு செய்யப்பட்ட கெடு முடிந்ததைப் போல் கார்த்திக் மறுபடியும் அழுகையைத் தொடங்கியிருந்தான்.

ஆனந்திற்கு ஏறத்தாழ மயக்கமே வந்து விட்டது. அழுகை அனிதாவையும் எழுப்பி விட, அவளது உறக்கத்துடன் நிம்மதியும் காணாமல் போனது.

"என்ன அனிதா நீ... அப்பிடி என்ன தூக்கம் வேண்டி இருக்கு உனக்கு" ஆனந்தின் இயலாமை அனிதாவின் மேல் கோபமாக மாறி இருந்தது.
"நான் என்ன பண்ணேன்னு இப்போ கோவப்படற?" அனிதா எரிச்சலுடன் கூற ஆனந்தின் கோபம் மேலும் கூடியது.
"ஆமா... உன்னால என்ன பண்ண முடியும்? நல்ல தூங்க தெரியும்... கொஞ்சமாவது அக்கறை இருந்தா தான..." என்று குரலை உயர்த்த, அனிதா அமைதி ஆனாள். ஆனந்த் கோபத்தில் இருக்கும் பொழுது அவனிடம் விவாதிப்பது எரியும் கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல் தான் என்று அவள் நன்றாகவே உணர்ந்திருந்தாள்.

அனிதாவும் அமைதியாக, ஆனந்த் செய்வதறியாது வண்டியை நிறுத்தி கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
"ஷிட்... ஐ கேன்ட் பிலீவ் திஸ்..." என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு, சிந்திக்கத் தொடங்கினான். சிந்தனைக்கு இடைஞ்சலாக கார்த்திக் அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

சிறிது நேர மௌனத்திற்குப் பின் ஆனந்த் தொடர்ந்தான்...
"ஓகே அனிதா... இது சரியா வர்றா மாதிரி தெரியல... கார்த்திக்க மறுபடியும் ஊருக்கு கூட்டிட்டு போய் அழ வைக்க நான் விரும்பல. இங்கருந்து விருதுநகர் பக்கம் தான். அங்க என் சித்தப்பா முறை சொந்தக்காரர் ஒருத்தர் இருக்காரு. அவரு வீட்ல நீ கார்த்திக்கோட இன்னைக்கி ராத்திரி தங்கிட்டு நாளைக்கி காலேல ஊருக்கு போ... அம்மாவை வந்து கூட்டிட்டு போக சொல்லறேன்..."
"என்ன ஆனந்த் நீ? திடுதிப்புனு முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் வீட்ல எப்பிடி தங்குறது? அதே மாதிரி கார்த்திக்குக்கு ஊருக்கு போனா சரியாயிடும்னு எப்பிடி உறுதியா சொல்லற?"
"யாருக்குத் தெரியும்? ஆனா இதை விட பெட்டர் ஆப்ஷன் இல்ல..."
ஆனந்த் கூறுவது சுத்தமாகப் பிடிக்காத போதும் அவன் கூறியது சரி என்றே அனிதாவிற்கு தோன்றியது.

விருதுநகர்... கோபிநாத் சித்தப்பாவின் வீடு...
கார்த்திக் இன்னும் அழுகையை நிறுத்திய பாடில்லை... சித்தப்பாவும் ஆனந்தும் கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அனிதா கார்த்திக்கை வாசல் அருகே வைத்து சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். இவர்கள் திடீர் பிரவேசம் செய்தது லட்சுமி சித்திக்குப் பிடிக்கவில்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.

"சித்தப்பா... உங்கள இந்த நேரத்துல சொல்லாம கொள்ளாம வந்து தொந்தரவு பண்ண்றதுக்கு மன்னிக்கணும்... இப்போ இருக்குற அவசரத்துல வேற வழி இல்லாம போச்சு..."
"இதுல என்னப்பா இருக்கு... நீ எப்போ வேணா இங்க வந்து போகலாம். இது உன் வீடா நெனச்சுக்க. அப்பறம்... அம்மா கிட்ட சொல்லியாச்சா? கண்டிப்பா நாளைக்கி வந்துருவாங்கல்ல?"
"போன் பண்ணி சொல்லிட்டேன் சித்தப்பா... நாளைக்கி மதியத்துக்குள்ள வந்துருவாங்க..."
"சரிப்பா... நான் பாத்துக்குறேன்"
"ரொம்ப நன்றி சித்தப்பா..."

