செவ்வாய், 25 செப்டம்பர், 2018

அம்மாவிற்கு ஒரு கடிதம்

அன்புள்ள அம்மா,

தாய் நாட்டிற்கு கடிதம் எழுதும் போட்டி அறிவித்திருப்பதாகக் கூறினாய். அதற்கு முன்னோட்டமாய் முதலில் உனக்கு ஒரு கடிதம் எழுதி பயிற்சி பெறலாம் என்று உத்தேசம். மின்னஞ்சல் கூட பழைய தொழில்நுட்பமாகி மேக வழிப் பகிரல் (அதான் Cloud Sharing) செய்யும் அவசர யுகத்தில் நினைப்பதையெல்லாம் நிதானமாய், கோர்வையாய் பகிரத் தான் நேரம் கிடைப்பதில்லை. ஒரு நீண்ட வாரம் தொடங்கும் முன் நிசப்தமான இரவில் கணினி முன் அமரும் இது போன்ற அரிய தருணங்களில் தான் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகள் தூசு தட்டப்பட்டு, மெருகேறி, வார்த்தைகளாய் மாறும். உன் பிறந்த நாளுக்கு எழுத உத்தேசித்து இதோ ஒரு வார இறுதியில் ஒரு வழியாய் எழுதத் தொடங்கியிருக்கிறேன் - சீக்கிரம் முடித்து விடுவேன் என்ற (அதீத) நம்பிக்கையுடன்.

பெரிதாய் பரிச்சயம் இல்லாத நபர்களையும் விஷயங்களையும் பற்றி எழுதுவது சற்று சுலபம். கொஞ்சம் புதிய கருத்துக்கள், ஒரு வித்தியாசமான பார்வை, நிறைய புருடா கலந்தடித்தால் போதும். ஆனால் பிறக்கும் முன்னரே பரிச்சயமான ஒருவருடன் தினசரி விஷயங்களைத் தாண்டி ஆழ் மனதில் பதிந்த நினைவுகளை புரட்டிப் பார்த்து, மிகைப்படுத்தாமல்,  சலிப்புத் தட்டாமல் வடிகட்டி, செயற்கையாய் இல்லாமல் பகிர்வது அவ்வளவு சுலபம் இல்லை. குறிப்பாக நம் குடும்பத்தில் அந்த வழக்கம் அறவே கிடையாது. ஆனால் அம்மாவிடமே சொதப்பும் தைரியம் இல்லாமல் போனால் எழுத முனைவதே வீண் என்பதால் தொடர்கிறேன்; சொதப்பினாலும் நீ வழக்கம் போல ஒரு "ஹ்ம்ம்... லெஸ்ஸா தா உண்ணியூ" பதிலை தலையை மெல்லமாய் ஆட்டிக்கொண்டே தருவாய் என்று தெரிந்து.

கடிதம் எழுதும் எண்ணம் வந்ததுமே உன்னைப் பற்றிய என் முதல் நினைவு என்னவென்று யோசித்தேன். சத்தியமாய் தெரியவில்லை. சானடோரியம் வீட்டு துபுதுபு மோட்டார் சத்தத்தில் உரையாடிய அதிகாலைப் பொழுதுகள், நள்ளிரவில் எழுந்து தொணதொணத்த தருணங்கள், சீனியிடமும் ஆனந்திடமும் பொம்மைகள் பகிர்ந்து திட்டு வாங்கியது, ஆல்பம் என்ற வார்த்தை மனதில் பதியாமல் "தூகம்பம்" என்று குழப்பியது, விதவிதமான ஆஸ்பத்திரிகளுக்கு படை எடுத்து மருத்துவ சிகாமணிகள் வைத்தியம் பயில உதவிய மாலைப் பொழுதுகள்  என பல காட்சிகள் கண்முன் நிழலாடினாலும் அவற்றை காலவாரியாக வரிசைப்படுத்த முடியவில்லை. இந்த முயற்சியில் நான் உணர்ந்த மற்றொரு விஷயம் - உன்னைப் பற்றிய என் நினைவுகள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறுகச் சிறுக சேகரித்தவை. "கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி" ஒரே கடிதத்தில் எழுதி தள்ள முயற்சித்தால் "க க க போ" தான். அதனால் முதலில் "talking points" என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது போல் ஒட்டு மொத்த நினைவுகளையும் மிகச் சில உணர்வுகளாய்ப் பிரித்து ஒவ்வொரு உணர்விலும் கூற வந்ததை சுருங்கக்  கூறி இருக்கிறேன். எதுவும் விட்டு போகவில்லை என்கிற நப்பாசையுடன்.

