சனி, 31 டிசம்பர், 2011

2012

முடிவிலி எனத் தோன்றும் காலத்தை
முடிந்து தொடங்கும் ஆண்டுகளாய்ப் பிரிக்க
இன்பங்கள் பெற்று, பாடங்கள் கற்று,
பயணங்கள் மேற்கொண்டு, பலரையும் சந்தித்து,
சிரித்து, அழுது, சிலிரித்து, உழைத்து 
களைத்து, மறுகிச் சேர்த்த நினைவுகளை
அசை போடக் கிடைத்ததாம் ஆண்டிறுதி...
மனிதம் பெருக்கி மாட்சி பெற்று
சிறுமை தொலைத்து சிறந்து செழிக்க
மற்றுமோர் சந்தர்ப்பமாய்ப் பிறக்குமாம் புத்தாண்டு...
கொண்டாடிக் குதூகலித்துப் புதிதாய்ப் பிறப்போம் 
பிறக்கும் இவ்வாண்டினிலே மேம்படுவோம், மேம்படுத்துவோம்!
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புதன், 31 ஆகஸ்ட், 2011

ஓவியம்

சிந்தையில் இருந்து சிதறிய கற்பனைத் துளி
விந்தைகள் புரியும் வண்ணங்களின் ஆவளி
ஓவியம்!

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

துணைவி

ஒரு கோடி ஆனந்த நினைவுகளின் குவியமே
ஒரு மின்னற்கொடி எனச் சிரிக்கும் நகையழகே
ஒரு அணைப்பில் உயிர் தீண்டும் இன்பத்தீயே
ஒரு விஷயம் கூற வேண்டும் கேட்டுவிடு!

உள்ளத்து அழகோ உள்ளிருக்கும் அன்போ
உடல் கொண்ட வடிவோ விரலோர ஸ்பரிசமோ
நிஜமாய்ச் சொல்கிறேன் நீ எனை வென்றிட்டாய்
நித்தம் உன் மடி நாடும்படி செய்திட்டாய்!

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

நட்பு

கைகள் தோள் தொட
அக்கறை உளம் தொடும்!

கோபம்!

குறைக்கச் சொல்கிறது இலக்கணம்
குறைந்தால் மதிப்பில்லை இக்கணம்
கோபம்!

மகிழ்ச்சி

பிறர்க்குத் தருகையில் கர்ணன்
தனக்குத் தருகையில் கருமி
மகிழ்ச்சி!

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அமாவாசை நிலவொளி!

விடிவெள்ளிக்குத் துணையாய் விடியும் வரை விளக்கெரிய
குமுத இதழ்கள் குமுதம் படித்தனவோ - கார்வண்டுக் கண்களவை
வெள்ளித் திரையில் இலயித்தனவோ யாரறிவார்!
அடுத்த மாதப் பரீட்சையோ அக்காள் மகளிடம் வாஞ்சையோ
அதரம் உதிர்த்த அழகியதோர் ராகமோ - ஒப்பற்ற அழகியுந்தன்
அறையில் கூட விளக்கெரிய நான் மட்டும் இருளில்!
அமாவாசை நிலவொளியில் அந்தரங்கமாய்ச் சொன்னதை
அகமகிழ நேரே சொல் அடுத்த கணம் அங்கிருப்பேன் - இரகசியமாய்க் காதலித்த
அல்லல் நீங்கி அருள் பெறுவேன்!