சித்தப்பா மற்றும் சித்தியிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியவன், அனிதா அருகில் வந்து "சாரி... ஒரு நாள் தான்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..." என்று மெல்லிய குரலில் கூறி விட்டு அழுது கொண்டிருந்த கார்த்திக்கின் தலையை வருடிக் கொடுத்து கிளம்பினான். சான்ட்ரோவின் பின் பக்க விளக்குகள் இரண்டு ரத்த துளிகளைப் போல் மாறி இருளில் கலக்கும் வரை காத்திருந்து அனிதா வேண்டா வெறுப்பாய் தனக்கு ஒதுக்கப் பட்ட படுக்கையறைக்குச் சென்றாள்.

கே.புளியங்குளம்... மதியம் மூன்று மணி...

மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதைப் போல் கார்த்திக் சிரித்தபடி அனிதாவின் கையில் இருக்க, காளியம்மாள் கணேசனுக்கு தைலம் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தாள்.

"உங்க தம்பி ஆனாலும் ரொம்ப மோசம்... ஏதோ பிள்ளைக ஒரு நாள் அவசரத்துக்கு அவன் வீட்டுக்கு போனதுக்கு இப்பிடி மூஞ்சிய தூக்கி வச்சுருக்கான்... எடுபட்ட பய..." காளியம்மாள் ஆற்ற மாட்டாது கணேசனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
"விட்றி... அவன் என்ன கூட பொறந்த தம்பியா? தூரத்து உறவு தான... இந்த காலத்துல கூட பொறந்ததும் பெத்ததுங்களே தெருவுல விட்டுட்டு போயிருதுங்க... இதுல அந்த கோபிப்பய மட்டும் என்ன அவதாரமா? விடு கழுதய..." என்று கணேசன் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

அனிதாவிற்கு எண்ணமெல்லாம் கார்த்திக்கின் மேல் தான் இருந்தது.  மந்திரம் செய்தாற்போல் கிராமத்தை நெருங்குகையில் அவன் சிரிக்கத் தொடங்குவதும் ஊரை நோக்கிப் புறப்பட்டதுமே அழத் தொடங்குவதும் அவளுக்கு ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருந்தது.

"கருப்பா... இந்த ஊர தாண்டி உன் சக்தி செல்லாதா" என்று வேதனையில் கடவுளிடமும் முறையிட்டுக் கொண்டே கார்த்திக்கின் டியபரைத் தேடிக் கைப்பையைத் திறந்தவள் கையில் நரேந்திரனின் முகப்பு அட்டை தட்டுப்பட்டது.

சில நிமிட யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக தொலைபேசியை எடுத்து அந்த முகப்பு அட்டையில் இருந்த எங்களை அழுத்த ஆரம்பித்தாள்.

"ஹலோ"
எதிர் முனையில் பெண்குரல்... குரலில் நாகரிகம் கம்மியாகவும் மரியாதை அதிகமாகவும் இருந்தது.
"டாக்டர் நரேந்திரன் இருக்காரா?"
"இல்லிங்களே... அவரு வேலை விஷயமா பக்கத்து ஊர் வரைக்கும் போயிருக்காரு. வர்றதுக்கு ராத்திரி ஆகும். நீங்க யாரு பேசுறது?"
"நான் அவரு ரிலேஷன். என் பேரு அனிதா. டாக்டர் வந்ததும் கொஞ்சம் கூப்புட சொல்லறீங்களா? கொஞ்சம் அர்ஜன்ட்."
"கண்டிப்பா சொல்லறேன்..."
"நீங்க..." ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டாள்.
"நான் ரேவதி... அவரு கிட்ட நர்சா வேலை பாக்குறேன்."
"ஒ... சரி... அவரு வந்ததும் கொஞ்சம் மறக்காம சொல்லிருங்க. தேங்க்ஸ்."
"தேங்க்ஸ்ங்க"

நரேந்திரனுடன் பேச முடியவில்லை என்றாலும் அந்த உரையாடலுக்குப் பின் அனிதாவிற்குச் சற்று ஆறுதலாக இருந்தது.