முதலில் அடிக்கோடிட்டு கொட்டை எழுத்துக்களில் குறிப்பிட வேண்டிய விஷயம் நன்றி.  அம்மா தான். கடமை தான். நன்றி அவசியம் இல்லை தான். ஆனால் நீ எனக்காக செய்ததை உலகில் எத்தனை பெண்கள் அவர்கள் மகன்களுக்கு செய்திருப்பார்கள் என்பது சந்தேகமே. அது எனக்காக உன் கனவுகளை தியாகம் செய்ததில் தொடங்கி, ஒரு நாள் விடாமல் போஷாக்கான உணவு சமைப்பதிலிருந்து, எங்கும் நிம்மதியாய்ச் செல்ல முடியாமல்  மருந்துக் கூடை சகிதம் அலைந்த தருணங்களில் கூட சலித்துக் கொள்ளாத அளப்பறிய அன்பு வரை உன்னுடன் கழித்த ஒவ்வொரு நொடிக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இதை இந்த கடித்தத்தைத் தவிர வேறு எங்கு கூறினாலும் செயற்கையாகத் தான் இருக்கும்.

செய்தவைகளால் நன்றி பிறந்ததென்றால் செய்வித்தவைகளால் தெளிவு பிறந்தது. அன்பு ஸ்டோரில் அரை குயர் ஏடு வாங்குவது, கீழ மார்க்கெட்டில் காய்கறி பேரம் பேசி வாங்குவது, துணிகளை ஊறவைத்து,  துவைத்து, அலசி பிழிந்து காயப்  போட்டு  மடித்து வைப்பது, பாத்திரம் துலக்குதல், அடி பம்பில் தண்ணீர் எடுத்து அண்டாவை நிறைப்பது, கிணற்றில் நீர் இறைப்பது என ஏறக்குறைய எல்லா வீட்டு வேலைகளையும் சிறு வயதிலேயே செய்து விட்டதால் இன்று வரை எந்த வேலையையும் குறைவாக நினைத்ததும் இல்லை, எந்தச் சூழ்நிலையிலும் செய்வதறியாது திரு திருவென்று விழித்ததும் இல்லை. தெரியாத ஊரில் தனியாக இருந்த காலங்களில் இந்த அடித்தளம் எவ்வளவு  உதவியாக இருந்தது என்பதை கடிதச்ச்சுருக்கமாய் விவரித்து விட முடியுமா என்று தெரியவில்லை.

செய்தவை செய்வித்தவை கிடக்கட்டும். நீ இருந்ததாலேயே எவ்வளவோ பெற்றிருக்கிறேன் தெரியுமா? மூன்று பட்டப் பின் பயிற்ச்சிகளால் நிறைந்த ஞானம், அதில் தங்கப்  பதக்கங்கள் பெற்றும் பெருமை பேசாத அடக்கம், ஏதோ டைரியில் தோன்றியது எழுதுவதைப் போல் முனைவர் ஹரிதாஸுக்கு மாதம் ஒரு பொருளாதார ஆய்வறிக்கை எழுதித் தரும் அறிவு, பேச்சிலும் சிந்தனையிலும் தெளிவு, அநாவசியமாகப்  பேச மறுக்கும் பக்குவம், மனதாரச் சிரிக்கும் குழந்தைத்தனம், கேட்காமல் கொடுக்கும் தாராளம், பக்திச் சிரத்தை, செய்வன திருந்தச் செய்யும் அர்ப்பணிப்பு -இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்; கடிதம் காவியமாகி விடும் என்பதால் நிறுத்தி விட்டேன். இப்படிப்பட்ட ஒருவளை இருபது ஆண்டுகளுக்கு மேலாக தினசரி பார்த்துக் கொண்டிருந்தால் அதில் கொஞ்சமாவது ஒட்டாதா என்ன?

இது வரை சொன்னதையும், சொல்லாததையும் இன்னமும் சுருக்கி சொந்தக் குரளா(லா)கச் சொல்கிறேன் கேள்...

வெற்றியும் நிச்சயம் பெற்றிடும் நின்போன்ற
பெற்றவள் பெற்ற சேய்

என்றும் அன்புடன்,
உன் மகன்