சனி, 1 டிசம்பர், 2018

அப்பாவிற்கும் ஒரு கடிதம்

அன்புள்ள அப்பாவிற்கு,

நலமா?  கடிதம் எழுதும் படலம் தொடங்கியதுமே உனக்கும் ஒரு கடிதம் எழுதுவது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் உன் பிறந்த நாளன்று உனக்கு எழுதுவது கூடுதல் சுகம் என்பதால் கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. நீயும்... நானும்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாயின் பங்களிப்பை யாரும் கேள்வி கேட்பதில்லை; கேட்கவும் முடியாது. கருவில் சுமப்பதில் இருந்தே அந்த பந்தம் சாஸ்வதம் ஆகி விடுகிறது. ஆனால் தந்தையுடனான உறவு அப்படி இறுகப் பிணைக்கப் பட்டதில்லை. அதனாலேயே ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தின் ஆணிவேராய் இருப்பதைத் தாண்டி ஒரு தந்தையின் முக்கியத்துவம் பலருக்கும் - பல தந்தைகள் உட்பட - புரிவதில்லை. ஒரு மிகச் சிறந்த தந்தையை பெற்றவன் என்ற முறையில் உன்னிடத்தில் இருந்து நான் கற்றவைகளையும், பெற்றவைகளையும் கடிதச் சுருக்கமாய் சொல்கிறேன் கேள்.

உன்னைப் பற்றி யோசிக்கத் தொடங்கியதுமே நாம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்த தருணங்கள் தான் மனதை நிறைக்கின்றன. அதுவே ஒரு பெரிய வரம் என்றாலும் அந்தச் சிரிப்புகளுக்குப் பின்னால் இருந்த நகைச்ச்சுவை உணர்வு அதை விடப் பெரிய வரம். இன்றளவும் என்னை அறிந்த அநேகமானோர் என்னிடம் ரசிப்பது அந்த நகைச்சுவை உணர்வைத் தான். அதன் மூலாதாரம் நீ தான். குருட்டுக் கொக்கு, திருமலை நாயக்கர் கதைகளை சொல்லும் பொழுது அந்தக் கதைகளை விட நீ அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே சொல்வதைப் பார்த்து நாங்கள் சிரித்தது தான் அதிகம். அதே போல் எவ்வளவு காட்டமான கருத்தாய் இருந்தாலும் அதைக் கிண்டலாய், கேட்பவர் கூட கோபம் மறந்து சிரிக்கும் வகையில் நீ கூறுவதை நிறையவே இரசித்திருக்கிறேன். தந்தை என்றால் பத்தடி தூரம் நின்று பயபக்தியோடு பேச வேண்டுமென்று அதிகாரச் செருக்குடன் விறைப்பாய் நிற்காமல் உன்னை நாங்கள் விளையாட்டாய் சீண்டிய போதும் எங்களுடன் சேர்ந்து சிரித்த பக்குவம் தான் எங்கள் தன்நம்பிக்கையின் முதற்படி.

சிரிப்பிற்கு அடுத்ததாக உன்னிடம் பெரிதும் ரசித்த, கொஞ்சமே கொஞ்சம் கற்றுக்கொண்ட பண்பு சிரத்தை. என் பள்ளிப் பருவத்தில் பல நாட்களில் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் கிளம்பி பெயருக்குச் சற்றும் சம்மந்தமில்லாத நிலையில் இருக்கும் திருவள்ளுவர் பஸ்ஸில் எட்டு ஒன்பது மணி நேரம் பயணித்து, எங்கோ ஒரு மூலையில் உண்ணச் சரியான உணவு கூடக் கிடைக்காத அத்துவானக் காட்டில் கொளுத்தும் வெயிலில் கருகி, மறுபடியும் ஓர் கடகடா வண்டி பிடித்து நள்ளிரவு தாண்டி தான் நீ வீட்டிற்கு வருவாய். எங்களுக்காக. பல சமயம் அடுத்த நாளே கூட வேறு எங்கோ செல்ல வேண்டியிருக்கும். உடல்நிலை கூட முன்னப் பின்னே இருக்கும். ஆனால் ஒரு நாள் கூட நீ அதிகமாய் தூங்கியோ, சுணங்கிப் படுத்தோ நான் பார்த்ததில்லை. அப்படி நீ பயணித்த சமயங்களில் எங்களுடன் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி உன் சிரத்தை என்னுடன் இருந்து எனக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இவ்வளவு அலைச்சல் இருந்த பெரும்பாலானோரை புகை, மது என்று ஏதோ ஒரு கெட்ட பழக்கம் பீடித்திருக்கும். அதை சமூகம் கூட பெரிதாய்க் கண்டிப்பதில்லை. அவர்களுக்கும் ஒரு ஆறுதல் தேவை தானே என்று ஆதரவாய் தான் பேசியிருக்கும். ஆனால் அப்படி எந்தச் சாக்கு போக்கும் சொல்லாமல் இன்று வரையிலும் பக்தியுடனும், நல்ல பண்புகளுடனும் இருப்பது உன் தனிச் சிறப்பு என்றே சொல்லலாம். உன்னை கலைந்த  தலையுடனோ, நீறு இல்லாத நெற்றியுடனோ, எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்காமலோ பார்த்ததே இல்லை. வெளிநாடுகள் சென்று, வெவ்வேறு சூழ்நிலைகளில் மது அருந்த, புகைக்க, புலால் உண்ண சந்தர்ப்பங்கள், ஏன் கட்டாயங்கள் இருந்த பொழுதும் அந்த எண்ணம் சிறிதளவும் எனக்கு வராததற்கு முழு முதல் காரணம் நீ. எவ்வளவு உபதேசம் செய்திருந்தாலும், நல்ல சூழ்நிலை இருந்திருந்தாலும் கண்முன் உதாரணமாய் நீ வாழ்ந்து காட்டியதைப் போல் தாக்கம் இருந்திருக்காது. இன்னும் சுருங்கச் சொன்னால் நான் நானாக இருப்பதில் ஆகப் பெரும் பங்கு உன்னுடையது.

நீ வரையும் அழகிய படங்களைப் போல் சரளமாய், இயற்கையாய், அழகாய் கூறி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இன்னும் கூற நிறைய விஷயங்கள் இருந்தாலும் இங்கே நிறுத்தினால் அழகாய் இருக்கும் எனத் தோன்றுகிறது - ஒரு நல்ல பாடலின் பின்பு வரும் இரம்மியமான  மௌனத்தைப் போல்.

என்றும் அன்புடன்,
உன் மகன்