6. முடிவுரை

நரேந்திரன் அனிதாவின் எதிரே அமர்ந்திருந்தான். வழக்கத்துக்கு மாறாக மேகங்கள் கூடியிருக்க, லேசான தென்றல் வீசிக் கொண்டிருந்தது. மரங்களின் இலைகளை காற்று உரசிச் சென்றதன் சாட்சியாய் ரம்மியமான சரசரப்பு கேட்டுக் கொண்டிருந்தது. கார்த்திக் அது எல்லாமே தனக்காகவே நடப்பதாய் எண்ணியது போல் அனிதாவின் மடியில் குதூகலமாய் விளையாடிக் கொண்டிருந்தான்.

"ஐ யாம் ஒரீட் நரேன்... எல்லாம் சரியா போச்சுனு நெனச்சா ஊர தாண்டினதும் அழ ஆரம்பிச்சுட்டான்... நிம்மதியே போச்சு..." அனிச்சையாய் கண்ணீர்த் துளிகள் வழிந்தோடின.
"ஹே... ரிலாக்ஸ். கண்டிப்பா என்ன பிரச்சனைனு கண்டுபிடிச்சுரலாம். கவலைப்படாத..." ஆறுதல் தொனியில் கூறி விட்டு சிந்திக்கலானான். சில நிமிட இடைவெளி விட்டுத் தொடர்ந்தான். "குழந்தை இங்க அழவே இல்லன்னா இங்க இருக்குற ஏதோ ஒரு விஷயம் அவனுக்கு ஒத்துப் போகுது. அது என்னனு கண்டுபிடிக்க பாப்போம்... அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் பண்ணனும்..."
"என்ன?"
"வீ ஷுட் எஸ்டாப்ளிஷ் எ பாட்டர்ன்... இந்த ஊரத் தாண்டி எங்க போனாலும் பையன் அழறானா, இல்ல சில வகையான இடங்கள்ள மட்டும் தான் அழறானானு இனம் பிரிக்கணும்."
"இதுக்காக ஊர் ஊரா தேசாந்தரமா போக முடியும்?"
"அவசியம் இல்ல அனிதா... முதல்ல இந்த கே.புளியங்குளம் மாதிரியான கிராமங்களுக்கு கார்த்திக்க கூட்டிட்டு போவோம். இந்த சுத்து வட்டாரத்துல ஒரு பதினஞ்சு இருவது கிராமம் இருக்கு... அதுல ஒண்ணு ரெண்டு கிராமத்துக்கு மொதல்ல போவோம். எப்பிடி ரியாக்ட் பண்ணறான்னு பாப்போம். வீ நீட் மோர் டேட்டா..."

ஒரு வில் வண்டி அமர்த்தப்பட்டது. நரேந்திரன், கார்த்திக், அனிதா மூவரும் ஏறிக் கொள்ள, வண்டி கிளம்பியது. வலையக்குளம், கந்தர்வப்பட்டி, அமலாபுரம் என்ற மூன்று அக்கம் பக்கத்து கிராமங்களின் வழியே மீண்டும் கே.புளியங்குளம் வரும்படி திட்டமிட்டிருந்தான் நரேந்திரன். இதில் வலையக்குளம் கே.புளியம்பட்டியை மிகவும் ஒத்த கிராமம். அளவான மக்கள் தொகை, பெரிதாய் வசதிகள் ஒன்றும் கிடையாது. அமலாபுரம் சற்றே பெரியது. சுத்து வட்டார கிராமங்களின் குட்டி நகரம் அது. ஒரு நகரத்தின் அனைத்து சாயல்களும் இல்லை என்றாலும் ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி உட்பட அனைத்து சமீபத்திய வசதிகளும் அமலாபுரத்தில் உண்டு. அந்த ஊருக்கு வடக்கே சென்றால் கார்த்திக் அழத் தொடங்கிய நெடுஞ்சாலையைப் பிடித்து விடலாம். கந்தர்வப்பட்டி இவ்விரண்டுக்கும் இடைப்பட்டது. சுருக்கமாய்ச் சொன்னால் அது அதிக வீடுகள் கொண்ட, வாகனங்கள் அதிகமாய் நடமாடும் கே.புளியங்குளம்.

பிரயாணம் தொடங்கியது. வண்டி ஒவ்வொரு ஊரையும் கடக்கையில் கார்த்திக்கின் போக்கில் மாற்றங்கள் அதைத் தன் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டான். திரும்புகையில் பொழுது சாய்ந்து இரண்டு மணி நேரங்கள் ஆகி இருந்தது. அனிதாவிற்கு நரேந்திரனின் வழிமுறையில் முழு நம்பிக்கை இல்லாத போதும், அவன் அறிவின் மேல் அவளுக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. வீடு திரும்பி உணவருந்திய பின் அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

"என்ன டாக்டர் சார். போதுமான டேட்டா சேத்துட்டீங்களா? என்ன முடிவுக்கு வந்தீங்க?"
நரேந்திரன் சிரித்தபடி தன் குறிப்பேட்டை எடுத்து, தன் குறிப்புகளை விவரிக்கத் தொடங்கினான்.
"நம்ம போய்ட்டு வந்த ரூட் கே.புளியங்குளம் - வலையக்குளம் - கந்தர்வப்பட்டி - அமலாபுரம் - கூட்டு ரோடு - கே.புளியங்குளம். இதுல வலையக்குளம் அப்பிடியே இந்த ஊர் மாதிரி. அங்கேயும் கார்த்திக் சிரிச்சு சந்தோஷமாத் தான் இருந்தான். நம்ம நெறையா ஊருக்கு போய் முடிவு பண்ண முடியலைன்னாலும், ஐ திங்க் ஹீ ஈஸ் டூயிங் குட் இன் ரிமோட் வில்லேஜஸ். ஸோ புளியங்குளத்துல மட்டும் தான் இவன் இருக்கணும்னு இல்ல.”
"ஹ்ம்ம்"
"அமலாபுரத்துல அவன் அழுகைய நிறுத்தவே இல்ல... ஸோ அவனுக்கு கொஞ்சம் சிடி  மாதிரி இருந்தாலே ஒத்துக்கல."
"ஆமா... அது கிட்ட தட்ட ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தான?"
"உண்மை தான். ஆனா எனக்கு புரியாத ஒரு விஷயம் என்னன்னா வலையக்குளத்துல இருந்து நம்ம கந்தர்வப்பட்டிகுள்ள  நுழையிரப்போ சிரிச்சுட்டிருந்த கார்த்திக் நம்ம அந்த ஊர்ல பாதிக்கு மேல தாண்டினதும் சிணுங்க ஆரம்பிச்சான்... கொஞ்ச நேரத்துல அழவே ஆரம்பிச்சுட்டான். ஒரே ஊருக்குள்ள வந்த இந்த சேஞ் ஆப் பிஹேவியர் தான் எனக்கு புரியல. பொலுஷன், டஸ்ட், வெதர்னு எதுவுமே அவ்ளோ சின்ன எடத்துக்குள்ள மாறுபட வாய்ப்பில்ல. அதை ஒரு அனாமலியாவும் விட முடியல." என்று கூறிக்கொண்டிருந்தவனை சமையலறையிலிருந்து வெளிப்பட்ட காளியம்மாள் இடைமறித்தாள்.
"தம்பி... நீ வந்ததுமே சொல்லணும்னு நெனச்சேன். அந்த ரேவதி புள்ள பேசிச்சுயா... யாரோ ஒரு டாக்டர் உன்கூட பேசணும்னு ரெண்டு மூணு தடவ கூப்பிட்டாராம்யா... நீ ஒரு செல்போன் வாங்கி வச்சுருக்கக் கூடாதாப்பா? ஏதாவது உசிரு போற விஷயமா இருந்தா நம்மளால முடிஞ்சா உதவியைச் செய்யலாம்ல..."
"சரிதாம்மா... நானே வாங்கணும்னு நெனச்சுட்டிருந்தேன். நான் ரேவதி கிட்ட பேசிக்கிறேன்..." என்றபடி அனிதாவை நோக்கித் திரும்பியவன், ஏதோ சட்டென்று தோன்றியவனாய் "ஏம்மா இங்க செல்போன் வேலை செய்யுமா?" என்று காளியம்மாளைப் பார்த்துக் கேட்டான்.
"இல்லையா... இங்க யாரு செல்போன் பேச போறா... பக்கத்துல கந்தர்வப்பட்டில தான் செல்போன் வேலை செய்யும். அது கூட எல்லா எடத்துலயும் சிக்குனல் கெடைக்காதுய்யா" என்றாள்.
"எனக்கு புரிஞ்சு போச்சு அனிதா..." என்று பரபரப்பாய் அனிதாவைப் பார்த்துத் தொடர்ந்தான். "கார்த்திக்கு இருக்கிறது 'Idiopathic environmental intolerance attributed to electromagnetic fields' னு நெனைக்கிறேன். சிம்பிளா சொல்லனும்னா கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அதிர்வுகள் சிலருக்கு ஒத்துக்குறது இல்ல. ரேடியோ, செல்போன், டிவினு நாம பயன்படுத்துற பல விஷயங்கள்ல இந்த ரேடியேஷன்ஸ் இருக்கு. இதுல சிலது,குறிப்பா செல்போன் நம்ம கார்த்திக்குக்கு ஒத்துக்கலனு நெனைக்கிறேன். இத உறுதிபடுத்துறது ரொம்ப ஈசி. ஆனா கண்டிபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்... முக்கியமா குழந்தைங்களுக்கு இருந்தா...”
"இப்பிடியெல்லாம் ஒரு பிரச்சனையா?" ஆச்சரியம் தாங்காமல் வினவினாள் அனிதா...
நரேந்திரன் லேசாய் சிரித்தபடி தொடர்ந்தான்... "உனக்கு ஒண்ணு தெரியுமா? நம்மள்ள யாருக்குமே இந்த மின்காந்த அதிர்வுகள் நல்லது இல்ல. ஆனா நம்ம வாழ்க்கை பாதிக்கிற அளவுக்கு பொதுவா இதனோட விளைவுகள் இருக்கிறது இல்ல... அதுனால தாங்கிக்கிறோம். சிலருக்கு அந்த தாங்குற சக்தி கம்மி ஆகுறப்போ உடம்பு சரியில்லாம போயிருது அவ்ளோ தான்..."
"ரொம்ப சீரியஸ் பிரச்சனையா இது?"
"சொல்ல முடியாது அனிதா. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி விளைவு இருக்கும். கார்த்திக்குக்கு என்ன பண்ணுதுனு டெஸ்ட் பண்ணி தான் கண்டுபிடிக்கணும்..."
"இத எப்பிடி கண்ட்ரோல் பண்ணறது?"
"பண்ண முடியாது. விட்டு விலகி தான் வர முடியும். மகாபாரதத்துல பாண்டவர்களை தூங்குறப்போ எரிச்சு கொல்லறதுக்கு ஒரு அரக்கு மாளிகை கட்டி குடி வச்சாங்களாம் கௌரவர்கள். எவ்வளவு அழகு இருந்தாலும், அந்த மாளிகைனால மிஞ்சுறது ஆபத்து மட்டும் தான். அந்த மாதிரி, நம்மளே நம்மள சுத்தி கட்டின அரக்கு மாளிகை இதெல்லாம். நவீன விஞ்ஞானம் நம்மள எவ்ளோ தூரம் முன்னேற வச்சுருக்கோ, அத விட அதிகமாவே நம்மள பாதிச்சுருக்கு. அது தெரிஞ்சே வாழவும் நாம பழகிட்டோம்... அன்பார்ச்சுநேட். "

அவன் கூறி முடிக்கவும் தொலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. மறுமுனையில் ஆனந்த். நடந்தவை அனைத்தையும் கூறினாள் அனிதா...
"இப்போ என்ன பண்ணலாம் அனிதா..."
"தெரியல..."
"சரி... நான் யோசிச்சு சொல்லறேன். நீ படுத்துக்கோ... கார்திக்க பாத்துக்கோ..."
"ஓகே..."
"பை"
"பை... ஹே... அனி..."
"ஹ்ம்ம்... சொல்லு..."
"நரேந்திரனுக்கு... நான் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லு..."
"ஹப்பா... இப்போவாவது தோணுச்சே... கண்டிப்பா சொல்லறேன்... ஹ்ம்ம்... பை..." 
"பை"

தொலைபேசி இணைப்பைத் துண்டித்த ஆனந்த், சிந்திக்கத் தொடங்கினான். மறுமுனையில் நரேந்திரன் கார்த்திகைத் தூக்கி விளையாடிக் கொண்டிருந்தான். இருவரின் முகத்திலும் மனமார்ந்த மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது.