வியாழன், 20 டிசம்பர், 2012

(சற்றே பெரிய) சிறுகதை - ஊடகம்



மின்னஞ்சல் என்ன?

iamtheemperor@gmail.com

அடேங்கப்பா... ஹ்ம். கொஞ்சம் இருங்க வெவரத்த சேகரிச்சுக்குறேன்...

வயசு இருபத்தி நாலு, சாப்ட்வேர் கம்பெனில வேலை, இவன் நண்பன் சுரேந்திரனுக்கும், இவனோட முன்னாள் காதலிகளில் ஒருத்தியான சினேகாவுக்கும் இன்னைக்கி பிறந்த நாள். இவன் கம்பெனில வேலை பாக்குற மாலா, கிறிஸ்டோபர், ஷேக் இவங்கல்லாம் அவன் நண்பர்கள் பட்டியல்ல இல்ல. தெரியுமானு கேக்கணும். போன தடவ பாத்ததுல இருந்து நாலு பேர் இவன பத்தி பேசிருக்காங்க, ரெண்டு பேர் இவனுக்கு தகவல் அனுப்பிருக்காங்க, ஒருத்தி நண்பர்கள் பட்டியல்ல சேத்துக்க சொல்லி கேட்ருக்கா. இவனுக்கு தெரிஞ்சவங்க, தெரிஞ்சவனுக்கு தெரிஞ்சவங்கனு ஒரு கத்தை கதைகள் இருக்கும். அதுல ஒரு நாலஞ்ச காட்டி விடுங்க. எந்த கதைன்றது முக்கியம் இல்ல. கேட்டா கொலாபரேடிவ் பில்டரிங் அது இதுனு புரியாத மாதிரி ஏதாவது காரணம் சொல்லிக்கலாம். இதெல்லாத்த விடவும் முக்கியமா இவனுக்கு பாடி பில்டிங், லீ ஜீன்ஸ், பொண்ணுங்க கூட பேசுறது, பாஸ்கட் பால் எல்லாம் பிடிக்கும். அதுனால அது சம்மந்தமா ஒரு ரெண்டு மூணு விளம்பரங்கள பக்கவாட்ல காமிச்சு விட்டுடுங்க. புரிஞ்சதா?

சாரிங்க... வேலை மும்மரத்துல உங்கள கவனிக்க முடியல. தினம் என் முன்னாடி உக்காந்து உலக நடப்பெல்லாம் அலசி இணையத்துக்குள்ளயே வாழ்கையை கடத்துற ஆட்களுக்கு நான் யாருன்னு உடனே புரிஞ்சுருக்கும். மத்தவங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக்கிறது முக்கியம். இன்னைக்கி உலகம் முழுக்க ரொம்ப பிரபலமா இருக்குற ஒரு இணைய தளத்துல தான் நான் வேலை பாக்குறேன். பேரை சொன்னா பிரச்சனை வரும். அதுனால பொதுவா சமூக ஊடகம் (சோஷியல் மீடியா) னு வச்சுக்கோங்க. எங்க நிறுவனத்துல ராப்பகலா வேலை பாக்குற லட்சக்கணக்கான கணினிகள்ள நானும் ஒருத்தன். ஒரு நாளைக்கே லட்சக்கணக்கான இல்லல்ல கோடிக்கணக்கான (இப்பல்லாம் லட்சம் கோடிக்கே மதிப்பில்லாம போச்சே) மக்களை, அவங்களோட நடவடிக்கைகள அமைதியா வேடிக்க பாத்து மகாபாரதத்தோட போட்டி போடற அளவுக்கு கதைகள் இருக்கு. இன்னைக்கி இந்த பகுதில இருக்குற கணினிகளுக்கு பராமரிப்பு நாள். இன்னும் மூணு மணி நேரத்துக்கு வேலை இருக்காது. அதான் தற்காலிக நினைவுகள தாண்டி என் நிரந்தர ஞாபகத்துல சிதறின துண்டுகளா தங்கி போன விஷயங்கள்ல சிலத பகிர்ந்துக்கலாம்னு உங்கள வர சொன்னேன். எல்லாத்தையும் ஒரே சமயத்துல சொன்னா பாவம் நீங்க குழம்பி போய்டுவீங்க. க்ளஸ்டர், இன்டக்ஸ், ஹாஷிங்னு ரொம்ப பக்குவமா அடுக்கி வச்சுமே எனக்கு சில சமயம் குழம்பி போய்டும் யாரு என்னனு.அதுனால நம்ம ஊர்காரங்க சிலருக்கு நடுல நடந்த ஒரு கதைய நடுல மானே தேனே பொன்மானே எல்லாம் சேத்து உங்களுக்கு சொல்லறேன்... பிடிக்கும்ன்ற நம்பிக்கையோட... ஹாங்... சொல்ல மறந்துட்டேன். “இந்தக் கதையில் வரும் அனைத்து கதா பாத்திரங்களும், சம்பவங்களும் கற்பனையே... யாரையும் குறிப்பிடுபவை அல்ல...” இத சொல்லாட்டி இப்பல்லாம் நெறையா பிரச்சனைகள் வருதாம். எதுக்கு வம்பு. சரி கதைக்குள்ள போவோம்...

1998 - தேனி

தென் தமிழ்நாட்டிலே மிகப்பழமையான கல்லூரிகளில் வித்யா அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியும் ஒன்று. தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை எண்பத்தி ஐந்திலிருந்து பிரியும் ஒரு பசுமை படர்ந்த சாலையில் ஆறு கிலோமீட்டர்கள் சென்றால் வி.சி.ஏ.எஸ் வளாகத்தை அடையலாம்.

ஆயிரக்கணக்கான மாணவர்களை நல்ல மனிதர்களாக சமுதாயத்தில் பத்திரமாகச் சேர்த்து, பல முறை கல்வித் தரத்திற்காக விருதுகள் வாங்கி, பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கங்களைக் குவித்த அந்த கலைக் கூடம், பொறியியல் மோகம், சீரற்ற நிர்வாகம், புற்றீசல் போல் முளைத்த கல்லூரிகள் என்று பல்வேறு காரணங்களால் பொலிவிழந்து, சற்றே சிதைந்து, வயதான கதாநாயகி போல் நின்றது. இந்தக் கல்லூரியின் தற்போதைய பெருமை, அதில் படிக்கும் அழகிய பெண்கள், கொச்சையாகச் சொன்னால் பிகர்கள்.

“இந்த காலேஜ் அட்டு பிகர் கூட மத்த காலேஜ் கும் பிகர விட பட்டாசா இருப்பா மாப்ள... அப்பிடி ஒரு அமைப்பு...” என்று கூறும் அளவிற்கு மதுரை, தேனி, போடி, திண்டுக்கல் வட்டாரங்களில் காளையர்கள் மத்தியில் இந்தக் கல்லூரி மிகப் பிரபலம். கல்லூரிக்குச் செல்வதையே மறந்து இங்கு தவம் கிடக்கும் நவீன ரோமியோக்களையும், “என் ஆள இவன் வெரட்டி வம்பிழுக்குறான் மாப்ள வக்காளி போட்டாத் தான் இவைங்களுக்கெல்லாம் புத்தி வரும்...” என்று புஜம் தட்டும் வீரத் திருமகன்களையும் இங்கு ஏராளமாகப் பார்க்கலாம்.

ஆனால் பெரும்பாலானோர் கல்லூரியின் எதிரே கடமை தவறாமல் குலத்தொழில் தொடர்ந்த மற்றொரு நாயரின் டீக்கடையில் நின்று, தூரத்திலிருந்து காதல் பார்வை வீசி, தோராயமாக ஒரு பெண் அந்தப் பக்கம் பார்த்தாலே “அந்த பிகர் என்னைய பாத்து சிரிச்சுருச்சு மாப்ள...” என்று மார்தட்டிக் கொள்ளும் மன்மதன்கள் தான்.

யார் பெரிய அழகி என்று கருத்துக் கணிப்பே நடத்தும் அளவிற்கு அழகிய நங்கையர் இருந்தும் பெரும்பாலான ஆண்களின் கண்ணோட்டத்தில் முதலிடம் வகிப்பது ரூபா சுவாமிநாதன் தான். ஐந்தடி ஏழு அங்குல உயரம், பாண்டிய நாட்டுச் சின்னத்தைக் கண்களாய்க் கொண்டவள். அம்புகளாய் உள்ளம் துளைக்கும் கூரிய பார்வை, நடு முதுகு தாண்டிப் பாயும் கரிய அருவி போல் கூந்தல், மெருகேற்றிய சந்தனக்கட்டை போல் மென்மையான பொன்னிற மேனி, கனியாது திரண்ட பெண்மை, கொடியிடை, கொஞ்சும் தமிழ், கொள்ளை கொள்ளும் நடை என ஒரு ஆணின் டெஸ்டோஸ்டீரோன் அளவுகளை எகிறச் செய்யும் அத்தனை அம்சங்களும் அவளுக்கு இருந்தன. பிரம்மன் மெனக்கெட்டு மாகாணி அளவும் பிசகாத அழகிய இதழ்களைப் படைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து செதுக்கினாற்போல் அத்தனை அழகான செவ்விதழ்கள். லேசாக அவை விலகி உள்ளிருக்கும் முத்துச் சரத்தைக் காட்டினாலோ வழிப்போக்கன் கூட கவிஞனாய் மாறி விடுவான். சற்றே நீண்ட முழுமதியைப் போன்ற முகமும், கன்னம் தொட்டு விளையாடும் அந்த ஒற்றை முடிக் கற்றையும், கூரிய அழகான அளவான மூக்கும் அவள் அழகின் மேல் அணிவிக்கப்பட்ட வைர கிரீடமாய் வீற்றிருந்து அழகுலகின் முடிசூடா ராணி அவள் தான் என்று அறிவித்துக் கொண்டிருந்தன.  அவளை விட ஓரிரு அங்குலம் உயரம் கம்மியாய் இருந்த ஆண்கள் கூட “ஏன் சூர்யா அனுஷ்காவோட நடிக்கலையா... அதெல்லாம் தெய்வீக காதல்... பண்றவைங்களுக்குத் தான் புரியும்" என்று காரணம் சொல்லி பொய்க்கால் குதிரை காலணி போட்டு அவளைப் பின்தொடர்ந்தனர். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து காதல் கடிதங்கள் விகிதம் ஒரு குட்டி போஸ்ட் ஆபீஸ் அளவிற்கு அவளிடம் காதல் கடிதங்கள் சேர்ந்திருந்தன.

இயற்கையிலேயே அதிகம் மற்றவர்களுடன் பழகாத இண்ட்ரோவெர்ட் என்பதால் அவளை மிகவும் அடக்கமான அமைதியான பெண்ணாகவே அநேகமாநோருக்குத் தெரியும். வீசம் அழகு அதிகம் இருந்தாலே கர்வம் மேலோங்கப் பேசும் பெண்களுக்கு இடையே இவள் யார் மனதையும் புன்படுத்தியதும் இல்லை, யாருக்கும் மசிந்ததும் இல்லை. கடிதம் கொடுப்பவரிடம் “இதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க. இனிமே தயவு செஞ்சு இப்பிடி பண்ணாதீங்க... நீங்க எனக்கு அண்ணன் மாதிரி...” என்று கூறி சத்தமில்லாமல் கடந்து செல்வாள். அவள் முடியாது என்று சொன்னது கூட மனதில் உறைக்காமல் மின்சாரக் கனவு பிரபு தேவா போல் பேச்சு வராமல் திரும்பி வருவான் காதல் சொல்ல வந்த அந்த இளைஞன். இந்த வரிசையில் அந்த ஏரியாவின் அறிவிக்கப்படாத தாதா குமரனும் ஒருவன் என்பதால் இவளைக் கட்டாயப்படுத்தும் தைரியம் யாருக்கும் வந்ததில்லை.

அழகு, காதல், ரசனை என்று விந்துக்களின் கண்ணோட்டத்திலிருந்தே அவளை அனைவரும் பார்த்ததாலோ என்னவோ அவளுடைய குணம், அவளுக்குள் புதைந்து கிடந்த ஆசைகள் யாருக்கும் புரியவில்லை. சரியாகச் சொன்னால் யாரும் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. சிறு வயதிலேயே தாயை இழந்த பெண் என்பதால் அன்னையிடம் உணர்வுகளைப் பகிரும் வசதி கூட அவளுக்கு ஏற்படாமலேயே போய் விட்டது. கல்வியில் நாட்டம் குறைந்ததால் தற்பொழுது படிக்கும் வரலாறு இளங்கலை பட்டப் படிப்பு கூட போராடிப் பெற்றது தான். ஐந்தாம் அரையாண்டில் காலெடுத்து வைக்கும் பொழுதே பிறந்த வீட்டுச் சீர் போல் பத்து அரியர்கள். அடிப்படை பாடங்களில் கூட அவளது புரிதல் கம்மி என்பது அவள் பின் சுற்றும் ஆண்களுக்கு மட்டும் அல்ல, அவளுடன் இருக்கும் பெண்களுக்கே தெரியாது. ஆதரவுக்காக ஏங்கி, துக்கங்களைத் தனக்குள் புதைத்து, தன் குறைகள் வெளியே தெரியாமல் சமாளித்து தினமும் வாழ்வதே பெரிய சவாலாக இருப்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய அறை. அங்கு தினமும் சென்று தனிமையில் உறங்கும் வலி அவள் ஆழ்மனதை வெகுவாக பாதித்திருந்தது.

தற்சமயம் ரூபாவின் மிகப்பெரிய ஆறுதல் அவளுக்கு வரும் காதல் விண்ணப்பங்கள் தான். தன்னுடைய குறைகளும் ஏக்கங்களும் ஆண்கள் உருகி எழுதும் வார்த்தைகளில், தொடர்ந்து வந்து இவளை ஆராதிக்கும் மோகத்தில், கல்லூரி மொத்தமும் இவளைத் திரும்பிப் பார்பதால் ஏற்படும்  புகழில் கரைந்து போவது போல் உணர்ந்தாள். தன்னை இத்தனை பேருக்குப் பிடிக்கும் என்கிற உணர்வு, அவளது சுய வெறுப்பைத் தணியச் செய்தது. இரவின் நடுவே தன் அறைச்சுவர்களின் அந்தரங்கத்தில் அந்தக் கடிதங்களைப் படித்து, ரசித்து, மோகங்கொண்டு பரவசமான கணங்கள் தான் இதுவரை அவளது வாழ்வின் மிக இனிய தருணங்கள்.

ரூபாவின் அழகைத் தாண்டி அவளை நேசிக்கும் ஒரு உள்ளம் அவள் தந்தை சுவாமிநாதன். வழுக்கை விழுந்த தலையில் மேக் அப் இல்லாத சூப்பர் ஸ்டார் போல் ஆங்காங்கே வெள்ளை முடிகள், மாநிறம், பூர்ணம் விஸ்வநாதன் கண்ணாடி, தடித்த உடல், கனத்த குரல், பரந்த மனது கொண்ட ஒரு ஐம்பது வயது நல்லுள்ளம். இவருக்கு வாழ்க்கையில் இருக்கும் ஒரே பிடிப்பு ரூபா என்பதால் அவள் மேல் அபரிமிதமான பிரியம். தன் மனைவியின் அழகும், அடக்கமும் ரூபாவிற்கு அப்படியே வந்துவிட்டதாக நம்பியதால் அந்தப் பிரியம் பன்மடங்கு உயர்ந்திருந்தது. மற்றவர்களிடம் பெரிதாய்ப் பழகாத குணம் இவரிடமிருந்து தான் ரூபாவிற்கு வந்திருக்க வேண்டும். அவளுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்துக் கொடுப்பது, அவள் கேட்காமலேயே ஆடை, அணிகலன்கள் வாங்கிக் கொடுப்பது, அவள் நலத்திற்காக இறைவனிடம் வேண்டுவது என அவளுக்காகவே வாழ்ந்து வந்தாலும், மறைமுகமாய் பாசத்தைக் கொட்டினாலும்  அவளது கூட்டுக்குள் சென்று அவளுடன் மனம் விட்டு உரையாடும் பக்குவம் இவருக்கு இருந்ததில்லை. தந்தையிடம் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டும் பழக்கமும் ரூபாவிற்கு இருந்ததில்லை.

தாயில்லாத குறை தெரியக் கூடாதென தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர் சுவாமிநாதன். பருவ காலத்தில் ரூபாவின் தாய் மலேரியா வந்து இறந்து விட, ஜெமினி கணேசன் போல் இருப்பதாய்க் கூறி இவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் படக் கூட பெண்கள் தயாராக இருந்த போதும், மகள் சித்திக் கொடுமைக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே அந்த வரன்களை எல்லாம் மறுத்து விட்டார். வங்கியில் பணி புரிவதால் எங்கு ஊர் விட்டு ஊர் மாற்றலாகி ரூபாவிற்கு அசௌகரியம் ஏற்படுமோ என்று தனக்கு பதவி உயர்வே வேண்டாம் என்று தொழில் வளர்ச்சியையும் துறந்து விட்டார்.

சுருக்கமாய்ச் சொன்னால் இவரது வாழ்கையின் மையக் கரு ரூபா. அப்படிப் பொத்திப் பாதுகாத்த அழகுப் பதுமைக்கு ஓர் பிரச்சனை வந்தது...

2011 - சென்னை

“கேஷவ்... கம் அண்ட் ஹாவ் யுவர் டின்னர். ஹவ் லாங் ஷுட் ஐ கால் யூ? கம் னா” மகன் இருக்கும் அறையை நோக்கி இந்திய வாடை வீசும் ஆங்கிலத்தில் சலிப்புடன் கேட்டபடி திவ்யா தன் பருத்த உடலால் நாற்காலியை நசுக்கலானாள். ரீங்காரம் மிகுந்த அவளது கணீர் குரலில் அந்த அழைப்பு ஏறக்குறைய மிரட்டல் போல் கேட்டது. தோளுக்குக் கீழ் நீளும் அவளது சுருட்டை முடி கொண்டைக்குள் அடைக்கப்பட்டிருக்க, இயற்கையிலேயே சாரசரிக்கு அதிகமான எடை கொண்ட உடலமைப்பில் நகரத்துச் சொகுசு பல ஆண்டுகளாய்ச் சேர்த்த கொழுப்பு ஆங்காங்கே படிந்திருந்ததால் அவள் அணிந்திருந்த வெள்ளை சல்வார் முன்னும் பின்னும் உடலுடன் ஒட்ட முயன்று தோற்று கட்சிக் கொடி போல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. துப்பட்டாவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அது சோபாவில் இதங்கேடாய்ச் சரிந்து கிடந்தது. சில நிமிடங்கள் பாஸ்தா செய்வதற்காக நின்றதன் பலனாய் அவளது  முட்டிகள் உளையத் தொடங்கியிருக்க, வியர்வை முத்துக்கள் சற்று ஏராளமாகவே எட்டிப் பார்த்தன.

“மாமியார வீட்ல வச்சிருந்தாலும் தொல்லை... சனியன் ஒழிஞ்சதுனு அவரு தம்பி வீட்டுக்கு அனுப்பினாலும் நமக்கு வேலை அதிகமாகுது... புலி வால பிடிச்ச கதையா...” என்று மனதிற்குள் பொருமியபடி கேசவனுக்கு ஆங்கிலத்தில் அர்ச்சனையைத் தொடர்ந்தாள்.

பத்து நிமிட காத்திருப்பிற்குப் பின் கேசவனின் சொர்க்க வாசல் திறந்தது.

கேசவன் ரெங்கநாதன்... அந்த நகரத்தின் மிகப் பிரபலமான பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவன். சராசரி உயரத்திற்கும் அதிகமாய் வளர்ந்திருந்த அவன் ஆண்மகனாய் மாறிக் கொண்டிருப்பதை கன்னத்தை மறைக்கத் தொடங்கியிருந்த மயிர்கள் அறிவித்தன. அம்மாவைப் போலவே சுருட்டை முடி, கணினியை அதிகம் பார்த்துச் சோர்ந்த கண்கள், அதன் அடையாளமாய் லேசான கருவளையம், சற்றே தடித்த கண்ணாடி, லேசாய்க் குழி விழுந்த மாநிறக் கன்னங்கள், விஷமமா விவரமா என்று இனம் பிரிக்க முடியாத பார்வை கொண்ட அவனை முதல் முறை பார்க்கும் பலரும் “காதல் கொண்டேன் தனுஷ் மாதிரியே இருக்கான்” என்று தான் குறிப்பிடுவர்.  

பள்ளியிலிருந்து வந்த சில நிமிடங்களிலேயே அறைக்குள் சென்றவன் ஒரு வழியாக திவ்யாவின் இடைவிடாத அர்ச்சனையின் பலனாக அவனுக்கு விருப்பமான கருநீல போகேமான் டி ஷர்ட், கருப்பு ஷார்ட்ஸ் சகிதம் அங்குமிங்கும் தலைகுனிந்து நோட்டமிட்டபடி அமைதியாய் மேஜையை நோக்கி வந்தான்.

“ஒய் டோன்ட் யூ கம் வென் மம்மி ஈஸ் காலிங்...” அம்மா கடிந்து கொண்டாள்.

“ஐ வாஸ் பிசி மாம்...” சம்பிரதாயமாய் பதில் கொடுத்து பாஸ்தாவை மெல்ல ஆரம்பித்தான்.

“வாட் பிசி... இப் யூ டோன்ட் ஹாவ் யுவர் புட் இன் டைம் நோ, ஐ வில் டிஸ்கனக்ட் தி கம்ப்யூடர்...” கணினியைப் பிரிந்து கேசவனால் இருக்க முடியாது என்று நன்கறிந்திருந்த திவ்யா தன் பிரம்மாஸ்திரத்தைத் தவறாமல் பிரயோகித்தாள்.

“சாரி மாம்..” இந்த முறை குரலில் லேசான பதட்டம், கெஞ்சல்... இப்படி ஒவ்வொரு முறையும் கெஞ்சுவது கேசவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றாலும் அவன் தாய் அழுத்தக்காரி என்பதையும் அவளை வெறுப்பேற்றினால் முதலுக்கே மோசம் ஆகி விடும் என்பதும் அவனுக்குத் தெரியும்.

மனதிற்குள் வெற்றிப் புன்னகை பூத்தாலும் முகத்தில் செயற்கையான இறுக்கத்துடன் திவ்யா அமர்ந்திருக்க உணவு மெல்லும் பொழுது வெளிப்பட்ட மெல்லிய சவக் சவக் சத்தங்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த ஓர் அசௌகர்யமான அமைதி அங்கு குடிகொண்டது.

அந்த அமைதி பிடிக்காததாலோ என்னவோ அவளது அலை பேசி ஒரு ஆங்கிலப் பாடலைப் பாடி அவளை அழைத்தது.

“ஓ... அர்ச்சனா...” திரையில் தெரிந்த முகத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டு அலைபேசியின் உதட்டில் தெரிந்த பச்சை பொத்தானை லாவகமாய் வலது பக்கம் தள்ளி இணைப்புக்கு உயிர் கொடுத்தாள்.

“யா அர்ச்சனா... வாட்ஸ் அப்?”
“...”
“யா யா... ஐ ரிமெம்பர்... அட் டென் ஒ கிளாக் னா?”
“...”
“ட்ரூ... ஐ யாம் வொரிட் அபவுட் வாட் கேஷவ்ஸ் டீச்சர் ஈஸ் கோயிங் டு சே... ஷீ ஆல்வேஸ் கம்ப்ளைன்ஸ் அபவுட் ஹிம்...”
“...”
“ஷூர். ஐ வில் பிக் யூ அப் அரவுண்ட் நைன் ஒ கிளாக்... பை”

பேசி முடிக்கையில் அந்தப்புர சேவை நிவேதனம் முடிந்தது போல் கேஷவ் மறுபடியும் அறைக்குள் சென்று கதவை மூடியிருந்தான்.

“கேஷவ்... கோ டு பெட் சூன்... வீ ஹாவ் யுவர் ஓபன் ஹவுஸ் டுமாரோ...”

“ஓகே மாம்...” அறைக்குள்ளிருந்து மெல்லிய குரல் கேட்டது.

“என்ன ஓகேயோ... அகராதி...” என்று முணுமுணுத்தபடி தன் அறைக்குச் சென்றாள்.

மறுநாள்... நேரம் பகல் 11:10

சம்பிரதாய வரவேற்புகளும் பள்ளிப் பெருமை பாடும் விளம்பரப் பேச்சுக்களும் முடிந்த பின்னர் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் தனிமையில் அவரவர் ஆசிரியர்களைச் சந்திக்கும் நேரம்.

கண்ணாடிக்கு வெளியேயும், கண்ணாடி வழியாகவும் பார்ப்பதற்கு ஏதுவாய் சாந்தா டீச்சரின் கண்ணாடி மூக்கு நுனிக்கு இறங்கியிருக்க, மிடுக்கான மரகதப் பச்சைப் புடவையும், சீராக இழுத்து வாரப்பட்ட கூந்தலும், நுனி நாக்கு ஆங்கிலமும், மாசு மறு அற்ற சிவந்த சருமமும், நெற்றியில் புதிய பத்து பைசா அளவில் வைக்கப்பட்டிருந்த குங்குமப்பொட்டும் அவளது அதிகார தோரணைக்கு அழகு சேர்த்தன.

“யூ ஸீ மிஸ்ஸஸ். ரெங்கநாதன்... கேஷவ் இஸ் எ வெரி ஸ்மார்ட் பாய். ஹீ டாப்ஸ் இன் அல்மோஸ்ட் ஆல் சப்ஜெக்ட்ஸ். வீ ஹாவ் நோ கம்ப்ளைன்ட்ஸ் தேர். பட் ஹிஸ் சோஷியல் ஸ்கில்ஸ் ஆர் ப்ரிட்டி பதெடிக்... ஹீ ஈஸ் நாட் அட் ஆல் ப்ரெண்ட்லி. ஹீ கீப்ஸ் டு ஹிம்செல்ப் அண்ட் ஹீ மே பிகம் எ சோஷியல் அவுட் காஸ்ட் இப் திஸ் கண்டின்யூஸ்...”

திவ்யாவிற்கு அதற்கு மேல் எதுவும் சரியாகக் கேட்கவில்லை. தன் மகனைக் குறை சொல்லும் சாந்தாவைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது. ஒரு மாணவன் சற்றே தனித்திருப்பவனாக இருந்தால் இப்படியா பழி சுமற்றுவது என்று உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தாள். ஆனாலும் இந்தப் பள்ளியைப் பொறுத்த மட்டில் சண்டைகள், விவாதங்கள் வரவேற்கப்படுவதில்லை. மீறி சண்டையிட்டால் கேசவனின் டி.ஸீ. அடுத்த நொடி அவள் கையில் இருக்கும் என்று திவ்யாவிற்கு நன்றாகத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மௌனமாய் தலை ஆட்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஐ யாம் சாரி டு ரிபீட் திஸ் அண்ட் மேக் யூ அன்கம்பர்டபிள். வீ வில் நாட் பேஸ் எனி ப்ராப்ளம்ஸ் பிகாஸ் ஆப் ஹிஸ் கரண்ட் பிஹேவியர். பட் யூ வில் ஸ்டார்ட் ஹாவிங் எ டப் டைம் ஆப்டர் ஹி க்ரோஸ் அப். வீ பீல் ஹி நீட்ஸ் தி ஹெல்ப் ஆப் எ சைக்யாட்ரிஸ்ட். பட் இட் ஈஸ் அப் டு யூ...”

ஒரு வழியாக சாந்தா தன் காலக்ஷேபத்தை முடிக்க திவ்யா வேண்டா வெறுப்பாய்ச் சிரித்து நன்றி கூறி விடை பெற்றாள்.  வழக்கத்தை விட அதிகமாக ரெங்கநாதன் ஊரில் இல்லாத குறையை உணர்ந்தாள்.  கேஷவ் அவளை அமைதியாகப் பின்தொடர்ந்தான். அவன் முகத்தில் ஓர் ஏளனப் புன்னகை.

2004 - போர்ட் லாடர்டேல், ப்ளோரிடா

ஓர் அழகிய அக்டோபர் மாலைப் பொழுது... பருவ மழைக் காலம் தொடங்கியிருந்ததால் வெயில் அவ்வளவாக இல்லை. காலையில் அளவாய்ப் பொழிந்த மழையினால் காற்றில் மண்வாசனை கலந்திருக்க மெலிதான தென்றல் ஜன்னல் வழியே அந்த வீட்டினுள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மரத்தினால் செய்த மெல்லிய சுவர்கள், புல்லரித்து நின்றது போல் ஆங்காங்கே இழைகள் துருத்தி நிற்கும் சந்தன நிற கார்பெட், வெள்ளை பீ.வீ.ஸி ஜன்னல்கள், அதை மறைக்க சீராய் வகுந்த வெண்ணிறத் தடுப்பு, ஒரு பத்துக்கு பத்து படுக்கை அறை, அதன் ஒரு மூலையில் துணிகளை அடுக்க க்லாசட், மறு மூலையில் ஒருவர் மட்டுமே நுழையும் அளவிற்கு குறுகிய ஒண்டுக் குடித்தனக் குளியலறை, ஒரு சோபா மட்டுமே போட முடியும் சிறிய கூடம், கூடத்தினுள் கழுத்து நீட்டும் சமையலறை மேடை, அதற்கெதிரே மிகச் சிறிய பால்கனி, அதை மூட ஓர் கண்ணாடிக் கதவு, வீட்டைக் குளிர்விக்க ஏ.சி என ஒரு மிகச் சராசரி அமெரிக்க வாடகை வீடு.

மனோகர் கையில் காபிக் கோப்பையுடன் கம்ப்யூட்டரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பொதுவாக சிரித்த முகமாக இருக்கும் அவன் புருவங்களைச் சுருக்கி கோப ரேகைகள் தெரிய அந்த கறுப்புத் தோல் நாற்காலியின் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தான். முன்னே சாய்ந்து அமர்ந்ததால் அவனது ஐ.டி தொப்பை அவனது வால்மார்ட் பட்டாப்பட்டி டி-ஷர்ட் வழியே லேசாக எட்டிப் பார்த்தது.

“திஸ் பெல்லோ ஈஸ் அன்பிலீபவிள்...” கோபம் பொங்க முணுமுணுத்தபடி பதிலளிக்கத் தொடங்கினான்.

“@டார் டெவில் – சுத்த பேத்தல். இனவெறிக்காக மக்களை கொல்லற எந்த அரசாங்கமும் வெற்றி அடைஞ்சதா சரித்திரமே இல்ல. அப்பாவி மக்களை கொல்லறத ஆதரிக்கிற உன்ன மாதிரி பயங்கரவாதிகளை முதல்ல தூக்குல போடணும்... சுத்த நான்சென்ஸ்...”

பொரிந்து தள்ளிய பின் கூட அவனுக்கு மனது முழுதாக ஆறவில்லை. வார இறுதியை முன்னிட்டு வளர்த்திருந்த இரண்டு நாள் தாடியை லேசாய் வருடியபடி கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான். ரத்த ஓட்டம் முகத்தில் அதிகமாகி வெள்ளைத் தோலின் வழியே தெரியத் தொடங்கியிருக்க காப்பியை அவசரமாய் உரிந்தான்.
இணைய தளங்கள் தன்னில் ஒரு பகுதியை மட்டுமே அநாயாசமாய் புதுப்பித்துக் கொள்ளும் ஏஜாக்ஸ் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப் படாத காலம் என்பதால் அந்த பக்கம் மனோஹரின் கடைசிப் பதிவுடன் குட்டித் தூக்கம் போட்டிருந்தது. சில நிமிட இடைவேளைக்குப் பின் சற்று கோபம் தணிந்தவனாய் “கண்ட கண்ட கிறுக்கன் போடற போஸ்டுக்கெல்லாம் நாம ஏன் டென்ஷன் ஆகணும்... கூல்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு புதுப் பதிவுகளைக் காட்டக் கட்டளையிட்டான்.

அந்த ஐந்து நிமிடங்களில் பத்து பதிவுகள். அநேகமானவை “டார் டெவில்” உளறிக் கொட்டியது என்றாலும் முதலில் மனோகர் கண்ணில் பட்டது “அர்ச்சனா” என்ற பெண் போட்டிருந்த பதிவு தான்.

“@மனோகர் – வெல் செட். நான் சொல்ல விரும்பின ஒவ்வொரு வார்த்தையையும் நீங்க சொல்லிருக்கீங்க... :)”.

அதற்குப் பின் “டார் டெவில்” தன் வழக்கமான பாணியில் பக்கம் பக்கமாக இனவெறி சரி தான் என்ற ரீதியில் பதிவுகள் போட்டிருக்க மனோகருக்கு அதற்கு மேல் அந்தத் தலைப்பில் பேசுவது வீண் என்று முடிவு செய்தவனாய் அர்ச்சனாவின் பெயரை க்ளிக்கினான். பெரும்பாலான பெண்களைப் போல் அவளது பக்கமும் ஏதோ ஒரு குழந்தை படத்தைப் பொய் முகமாய்க் கொண்டிருந்தது. அளவான நண்பர்கள், பெரும்பாலான உரையாடல்கள் குசலம் விசாரித்தன அல்லது பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தன. ஒரு தோழி இவளைப் போல் உலகில் ஒருவளைக் காண்பது அசாத்தியம் என்று வழக்கமான தொனியில் புகழாரம் சூட்டியிருந்தாள்.

பக்கத்தில் இருந்த தகவல்கள் பெரிதாய் உதவாததால் லேசான ஏமாற்றத்துடன் அவளுக்குத் தகவல் அனுப்பினான். “ஹாய் அர்ச்சனா... உங்க போஸ்டுக்கு தேங்க்ஸ். உங்கள மாதிரி சென்சிபிள் மக்களும் இருக்காங்கன்றது ஒரு பெரிய ஆறுதல். அங்கயே சொல்லிருப்பேன்... ஆனா டார் டெவிளின் அட்டகாசம் தொடர்ந்திருக்கும். எனிவே... டேக் கேர். பை. :)”

தகவல் அனுப்பியதும் அநேகமான ஆண்களுக்கு இருக்கும் அத்தனை கேள்விகளும் மனோகரின் மூளையில் வந்து சென்றன... “கல்யாணம் ஆயிருக்குமா?”, “பொய்யான பக்கமா? யாராவது விளையாடராங்களா?”, “பாக்க எப்பிடி இருப்பா?”, “நம்ம அப்பிடியே விட்டிருக்கலாமோ?”, “நம்மள அலையிற கேஸ்னு முடிவு பண்ணிருப்பாளோ?”
எவ்வளவு யோசித்தும் அவளது பதில் வரும் வரை அல்லது பதிலே வராத வரை எந்தத் தெளிவும் பிறக்கப் போவதில்லை என்று தெரிந்து கொண்டவனாய் எழுந்து கோவிலுக்குப் புறப்படத் தயாரானான். சனிக்கிழமைகளில் தவறாமல் பெருமாளை தரிசனம் செய்வது மனோகரின் வழக்கம். வந்த புதிதில் இங்கு உள்ள கோவில்கள் தென்னிந்திய அமைப்பில் இல்லை என்பது அவனுக்கு ஒரு குறையாக இருந்தாலும் குறைந்தபட்சம் கோவிலுக்குச் செல்ல முடிகிறதே என்று நிம்மதியுற்றான். தவிர கோவில் மடப்பள்ளியில் மசாலா தோசை, இட்லி, வடை, பிசிபேளாபாத், தாளித்துக் கொட்டிய தயிர் சாதம் என்று வகை வகையாக தென்னிந்திய உணவு மலிவு விலையிலும் கிடைப்பதால் சமைக்கும் வேலை மிச்சம். இப்பொழுது அவனுடன் தங்கியிருந்த ராஜேஷும் இந்தியாவிற்கு விடுமுறைக்குச் சென்றதால் தனியே சமைத்துச் சாப்பிடுவது எரிச்சலாகவும் இருந்தது.
ஒரு வழியாகக் குளித்து முடித்துக் கிளம்புகையில் பொழுது சாயத் தொடங்கியிருந்தது. ஆதவன் தனது வழக்கமான மாலை நேரத்து வர்ணஜாலத்தைத் தொடங்கயிருக்க, மனோகர் அதை ரசித்தபடி தனது கேம்ரியின் கடிவாளத்தைக் கோவிலை நோக்கித் திருப்பலானான்.

இரவு 9 மணி...

சாய ரக்ஷை பூஜை மனதையும், மசாலா தோசை தயிர் சாதக் கூட்டணி வயிறையும் நிறைத்திருந்தன. வந்து சில நிமிடங்கள் சோபாவில் சாய்ந்து ஓய்வெடுத்த பின் ராத்திரி பொழுதைக் கடத்த மீண்டும் கணினியிடம் தஞ்சம் புகுந்தான். கணினியை உயிர்ப்பிக்கையில் அர்ச்சனா நினைவுக்கு வர லேசான பதட்டம் கலந்த பரபரப்புடன் தன் சமூக ஊடகப் பக்கத்தினுள் எட்டிப் பார்த்தான். அவளிடம் இருந்து ஒரு திறக்கப்படாத தகவல் இருந்தது. அவசரமாய்த் திறந்து பார்த்தான்...

“ஹை. தேங்க்ஸ் பார் தி காம்ப்ளிமென்ட். அங்க சொல்லாதது நல்லது தான்... :-)”

பட்டும் படாமல் இருந்த அந்த ஒரு வரித் தகவல் சற்றே ஏமாற்றம் அளித்தாலும், இத்துடன் நிறுத்திக் கொள் என்ற தொனி அதில் இல்லாதது ஆறுதலாக இருந்தது. என்ன பதில் அளிப்பது, பதிலளிக்க வேண்டுமா, பதிலளித்தால் நன்றாக இருக்குமா என பல கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்க, மனோகர் யோசனையில் ஆழ்ந்தான்.

1999 – மதுரை

புதிய நத்தம் சாலையில் ஊருக்குச் சற்று ஒதுக்குப்புறமாய் அமைந்திருந்தாலும் தன்வந்தரி தோல் மருத்துவமனை மிகவும் பிரபலம்.

டாக்டர் கோடீஸ்வரன் ஆய்வுக் கூடத்திலிருந்து வந்திருந்த ஆய்வறிக்கையை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாததால் சுவாமிநாதனால் அவரது எண்ணங்களை ஊகிக்க முடியவில்லை. மெலிதான பதட்டம் சுவாமிநாதனை ஆட்கொண்டதால் அவரை அறியாமல் கைகளை பிசைந்து கொண்டிருந்தார். அருகில் ரூபா எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தாள்.
ஏ.ஸீ.யின் ரீங்காரம் மட்டுமே கேட்ட நீண்ட ஐந்து நிமிடங்களுக்குப் பின் கோடீஸ்வரன் தன் சாருஹாசன் தாடியைத் தவடியபடி தொடங்கினார்.

“பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லை... ஏதோ அலர்ஜிக் ரியாக்ஷன் தான். இது வரைக்கும் கொஞ்சம் தப்பான மெடிகேஷன் குடுத்துருக்கீங்க... அதுனால தான் இவ்ளோ காம்ப்ளிகேஷன். சில மாத்திரைகள் எழுதித் தர்றேன். ஒரு மாசம் கழிச்சு வந்து பாருங்க...” என்றபடி மருந்துச் சீட்டில் ஏதோ கிறுக்கினார்.

“என் பொண்ணு அப்போ பழையபடி ஆயிருவாளா டாக்டர்?” சுவாமிநாதன் குரல் தழுதழுக்க வினவினார்.

சுவாமிநாதனை ஒரு நிமிடம் ஏறெடுத்துப் பார்த்த கோடீஸ்வரன் அவர் முகத்தில் தெரிந்த கவலை ரேகைகளைக் கண்டதும் பேனாவைக் கீழே வைத்து விட்டு தந்தையையும் மகளையும் பார்த்துத் தொடர்ந்தார்.

“கவலைப்படாதீங்க மிஸ்டர் சுவாமிநாதன்... உயிருக்கே ஆபத்தா முடிஞ்சுருக்க வேண்டிய பிரச்சனை இப்போ இவ்ளோ தூரம் முன்னேறி இருக்குன்றது ஆண்டவன் புண்ணியம் தான். தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுனு நெனச்சுக்கோங்க. இப்போ இந்த மருந்தெல்லாம் சரியா சாப்பிட்டா அதுக்கப்பறம் உடம்புக்கு எந்த பிரச்சனையும் வராது. ஆனா இப்போ ரூபா முகத்துல வந்துருக்குற தழும்புகள் மறைய கண்டிப்பா கொஞ்ச வருஷங்கள் ஆயிடும்...”

“ஐயோ... கல்யாண வயசுல இருக்குற பொண்ணு டாக்டர். வேற வழியே இல்லையா?” சுவாமிநாதனுக்கு கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தது.

“ஐயா... உங்க நிலைமை எனக்கு நல்லா புரியுது. நானும் ஒரு பொண்ண பெத்தவன் தான். மத்த சில டாக்டருங்க பிளாஸ்டிக் சர்ஜரி அது இதுனு உங்களுக்கு செலவு இழுத்து விடுவாங்க. என் அனுபவத்துல நான் கத்துகிட்ட பாடம், இயற்கைக்கு மாறா நம்ம பண்ண முயற்ச்சிக்கிற எல்லாமே வில்லங்கமா தான் முடியும். தவிர இது வெறும் அலர்ஜிக் ரியாக்ஷன் தான். அதுக்குப் போய் பிளாஸ்டிக் சர்ஜரி அளவுக்குப் போகணுமான்றதும் யோசிக்க வேண்டிய விஷயம். அதுனால ரூபா கல்யாணத்த ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணுங்க. அப்போ இந்த தழும்புகள் அவ்வளவு பிரதானமா தெரியாது... இல்ல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி அதுனால வர்ற விளைவுகள சந்திக்கத் தயார்னா எனக்குத் தெரிஞ்ச ஒரு பிளாஸ்டிக் சர்ஜன் விலாசத்தக் குடுக்குறேன்...”

“அதெல்லாம் வேணாம் டாக்டர்... நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.” சுவாமிநாதன் அவசரமாய் மறுத்தார். “அப்போ நாங்க ஒரு மாசஞ்செண்டு வந்து பாக்குறோம் டாக்டர்” என்றபடி ரூபாவும் சுவாமிநாதனும் கை கூப்பி விடை பெற்றனர்.

ஒவ்வாமை தந்த பரிசாக ரூபாவின் சருமம் ஆங்காங்கே வெடித்த அடையாளங்கள் அவள் முகமெங்கும் நிறைந்திருக்க ஒரு சில மாதங்களிலேயே அவளது புகழ் வட்டம் மறைந்திருந்தது. இவள் மீது பொறாமை கொண்டிருந்த பலரும் “அழகு மட்டும் இருந்தா போதாது. நல்ல மனசு வேணும். இப்போ பாருங்க. ஆண்டவன் ஒரே மாசத்துல அவளை எப்பிடி அருவருப்பாக்கிட்டான்...”, “அழகு இருக்குற திமிருல எல்லாரையும் இளக்காரம் பண்ணிட்டிருந்தா. இப்போ பேச சொல்லுங்க பாக்கலாம்...” என்று வாய்க்கு வந்தபடி வசை பாடியதால் கல்லூரிப் பக்கமே தலைகாட்ட முடியவில்லை. வழக்கமாய் ஆண்களின் ஜீவனைச் சுண்டி இழுக்கும் அவள் கண்களில் இப்பொழுது அவளுக்கிருந்த ஒரே ஆறுதல் பறி போனதால் ஜீவனே இல்லை. அழுது கண்ணீர் வரண்டதன் அறிகுறியாய் கண்கள் வீங்கியிருந்தன. சில மாத இடைவெளிக்குப் பின் அவளைப் பார்பவர்களுக்கு அவளை அடையாளம் தெரியுமா என்பதே கேள்விக் குறி தான்.

முன்னாள் பீ.ஆர்.சி மற்றும் திருவள்ளுவரின் உதவியுடன் வீடு வந்து சேரும் வரையில் இருவரும் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. வீடு திரும்பியதும் கூட அந்த அசௌகரியமான அமைதி தொடர்ந்து கொண்டிருந்தது. நேரமாகும் என முன்கூட்டியே எதிர்பார்த்துச் செய்த உணவை சுவாமிநாதன் சூடுபடுத்திக் கொண்டிருக்க ரூபா தொலைக் காட்சியின் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கவனம் நிகழ்ச்சியில் இல்லை என்பது எதையோ பறிகொடுத்தாற்போல் அமர்ந்திருந்த அவளது நிலையிலேயே தெளிவாகத் தெரிந்தது.

கடமையாய் உணவருந்தி முடித்த பின் சுவாமிநாதன் மெதுவாய் பேசத் தொடங்கினார்.

“நீ கவலப்படாதம்மா... நமக்கு அந்த ஆன்டவன் இருக்கான். எதோ கெட்ட நேரம். பிடிச்சு ஆட்டுது... சீக்கிரம் சரியா போயிரும்.” தன்னால் இயன்ற வரை நம்பிக்கை கொடுக்க முயற்சித்தார்.

“ஹ்ம்ம்...” சம்பிரதாயமாய் பதில் வந்தது. “நான் தூங்க போறேன் அப்பா...” சட்டென உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்து பதிலுக்குக் காத்திருக்காமல் படுக்கை அறையை நோக்கி மெதுவாய் நடக்கத் தொடங்கினாள்.

அதற்கு மேல் என்ன செய்வது என்று புரியாமல் சுவாமிநாதனும் படுக்கச் சென்றார். மனது உறங்க மறுத்ததால் தூக்கம் வரவில்லை. குறுக்கும் நெடுக்குமாய் நடந்து, உட்கார்ந்து, படுத்து, புரண்டு பிரம்மப் பிரயத்தனம் செய்த பின் வெள்ளி முளைக்கும் நேரத்தில் தன்னை அறியாமல் நாற்காலியில் கண்ணயர்ந்தார்.
சலனமின்றிக் கடந்த இரண்டு மணி நேரங்களுக்குப் பின் சூரிய ஒளி அவரை எழுப்பியது. கண்விழித்ததுமே நிதர்சனம் நினைவுக்கு வர பல் துலக்கி முடித்து ரூபாவின் அறைக்குச் சென்றார். கதவு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே சத்தம் எதுவும் கேட்கவில்லை. பொதுவாக ரூபா சீக்கிரம் எழும் பழக்கம் உடையவள் என்பதால் அறைக் கதவை மெதுவாய்த் தட்டிப் பார்த்தார். பதில் இல்லை. மனதில் லேசான பயம் எட்டிப் பார்கவே கதவை பலமாகத் தட்டி ரூபாவை அழைக்கத் தொடங்கினார். அறையினுள் ஆள் இருக்கும் சுவடே இல்லை. கவலரத்துடன் சுவாமிநாதன் உலக்கையால் கதவை இடிக்க துரு பிடித்த தாழ் விழுந்து கதவு படாரென்று திறந்து கொண்டது. உள்ளே காகிதக் கத்தைகளின் சிதறல்களின் ஊடே சரிந்து கிடந்தாள் ரூபா. மணிக்கட்டிலிருந்து புறப்பட்ட ரத்த வெள்ளம் தரையில் படர்ந்திருக்க சிகிச்சைக்காக தரப் பட்டிருந்த அனைத்து மருந்துகளும் மொத்தமாய்க் காலியாகி இருந்தன.

ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்ற சுவாமிநாதன் சட்டென்று நினைவுக்கு வந்தவராய் அவசர உதவியை அழைக்க, ரூபாவை அள்ளிக் கொண்டு மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது அந்த வெள்ளை ஊர்தி. ஆறு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ரூபாவுடன் சுவாமிநாதன் படபடக்கும் இதயத்துடன் சென்று கொண்டிருந்தார். இந்த முறை சற்று குறைவான நம்பிக்கையுடனும், மிக அதிகமான பயத்துடனும்...

2011 - சென்னை

நள்ளிரவை நோக்கி கடிகார முட்கள் நகர்ந்து கொண்டிருக்க, கேசவனின் அறை வழக்கம் போல் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே அவன் ஒரு விதக் குரூரப் பார்வையுடன் கணினி முன் அமர்ந்து மின்னல் வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தான். கூகிள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர் பாக்ஸ், ஒபேரா என்று எல்லா பிரவுசர்களிலும் தலா பதினைந்திருபது வலைத் தளங்கள் திறக்கப் பட்டிருந்தன. அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய அவனது கணினியும் அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தது.

கணினியைப் பொறுத்தவரை இவனது குரு, வழிகாட்டி, உதாரண புருஷர் எல்லாமே இவன் தந்தை ரெங்கநாதன் தான். கணினியில் சூரப் புலியான ரெங்கநாதன் சிறு வயதிலிருந்தே கணினியைத் தன் ஆளுமைக்குள் கொண்டுவரப் பழகி இருந்தார். ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர் கனவு. நண்பர்கள் நான்கு பேருடன் மிகச் சிறிய அளவில் ரெங்கநாதன் தொடங்கிய வேவ் இன்போடெக் நிறுவனம் இப்பொழுது பத்து கோடி மதிப்பீடு உள்ள ஒரு குறிப்பிடத்தக்க நிறுவனம். இன்னும் பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதே ரெங்கநாதனின் லட்சியம்.

சமூக ஊடகங்களுக்கு கேசவன் மிக இளைய வயதிலேயே அறிமுகமானதும் வேவ் இன்போடெக் மூலம் தான். ஒய்.டூ.கே மோகம் தணிந்து திடீரென ஏற்பட்ட வெறுமையில் சிக்கிச் சிதைந்த நிறுவனங்களில் வேவ் இன்போடெக்கும் ஒன்று. இருந்த ஓரிரு திட்டப் பணிகளைப் பிடித்து தொங்கிக் கொண்டு நாட்களைக் கடத்திக் கொண்டிருந்த அந்நிறுவனத்தின் தலைவிதியை மாற்றி அமைத்தது சமூக ஊடகப் புரட்சி தான். ஏற்கனவே இணையம் சுருக்கியிருந்த உலகத்தை மேலும் சுருக்கிய அந்த மாய ஊடகத்தின் மூலம் கிடைத்த எண்ணற்ற தொடர்புகளும் பணிகளும் தான் ரெங்கநாதனின் கனவு மெய்ப்பட அஸ்திவாரமாய் அமைந்தது. அப்படி ஒரு நாள் ரெங்கநாதன் அவசரத்தில் மூடாமல் விட்டுச் சென்ற பக்கம் கேசவன் கண்ணில் பட, கண்டதும் காதல்.

சமூக ஊடகத்தைப் பொறுத்த வரையில் கேசவனுக்கு மிகவும் பிடித்தது அதில் கிடைத்த நிபந்தனையற்ற சுதந்திரம் தான். சட்ட விரோதமான செயல்களைச் செய்யக் கூடாது, மற்றவரை இழிவுபடுத்தும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யக் கூடாது என்பது போன்ற மிக விரிவான எல்லைக்குள் கடிவாளமற்ற குதிரை போல் அவனால் சுற்றித் திரிய முடிந்தது. மேலும் சொந்தப் பெயர், சொந்த முகம் என எந்த விதமான அடையாளங்களையும் உறுதிபடுத்தித் தான் நுழைய வேண்டும் என்கிற சூழல் இல்லாததால் இன்னும் கூடுதல் உற்சாகம். ஒரு வகையில் தனக்குள் புதைந்து கிடந்த அழுக்கை முச்சந்தியில் வைத்துச் சலவை செய்ய, அதிலும் சலவை செய்வது யார் என்று தெரியாத வகையில் சலவை செய்யக் கிடைத்த சந்தர்ப்பம் அவனுக்கு இனம் புரியாத ஓர் ஆத்ம திருப்தியையும் கொடுத்தது. இணைய தொழில்நுட்பத்தில் மிகவும் கைதேர்ந்த சிலரால் மட்டுமே எந்தக் கணினியில் இருந்து ஒரு பதிவு போடப்பட்டிருக்கிறது என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியும் என்பதை கேசவன் மிக நன்றாக அறிந்திருந்தான்.

நான்காம் வகுப்பு படிக்கையில் ‘டார் டெவில்’ என்ற பெயரில் சற்று பயத்துடன் ரகசியமாய்த் தொடங்கிய ஊடக வாழ்க்கை இன்று இருபது பொய் முகங்களாய் விஸ்தரித்து விஷச் செடியாய் வளர்ந்து நின்றது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு குணம், பின்னணி, விருப்பு வெறுப்புக்கள், நண்பர்கள் பட்டாளம், புகைப்படங்கள் என்று தன் ஒவ்வொரு முகத்தையும் மிக மிகக் கவனமாய்த் திரித்திருந்தான். இயற்கையிலேயே அறிவாற்றல் மிகுந்திருந்ததால் இந்த இருபது முகங்களைக் குழப்பிக் கொள்ளாமல் சமாளிப்பதும் அவனுக்குச் சிரமமாக இல்லை. சுருங்கச் சொன்னால் இது இவனே, இவனாய், இவனுக்காக மட்டுமே உருவாக்கிக் கொண்ட ஓர் மாய உலகம். அவப்போது தன்னுடைய உண்மையான (இருபத்தி ஒன்றாம்) பக்கத்தில் ஓர் நாசூக்கான, வயதிற்கேற்ற பதிவை சந்தேகம் தவிர்க்கப் போட்டு விடுவதும் இவனது வழக்கம். இவனுடன் படித்த மற்றவர்களைப் பொறுத்த வரையில் இவன் படிப்பு, கணினி என்று மட்டுமே யோசித்துச் சுற்றும் சுவாரசியமற்ற ஒரு ‘பழம்’.

அதி வேகமாக தளம் மாறிக் கொண்டிருந்தவன் ஒரு வழியாய் நெருப்பு நரி தாங்கி வந்த பக்கத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினான். ஆர்.ஜே என்ற பெயரைத் தாங்கிய சிறிய ஜன்னல் வழியே மறுபுறமிருந்து தகவல் துண்டுகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன.

“என்னை நெஜம்மா உனக்கு பிடிக்குமா?”
“ஏன் இவ்ளோ நேரம் அமைதியா இருக்க?”
“உன் மேல நான் எவ்ளோ அன்பு வச்சுருக்கேன் தெரியுமா...”

என்ற ரீதியில் அன்பும், கொஞ்சலும், காதலும் மறுபுறமிருந்து பொங்கி வழிந்தது.

“என்னை பாத்ததே இல்ல. நான் யாருன்னு கூட தெரியாது... உசிர  கொடுப்பாளாம்... ஒத்தா...” என்று முணுமுணுத்தாலும், மறுமுனையில் இருப்பது பெண் தான் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை தான் என்ற போதும், கேசவன் முகத்தில் பெருமிதம் பொங்கியது.

“அவ்ளோ பிடிக்கும்னு சொல்லற. ஆனா ஆர்.ஜெ க்கு  எக்ச்பான்ஷன் கூட சொல்ல மாட்டேங்கிற...” என்று அனுபவம் மின்ன வினவினான்.

“புரிஞ்சுக்கோ அசோக். சொல்ல கூடாதுன்னு எல்லாம் இல்ல. சொல்ல முடியாத நெலமைல இருக்கேன்...” மறுமுனை கெஞ்சியது.

“அப்பிடி என்ன சொல்ல முடியாத நிலைமை? என் மேல அவ்ளோ தான் நம்பிக்கையா?”

“ஐயோ... என்ன ஏன் சோதிக்கிற அசோக்? உனக்கு நான் என்னையே குடுக்க கூட தயார்.  ஆனா என் உண்மையான பெயரை சொன்னா ரெண்டு பேருக்குமே பிரச்சனை தான். உன்ன பொறுத்த மட்டுல நான் உன்னோட ஆர்.ஜே வாவே இருந்துட்டு போயிற்றேனே...”

“உன்னையே குடுப்பியா?”

“கண்டிப்பா... ஐ யாம் யுவர்ஸ் அசோக்...”

உரையாடல் அந்தரங்கமாய் மாற முடிவில் காமம் பொங்கி வழிந்தது.

2005 - போர்ட் லாடர்டேல், ப்ளோரிடா

“ஏன்டா... உனக்கு வேற வேலையே இல்லையா? ஆறு மாசமா வேலை பாக்குறியோ இல்லையோ நல்லா கடலை போடற... இப்பிடியே போச்சுன்னா போனே காதோட ஒட்டிக்கப் போகுதுடா...” இடது புறம் சாய்ந்து குறுக்குவாட்டில் படுத்து அலைபேசியைக் கையால் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் வாட்டமாய் வலது காதில் நிறுத்தியபடி கிசுகிசுத்துக் கொண்டிருந்த மனோகரை ராஜேஷ் வம்புக்கு இழுத்தான்.

எதற்கும் மசியாமல் மனோகர் ‘கடலையைத்’ தொடர்ந்து கொண்டிருக்க, “ஹாங்... நல்லா இருந்த புள்ள. யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலயே...” என்று திருநங்கையைப் போல் நடித்துக் காட்டி ராஜேஷ் விடாமல் வம்பிழுக்க, மனோகர் வலதுபுறம் திரும்பிப் படுக்க, தொலைபேசி செவி மாறியது.

“கஷ்டம்டா சாமி...” என்று சிரித்துக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டு ராஜேஷ் கூடத்திற்கு சென்றான். அவன் சென்ற சில நொடிகளில் தொலைக்காட்சி சத்தம் கேட்டது.

“அப்பறம்...”
“...”
“நான் என்ன சொல்ல... நீ தான் சொல்லணும்...”
“...”
“அப்பிடி இல்ல அர்ச்சு... கோடி கதைகள் இருந்தாலும் உன் குரல் கேட்டதும் எல்லாம் மறந்து போயிருது.” என்று உளறிக் கொட்டினான்.
“...”
“இப்பிடி மாத்தி மாத்தி கோல் போட்டா நான் என்ன பண்ணுவேன் அர்ச்சு...”
குழைந்து வழிந்து சிரித்துத் தொடர்ந்த உரையாடல் முடிகையில் அலைபேசியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க, ராஜேஷ் மறுபடி பிரவேசித்தான்.

ஒரு வித வெற்றிப் புன்னகையுடன் அமர்ந்திருந்த மனோகரைப் ஏற இறங்கப் பார்த்துத் தொடர்ந்தான்.

“என்னடா இவ்ளோ சீக்கிரம் முடிச்சுட்ட... இன்னும் நம்ம ஏரியா டவர் வெடிக்கலையே”

“டேய்...” மனோகர் பொய் கோபம் காட்டினான். ராஜேஷ் சிரித்துக் கொண்டே அருகில் அமர்ந்தான்.

“நம்ம நாலு வருஷமா சேந்து வொர்க் பண்ணறோம். உனக்கு பொண்ணுங்க கூட பேசனும்னாலே உதறல். அவனா நீயின்ற ரேஞ்சுக்கு டெவலப் ஆயிட்டியேடா...”

“பொண்ணுங்கள பாத்து பேசுறது தாண்டா கஷ்டம். இவ கூட பேச ஆரம்பிச்சது மெசேஜ்ல தான...” வெட்கினான்.

“உனக்குன்னே வெப்சைட் கண்டுபிடிச்சுருக்கானுங்க....” நகைத்தான். “சரி... லவ்வ சொல்லிட்டியா?”

“என்ன” தெரியாதது போல் வினவினான்.

“ஏன்டா... நிச்சயம் ஆகி வருங்கால பொண்டாட்டி கூட பேசுறா மாதிரி ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் கடலைய போட்டுட்டு லவ்வ சொல்லிட்டியானு கேட்டா தெரியாத மாதிரி முழிக்கிற...”

“அதுக்கில்லடா... இதெல்லாம் போய் தனியா சொல்லிட்ட்ருக்க முடியுமா?”

“ஓஹோ... அப்பிடி போகுதா கதை... சொன்னால் தான் காதலா... ஏன்டா இந்த பாவலா... போன் பேசுறேன் நாள் புல்லா... இத புரிஞ்சுக்காம இருக்க அவ என்ன பூலா... டண்டணக்கா...” என்று டி.ஆர். பாணியில் கேட்டுச் சிரித்தான் ராஜேஷ்.

மனோகரும் சேர்ந்து சிரித்து விட்டுத் தொடர்ந்தான்... “அதுக்கில்ல மச்சி... காதலிக்கிறேன் ட்ரூலி மாட்லி டீப்லி அப்பிடின்னு ஜோதிகா வசனமா பேச முடியும்...”

“மச்சி... இந்த காலத்துல ஒரு பிகர மடிக்கிரது பெரிய கஷ்டம். ஆன்லைன் நெட்வொர்க் எல்லாம் வந்ததுல இருந்து அட்டு பிகருக்கு கூட ஆயிரம் பேர் க்யூல நிக்கிறான். நீ இப்பிடியே உருண்டு உருண்டு பேசிட்டிருந்தன்னு வை... எவனாவது உஷார் பண்ணிட்டு போயிருவான். அப்பறம் நீ போனோட தான் குடும்பம் நடத்தனும். நீ உருண்டு உருண்டு லவ் பண்ணதுல நம்ம கார்பட் கொஞ்சம் சுத்தமாகும். அவ்ளோ தான் பாத்துக்கோ...”

“ச்சே... ச்சே... அர்ச்சு அப்பிடி இல்லடா...”

“ஓ... வேற எப்பிடிங்க ஆபீசர்...”

“அனாவசியமா பேச மாட்டா யாருகூடயும்...”

“ஆமாமா... ஒரு நாளைக்கி ஏழு மணி நேரம் ஐ.நா சபைல நடந்த விவாதங்கள பத்தி மட்டும் தான் பேசுறா...”

“டேய்... நான் மத்தவங்க கிட்ட அனாவசியமா பேச மாட்டான்னு சொன்னேன்டா...”

“ஏன்டா... உன் கூட ஏழு மணி நேரம் பேசினப்பறம் யாரு கூட பேசுரதுக்குடா நேரம் இருக்கும்... அவ அப்பா அம்மாவே அவ கூட பேசி மாசக்கணக்காச்சுன்னு கேள்விப்பட்டேன்.”

“நான் எதுவும் சொல்லல... ஆளை விடு...”

“சரிடா சரிடா... கோச்சுக்காத... மேல சொல்லு...”

“ரொம்ப ப்ராக்டிகலான பொண்ணுடா... தெளிவான சிந்தனை... புத்திசாலி. இவ்ளோ அழகா இருந்தும் கொஞ்சம் கூட திமிரு கெடையாது. நான் சொல்லாமலே என் மனசுல இருக்குறத புரிஞ்சுக்குராடா... பாவம் அவளுக்குப் போய் இப்பிடி ஒரு சோதனை...” உணர்ச்சிவசப்பட்டு உளறி விட்டதைப் போல் நாக்கை கடித்துக் கொண்டான்.

“என்ன சோதனை?”

“இல்லடா... அது அவ சீக்ரட். எனக்கு மட்டும் தான் சொல்லிருக்கா...”

“டேய்... டைலாக் விடாம சொல்லுடா...”

“வேணாம்டா... சொன்னா கேளு...”

“இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா?”

“அர்ச்சு ஈஸ் எ விடோ... கல்யாணத்தன்னிக்கே மாப்பிள்ளை இறந்துட்டான்... கார்டியாக் அரஸ்ட். எல்லாரும் இவ தான் காரணம்... இவளால தான் இதெல்லாம் ஆச்சுன்னு பட்டம் கட்டி... ஷீ ஹாஸ் பீன் த்ரூ எ லாட்...”

“மை காட்... அப்பறம் எப்பிடிடா அவளை காதலிக்கிற? எப்பிடி வர்க் அவுட் ஆகும்?”

“ஆகும்... எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது அவ கூட தான்...” திட்டவட்டமாய் மனோகர் கூற, ராஜேஷ் அவனை வியப்புடன் பார்த்தான்.


2000 – தேனி

“சாமிநாதா... தம்பி பேரு ஜெகன்னாதன். பில்டிங் காண்ட்ராக்டர். அது மட்டுமில்ல... ஆளுங்கட்சி ஒன்றியச் செயலாளர். நம்ம ரூபா பத்தி எல்லா வெவரத்தையும் சொல்லி தான் கூட்டிட்டு வந்துருக்கேன். மொதல்ல கொஞ்சம் தயங்கினாறு. அப்பறம் நான் தான் ஒத்த பொண்ணு. அவரு சொத்து சுகம் எல்லாம் அவளுக்கு தான். நல்ல மரியாதையான குடும்பம்னு எடுத்து சொன்னேன். தம்பிக்கு பரிபூரண சம்மதம். நீ என்ன சொல்லற?” பாலு அண்ணன் நேரடியாக விஷயத்தைப் போட்டு உடைத்தார்.

சுவாமிநாதனுக்கு சிறு வயதிலிருந்தே அவர் மேல் மரியாதையும் பாசமும் அதிகம். ரூபா மருத்துவனையில் உயிருக்குப் போராடி சிகிச்சை பெற்ற இரு முறையுமே சுவாமிநாதனுக்கு பாலு அண்ணன் தான் துணை இருந்தார். தற்கொலை முயற்சி காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்த மருத்துவர்களிடம் லாவகமாய்ப் பேசி காதும் காதும் வைத்தது போல் சிகிச்சையை முடித்ததும் அவர் தான். ஒரு மாதத்திற்குப் பின் ரூபா வீடு திரும்புகையிலும் கூட டைபாய்டு ஜுரம் என்று கூறி ஊர் வாயை அடைத்து விட்டார்.

“நான் சொல்லறதுக்கு என்ன அண்ணே இருக்கு... நீங்க பாத்து சொன்னா சரியா தான் இருக்கும். என்ன மாப்பிள்ளை நான் சொல்லறது” சுவாமிநாதன் ஆமோதிக்க, அங்கிருந்த அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

“அப்போ நான் புறப்படறேன் மாமா...” ஜெகன்னாதன் கிளம்ப எத்தனித்தான். முதல் முறை பெண் வீட்டிற்கு வருவதால் வெள்ளைச் சட்டை கரை வேஷ்டி சகிதம் மிடுக்காக வந்திருந்தான். கரிய உருவமும் ஆறடி உயரமும் அகண்ட தோளும் கொண்ட முரட்டுத் தனமான அவனுடைய உருவத்திற்கு கழுத்தில் அணிந்திருந்த மைனர் செயினும், கையில் அணிந்திருந்த தங்கக் காப்பும் கச்சிதமாய் பொருந்தின. பணம் பழகியிருந்ததை மெலிதான தொப்பை எடுத்துக் காட்டியது.

“இருந்து சாப்பிட்டு போங்க தம்பி...” சுவாமிநாதன் வலியுறுத்திக் கேட்டார்.

“இல்லைங்க மாமா. கல்யாணம் முடிஞ்சதும் கை நனைக்கிறது தான் முறை...”

“சரிங்க மாப்பிள்ளை. பொண்ண கூப்பிட்டா?”

“வேணாம் மாமா. சம்மதம் சொல்லியாச்சுல்ல. இனி ஒரேடியா கல்யாணத்துலயே பாத்துக்குறேன். போட்டோ கூட பாலு மாமா காட்டினாப்புல. அது போதும்.”

“உங்க வீட்ல பெரியவங்க எல்லாருக்கும் சம்மதமா மாப்பிள்ளை?”

“என் விருப்பம் தான் எங்க வீட்டு விருப்பம். எங்கப்பா சின்ன வயசுல தவறிட்டாரு. அம்மா மட்டும் தான். அண்ணன் மெட்ராசுல இருக்கான். ஒரு நல்ல நாளா பாத்து சொல்லுங்க. சொந்தக்காரப் பெரியவங்க எல்லாரையும் கூட்டி வந்து தட்டு மாத்திக்கிருவோம்...”

“சரிங்க தம்பி...”

“அப்போ நான் வர்ரேன் மாமா...” ஜெகன்னாதன் கை கூப்பி இருவரிடமும் விடை பெற்றான்.

அவனது புல்லட்டின் உறுமல் மறைந்ததும் சுவாமிநாதன் பாலு அண்ணனைப் பார்த்துத் தொடர்ந்தார்.

“எல்லாம் சரியா வருமான்னே? ரூபா கிட்டயும் ஒரு வார்த்த கேட்டிருக்கலாமோ?”

“கவலைப்படாத சாமிநாதா... எல்லாம் நல்லபடியா நடக்கும்...”
“அதுக்கில்லண்ணே... ஒரு வேளை ரூபாவுக்குப் பிடிக்கலன்னா... ஏற்கனவே அவளை சனி பிடிச்சு ஆட்டுது. ரெண்டு தடவ உசிரு பொழச்சு வந்துருக்கா பாவி மக... மறுபடியும்
ஏதாவது கிறுக்குத் தனமா செஞ்சுகிட்டான்னா...”

“எல்லாம் வயசுக் கோளாறு தான் சாமிநாதா... கிளி மாதிரி இருந்த புள்ள இப்போ திடீர்ன்னு மேலுக்கு முடியாம போய் தழும்பெல்லாம் வரவும் கொஞ்சம் பயந்துருச்சு... அதுக்காக அப்பிடியே விட்டர முடியுமா? ஒரு கல்யாணத்த பண்ணி வச்சா எல்லாம் சரியா போயிரும். புருஷன் குழந்த குட்டின்னு இந்த மாதிரி யோசிக்கவே நேரம் இருக்காது. நீ கவலைப்படாம அக வேண்டிய காரியத்தப் பாரு...” பாலு அண்ணன் ஆறுதல் சொன்னார்.

சுவாமிநாதன் அரை மனதாய்த் தலையாட்ட “அப்ப நான் கெளம்புறேன்பா... நாளைக்கி வந்து பாக்குறேன். நீ நம்ம புள்ளைய பத்தரமா பாத்துக்க...” என்று கூறி பாலு அண்ணன் விடை பெற்றார்.

அவரை வழி அனுப்பி விட்டு சுவாமிநாதன் நாற்காலியில் சாய்ந்து சிந்திக்கத் தொடங்கினார். நடந்து முடிந்த சம்பவங்களின் நினைவுகள் சரமாரியாக வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ரூபா கவலைக்கிடமாக மருத்துவமனையில் நான்கு நாட்கள் இருந்தது, அவசரச் சிகிச்சைப் பிரிவின் வெளியே யாரும் பார்காத இருட்டில் அடக்க மாட்டாமல் கதறி அழுதது, முடிவில்லாத பிரார்த்தனைகள், தெய்வம் போல் ரத்த தானம் செய்த மூவர், ஒரு வாரத்திற்குப் பின் ரூபாவிற்கு நினைவு திரும்பியது என அனைத்துமே கனவு போல் இருந்தாலும் அதன் தாக்கம் இன்னும் தெரிந்தது.

“இன்னும் கொஞ்ச நாளைக்கி தனியா விட வேணாம்” என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்ததால் சுவாமிநாதன் தனது அறையிலேயே ரூபாவிற்கும் படுக்க வசதி செய்தி கொடுத்திருந்தார். இரவு பகலாய் கண் விழித்துப் பார்த்து, கண்கொத்திப் பாம்பாய் மூன்று மாதங்கள் காவல் காத்த பின் ரூபா ஒரு வழியாக இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்ததைப் போல் தெரிந்தது.

மாடியில் துணிகளை உலர்த்தி விட்டு பின் வழியே நுழைந்த அவளை சுவாமிநாதன் அருகில் வந்து அமருமாறு அழைத்தார்.

“என்னப்பா...” ரூபாவின் குரலில் தயக்கமும் ஆர்வமும் கலந்திருந்தன.

“அப்பா உன் நல்லதுக்கு தான் எல்லாம் பண்ணுவேன்னு நீ நம்புறியா?” பீடிகையுடன் தொடங்கினார் சுவாமிநாதன்.

“ஹ்ம்ம்...” என்னவாக இருக்கும் என்கிற யோசனை ரூபாவை ஆட்கொண்டதை சுவாமிநாதன் கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ரூபாவின் கைகளை மெலிதாய்ப் பற்றிக் கொண்டு அவர் தொடர்ந்தார் “உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்மா. பைய்யன் பேரு ஜெகன்னாதன். நம்ம பாலு அண்ணனுக்குத் தெரிஞ்சவரு தான். பாக்க நல்லா இருக்காரு. நல்ல செல்வாக்கான குடும்பம். ஓரளவுக்கு படிச்சுருக்காறு. நீ மறுக்க மாட்டங்குற நம்பிக்கைல அப்பா சரின்னு சொல்லிட்டேம்மா...”
உடைந்த கனவுகளின் எச்சமாய் ஒட்டிக் கொண்டிருந்த ஓரிரு கடைசித் துண்டுகளும் விழுந்து மறைந்ததைப் போல உணர்ந்தாள் ரூபா. ஆனால் அதனால் அவளுக்குக் கடுகளவு சோகம் கூடத் தெரியவில்லை. உணர்ச்சிகள் மரத்துப் போய் புலன்கள் மட்டுமே எஞ்சியிருந்த ஓர் தனிமையான நிலை.

“என்னம்மா ஒன்னுமே சொல்லல...”

“சொல்ல என்னப்பா இருக்கு? நீங்க முடிவு பண்ணா சரி தான்...”

“உனக்கு வேணாம்னா நான் கட்டாயப் படுத்தலம்மா...”

நிச்சயம் தான் மறுத்தால் தன் தந்தையின் மனது உடைந்து விடும் என்று ரூபாவிற்குத் தெரிந்திருந்ததால் அவசரமாய்க் குறுக்கிட்டு “அதெல்லாம் ஒன்னுமில்லப்பா... நீங்க பாத்து எது செஞ்சாலும் எனக்கு சம்மதம்” என்று கூறி அங்கிருந்து எழுந்து சென்றாள்.

2012 – சென்னை

கேசவன் பன்னிரெண்டாம் வகுப்புக்குள் அடி எடுத்து வைத்திருந்ததால் அனைத்துமே மாறியிருந்தது. ஓரங்குலம் உயரமாகியிருந்தான், குரல் முழுமையாய் ஆண்மகனைப் போல் மாறியிருந்தது. எதிர்பார்த்தது தான் என்றாலும் வியப்பூட்டும் அளவுக்கு உபதேசங்கள், சிறப்பு வகுப்புகள். யார் எப்பொழுது பார்த்தாலும் வருங்காலத்தைப் பற்றிய கேள்விகள். வகுப்பில் எப்பொழுதும் போல் முதல் இடம் வகித்தும் திவ்யாவின் “நல்லா படிக்கணும். ரேங் வாங்கணும்” அனத்தல்கள் ஓய்ந்த பாடில்லை. இதற்கிடையில் இணையத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகமான ஆண்களும் குறிப்பாகப் பெண்களும் இவன் உருவாக்கி இருந்த இருபது பேருக்கு நண்பர்களாகவும், அந்தரங்கத் தோழிகளாகவும் மாறி இருந்தனர். திடீரென அவன் உலகமே அவனுக்கு விசித்திரமாய்த் தெரிந்தது.

போதாத குறைக்கு பணக்காரப் பெண்களைப் போலவே நடந்து கொள்ள முயற்சி செய்யும் மேல் நடுத்தர வர்க்கப் பெண்களின் உதாரணம் திவ்யா. பணம் படைத்தவர்களின் ஓரிரு வாகன விலையே இவர்கள் சொத்துக்களை மிஞ்சும் என்றாலும் அந்த நிதர்சனத்தைத் தாண்டி தன்னை மேலத் தட்டுப் பெண்ணாய்க் காட்டிக் கொள்ள மிகவும் பிரயத்தனப்படுபவள். பெரும்பாலும் அவள் பெருமைப் பேச்சு கேசவனைப் பற்றியோ அல்லது அவனை இவர்கள் வளர்க்கும் விதம் பற்றியோ தான் இருக்கும். அந்தத் தோழிகள் முன் திவ்யா மார்தட்டிக் கொள்ளவாவது கேசவன் பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

“ஐ திங்க் வீ ஷுட் கிவ் ப்ரீடம் டு அவர் கிட்ஸ். ஆப்டர் ஆல் வீ ஆர் கிரோன் அப்ஸ் யூ நோ...”

“மை சன் ஈஸ் எ எக்ஸ்பர்ட் இன் கம்ப்யூட்டர்ஸ் ஜஸ்ட் லைக் ஹிஸ் டாட்...”

“ஹீ வில் நாட் கம் அவுட் ஆப் ஹிஸ் ரூம் ஒன்லி...”

என்று தோழிகளுடன் பேசி சிரித்தாலும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் என்றதுமே அவளுக்குள் இருந்த நடுத்தர வர்க்கப் பெண் விழித்துக் கொண்டு, அவளது இதயத் துடிப்பை அதிகமாக்கியது என்னவோ உண்மை. கேசவனை அடிக்கடி அறைக்கு வெளியே அழைத்து, புதிது புதியதாய் தேர்வுகளைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும், வகுப்புகள் பற்றியும் அவனிடம் கூறிய வண்ணம் இருந்தாள். குறிப்பாக ஐ.ஐ.டி சம்மந்தமாக எந்தத் தகவல் எப்பொழுது கிடைத்தாலும் அடுத்த நிமிடம் “கேஷவ்...” என்ற அழைப்பு கணீரென கேட்கும்.

அதன் நேரடி பலனாக கேசவனுக்கு தனிமை நேரம் குறைந்தது. கணினியில் மாலையும் இரவும் உலா வரும் சுதந்திரமும் பறிபோனது. இணையத்தில் அடங்காத காளை போல் சுற்றி வர இயலவில்லை. உண்மையின் உஷ்ணம் சுட்டெரித்ததால்  ஒரு வித வெறுப்பு பிறந்து, முதல் முறையாக அவனுக்குப் படிப்பு சுமையாகப் பட்டது. கிடைத்த இடைவெளியில் இருபது முகங்களை, அவர்களது பரிச்சையங்களைச் சமாளிக்க முடியாது என்பதும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஏற்கனவே அவர்களில் சிலர் அவனைத் துளைத்தெடுக்க ஆரம்பித்திருந்தனர். குறிப்பாக ஆர்.ஜே. பொதுவாகவே சற்று உணர்ச்சி மிகுந்த பெண்ணான அவள், இவன் தொடர்பு கொள்ளத் தவறியதால் ஆவேசமாகியிருந்தாள்.

“ஏன் நேத்து ஆன்லைன் வரல” ரீதியில் தொடங்கிய விசாரணை மின்னஞ்சல்கள், “உனக்கு ஒன்றும் ஆகவில்லையே...”, “என்னை மறந்து விட்டாயா”, “என்னைப் பிடிக்காமல் போய் விட்டதா?”, “நான் உனக்கு சலித்து விட்டேனா”, “நீ ஒரு காரியவாதி, துரோகி...” என்று படிப்படியாக காட்டமாகி அமிலத்தை உமிழத் தொடங்கியிருந்தன. இத்தனைக்கும் அசோக் என்கிற கேசவன் அவளை நேரில் சந்தித்தது கூட இல்லை, பொய்முகம் என்பதால் சந்திக்கவும் முடியாது.

வெறுப்பு தலைக்கேற, அந்த கணத்தில் இருந்த மொத்தக் கோபத்தையும் வார்த்தைகளாய் மாற்றி அவளுக்கு ஒரு பதில் மின்னஞ்சல் தட்டலானான். பெண்களை இழிவுபடுத்தும் அத்தனை மோசமான வார்த்தைகளும் ஆங்கிலத்திலும் தமிழிலும் அந்த மின்னஞ்சலில் இடம்பெற்றிருக்க “நீ எனக்கு வேண்டாம். இனிமேல் தொடர்பு கொள்ள முயற்சிக்காதே. உன்னோடு பேச எனக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை” என்ற கருத்து மிகத் தெளிவாகப் புரியும்படி எழுதியிருந்தான். மின்னஞ்சலை அனுப்பி விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்.

சில நிமிடங்களுக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் கணினி முன் அமர்ந்தவன், தனது இருபது முகங்களில் பதினைந்தை ஒன்றின் பின் ஒன்றாக செயலிழக்கச் செய்தான். ஒவ்வொரு முகத்தையும் செயலிழக்கச் செய்யும் பொழுது அதன் மூலம் அவனுக்குக் கிடைத்த அனுபவங்கள், நண்பர்கள், அவர்களுடனான உரையாடல்கள், கிளிர்ச்சிகள் என்று ஒன்றொன்றாய் அசை போட்டான். நிஜத்தில் வாழ்ந்ததை விட இணையத்தில் வாழ்ந்த, நடித்த கணங்கள் தான் அவனது வாழ்க்கையாகவே இருந்து வந்திருக்கிறது. எத்தனை நபர்கள், எத்தனை நினைவுகள்.

உண்மையையே கூற வேண்டாம் என்பதைத் தாண்டி பொய் முகங்களின் மற்றொரு மிகப் பெரிய வசதி, ஒரே நிமிடத்தில் அப்படி ஒரு நபர் இருந்ததற்கான அனைத்துச் சுவடுகளையும் அழித்து விட முடியும். சில பழைய பதிவுகளும், எங்கேயோ செய்த உரையாடலும் ஊசலாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் மற்றவர்களைப் பொறுத்த வரையில் இந்த நபர் திடீரெனக் காற்றில் மறைந்ததைப் போல் தான் இருக்கும். அந்த வகையில் அவன் முதலில் செயலிழக்கச் செய்தது அஷோக்கைத் தான். ஆர்.ஜேவின் தொல்லை இனி இருக்காது என்று நினைத்ததுமே அவனை அறியாமல் “பிட்ச்” என்று மெலிதாய்க் கூறி புன்னகைத்தான்.

பதினைந்து பொய்முகங்கள் மறைந்ததும் பாரம் குறைந்ததைப் போல் உணர்ந்த கேசவன்
மிச்சமிருந்த ஐந்தில் தனது ஆஸ்தானப் பொய் முகமான ராஜீவைத் தரிக்கத் தயாரானான். இவன் வகுப்பில் படிக்கும் வித்யாவிற்கு வட இந்திய ஆண்கள் மீது ஓர் இனம் புரியாத ஈடுபாடு இருந்ததை அறிந்து உருவாக்கிய பொய் முகம். இன்று அவள் ராஜீவின் நெருங்கிய தோழி. அவனுக்காக எதையும் செய்வாள். பெருமை பொங்க அவளது பக்கத்தை ஒரு முறை சென்று நோட்டம் விட்டவன், அவளும் அந்த நேரத்தில் தளத்தில் புகுந்திருந்ததைக் கண்டு “ஹை பேப்...” என்று உரையாடலைத் தொடங்க எத்தனித்தான்.

அந்த நேரம் பார்த்து திவ்யா அழைக்க அவசரமாய் “காட் டு கோ...” என்று அவசரமாய்த் தகவல் அனுப்பி விட்டு அனைத்துத் தளங்களில் இருந்தும் வெளியேறினான்.
வெளியே திவ்யா மற்றொரு ஐ.ஐ.டி புத்தகத்துடன் தயாராக இருக்க, கேசவனுக்கு “என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய் சனியனே...” என்று அலற வேண்டும் போலிருந்தாலும் வேண்டா வெறுப்பாய் அவள் முன் அமர்ந்தான். திவ்யோபதேசம் தொடங்கியிருந்தது.

2006 – சென்னை

நுங்கம்பாக்கம் இஸ்பஹானி சென்டர். கபே காபி டே.

அர்ச்சனா மனோகர் தம்பதி நெருங்கிய நண்பர்கள் புடை சூழ அமர்ந்திருந்தது. திருமணம் தந்த நெருக்கம் இருவர் முகத்திலும் புன்னகைப் பரிமாணம் எடுத்திருந்தது. வழக்கம் போல் ராஜேஷ் அனைவரையும் கலகலக்க வைத்துக் கொண்டிருந்தான்.

“ஒரு நாளைக்கி கொறஞ்சபட்சம்... கொறஞ்சபட்சம் ஏழு மணி நேரம் கடலை. நம்ம கூட ஒரு அப்பாவி கன்னி பைய்யன் இருக்கானேன்ற நெனப்பே சுத்தமா இல்லாம... சும்மா புரண்டு புரண்டு பேசி கார்பெட்ட சுத்தம் பண்ணுவான் பாருங்க... எங்க ஏரியாவுலயே கார்பட் அழுக்காச்சுன்னா எனக்கு தான் போன் வரும். உன் நன்பன கொஞ்சம் அனுப்பி வைக்கிறியான்னு... இது என்ட தளபதி...”

“போதும் ராஜேஷ். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...” சிரிப்பை அடக்க முடியாமல் அர்ச்சனா கெஞ்சினாள்.

“அடேய்... கொஞ்சம் மூடுறியா... மானத்த வாங்குரதுலயே குறியா இருக்கியேடா...” மனோகர் பொய்க் கோபம் காட்டினான்.

“இங்க மட்டும் என்ன ராஜேஷ். எழுந்ததுமே மனோ சரித்ரா தான்... செல் மட்டும் இல்லன்னா இவ என்ன பண்ணிருப்பான்னு தெரியல...” அர்ச்சனாவின் உயிர்த் தோழி லக்ஷ்மி ராஜேஷுடன் சேர்ந்து கொண்டாள்.

“என்ன பண்ணிருப்பாங்க. ஈமெயில் சோஷியல் மீடியால கடலை போட்டிருப்பாங்க... ஏன்னா கடலை போடாம எங்களால இருக்க முடியாது...” ராஜேஷ் வடிவேலுவைப் போல் பேசிக் காட்ட மறுபடியும் சிரிப்பலைகள்.
“கல்யாணத்துக்கப்பறம் ஸ்கூலுக்கு வர்றத பத்தி முடிவு பண்ணியா?” இது அர்ச்சனாவுடன் பணி புரியும்  பாத்திமா.

“இன்னுமா படிக்கிறீங்க... மனோ நீங்க பாஸ் ஆயிட்டதா சொன்னான்...” என்று மனோகரின் நண்பன் டேவிட் இடைமறித்துக் காலை வார, “யூ டூ ப்ரூட்டஸ்...” என்று சிரித்துக் கொண்டே கூறிய அர்ச்சனா பாத்திமாவைப் பார்த்துத் தொடர்ந்தாள். “ஜாப் கண்டின்யூ பண்ணறதா முடிவு பண்ணிட்டேன் பாத்திமா... மனோ இன்னும் ரெண்டு மூணு மாசத்துல இங்க சென்னைக்கு வர்றதா முடிவு பண்ணிட்டாரு... அதனால ஒரு லாங் லீவ் எடுத்துட்டு இந்தியா வந்ததும் திரும்ப ஜாயின் பண்ணிருவேன்...”

அவள் கண்கள் அனிச்சையாய் சம்மதம் கேட்பதைப் போல் மனோகரின் கண்களைச் சந்தித்தன.

“சரி... சீரியஸ்லி... எப்பிடி இருக்கு இந்த எக்ஸ்பீரியன்ஸ்? ஆன்லைன்ல சந்திச்சு பாக்காமலே லவ் பண்ணி... அட்வென்ச்சரஸ்...” லக்ஷ்மி ஆர்வமாய்க் கேட்டாள்.

“அரேஞ்ச்ட் மாரேஜ் மாதிரி தான... ஒருத்தர பாத்து பிடிச்சு அப்பறம் கல்யாணம்...”

“கம் ஆன்... அரேஞ்ச்ட் மாரேஜ்ல பேரன்ட்ஸ் எவ்ளோ பாத்து பாத்து முடிவு பண்ணறாங்க... லவ் மரேஜ்ல கூட ரொம்ப நல்லா பாத்து பழகி பிடிச்சப்பறம் தான் கல்யாணம் நடக்கும். ஆன்லைன்ல மீட் பண்ணி ஒரு வருஷத்துலயே கல்யாணமும் பண்ணிட்டீங்களே... அட்வென்ச்சரஸ் தானே...”

“லக்ஷ்மி... நான் நேர்ல பாத்து பழகின பல பேர் என்னை நோகடிச்சுருக்காங்க. நாலு நாளைக்கி முன்னாடி தேவதை, மகாலட்சுமின்னு கொண்டாடினவங்க ஒரே ஒரு அசம்பாவிதத்துக்கு அப்பறம் அதுவும் நான் ரொம்ப பாதிக்கப் பட்ட ஒரு அசம்பாவிதம் நடந்தப்பறம் எப்பிடி பேசினாங்கன்னு எனக்கு தான் தெரியும். என் கூட இருந்தவங்க எல்லாருமே எனக்கு ஆறுதல் சொல்லுவாங்க, இல்லன்னா அவங்க சொல்றதுலயும் ஒரு விஷயம் இருக்குன்னு வெறுப்பேத்துவாங்க. மனோ என்னை பாத்தது கூட கெடையாது. நான் எப்பிடி இருப்பேன்ன்னு கூட தெரியாது. ஆனா ஹீ மேட் மீ பீல் பெட்டர். சச் எ ஜென்டில்மேன்.” அர்ச்சனாவின் குரல் தழுதழுத்தது.

திடீரென்று நிலவரம் இறுக்கம் ஆனதை உணர்ந்த ராஜேஷ் சற்று சுதாரித்தவனாய்

“அவ்ளோ பெரிய ஜென்டில்மேனா சார் நீங்க... இவ்ளோ நாளா எனக்கு இது தெரியாம போச்சே...”என்று மனோகரை வம்பிழுக்க அங்கிருந்த அனைவரும் சம்பிரதாயமாய்ச் சிரித்தனர்.

உரையாடல்கள் முடிந்து நண்பர்கள் கூட்டம் கலைந்தது. ராஜேஷும் லக்ஷ்மியும் மட்டும் கூடுதலாய்ச் சில நிமிடங்கள் பேசி விட்டுச் சென்றனர். மனோகரும் அர்ச்சனாவும் வாகனத்திற்கு வந்து அமர மணி எட்டாகி இருந்தது.

“நைஸ் மீட் இல்ல... எல்லா க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் ஒரே எடத்துல மீட் பண்ணி... இட் வாஸ்  குட்... அண்ட் லாங்... மூணு மணி நேரம் போனதே தெரியல...” மனோகர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே பேச்சுக் கொடுத்தான்.
“யா... நான் தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு சொதப்பிட்டேனோ...” அர்ச்சனா தயக்கமாய்க் கூறினாள்.

“ச்சே... இதுல என்ன அர்ச்சு இருக்கு...” ஆறுதலாய் தலை கோதினான்.

“அதுக்கில்ல... நீங்க உங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட என்ன பத்தி சொல்லாம கூட
இருந்துருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு உளறி எம்பாரஸ் பண்ணிட்டேன்...”

“அர்ச்சு... யூ ஆர் மை வைப் நௌ. அது மட்டும் தான் இப்போ முக்கியம். உன்னோட கடந்த காலத்த காரணமா வச்சு உன்ன கேவலமா நெனைக்கிற ப்ரெண்ட்ஸ் எனக்கு கெடையாது, அப்பிடி யாராவது இருந்தா அவங்க எனக்கு வேண்டவும் வேண்டாம். போதுமா?”

“கோவம் இல்லையே...”

“ச்சே ச்சே... டோன்ட் பீ சில்லி...”

“ஓகே... ஓகே...” என்றவள் ஒரு நொடி இடைவெளி விட்டுத் தொடர்ந்தாள்... “நான் ஒன்னு கேட்டா தருவீங்களா?”

“எனிதிங் பார் யூ...”

“எனக்கு உங்கள மாதிரியே ஒரு பைய்யன் வேணும்...”

லேசாய் வெட்கிச் சிரித்த மனோகர் பதிலளிக்க முயற்சிக்கையில் அவன் கண்கள் அவள் கண்களைச் சந்தித்தன. அவள் கண்களில் காதலா, மரியாதையா, அன்பா, அபிமானமா என்று தரம் பிரிக்க முடியாத ஓர் அழகான உணர்ச்சி தெரிய, வாயடைத்துப் போய் தனக்கெனவே பிறந்த அந்த அழகியைக் அடக்க மாட்டாமல்  கட்டி அணைத்தான். முதல் முறை அணைக்கையில் கிடைத்த அதே நெகிழ்ச்சி, பரவசம்.

சில வினாடிகள் அப்படியே கடந்த பின் அர்ச்சனா குறும்புடன் கேட்டாள்... “என்னங்க பதிலையே காணோம்... குடுப்பீங்களா?”

“ஒரு பைய்யன் போதுமா?” என்று மனோகர் பதிலுக்கு அவள் காதில் கிசுகிசுக்க,
இருவரும் மகிழ்ச்சி பொங்கச் சிரித்தனர்.

2008 – தேனி

ரூபா ஜெகன்னாதன் தம்பதியரின் மகன் பாலாஜி அங்குமிங்கும் ஓடி குறும்பு செய்து கொண்டிருந்தான். ரூபா திருமணம் ஆகிச் சென்ற பின் மிகவும் அமைதியாய் மாறிவிட்ட அந்த இல்லத்தில் பாலாஜி வந்தால் தான் கலகலப்பே. சுவாமிநாதனுக்கும் அவன் மேல் அபரிமிதமான பிரியம், சொல்லப் போனால் ரூபாவை விட ஒரு படி அதிகமாய். விஷமக்காரனாக இருந்தாலும் படிப்பிலும் பேச்சிலும் பாலாஜி படு சுட்டி. அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது கூட அசாத்தியமாய் இருந்தது. ரூபாவிடமிருந்து பெற்ற வெள்ளைத் தோலில் ஜெகன்னாதனின் அம்சங்களைப் பதித்தது போல் தோற்றமளிக்கும் அவனைப் பார்த்தாலே அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அவன் செய்யும் சேஷ்டைகளை, அவன் கேட்கும் கேள்விகளை ரசிக்கக் கூடிய சூழ்நிலை அங்கு இல்லை.

“இவ செய்யிறது ஒன்னும் சரியில்ல மாமா...” இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்த ஜெகன்னாதன் ஒரு வழியாகப் பேசத் தொடங்கினான். ரூபா சமயலறையில் வேலையாய் இருந்தாள்.

“என்னாச்சு மாப்ள... கோவப்படாம சொல்லுங்க...” சுவாமிநாதன் பக்குவமாய் பேசினார்.

“என்னனு சொல்லறது மாமா... எந்நேரமும் இந்த கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்துக்குரா... கேட்டா ப்ரெண்ட்ஸ் கூட பேசுறேன்னு சொல்லறா... ஒரு வேலையும் உருப்படியா பாக்குறதில்ல...”

“வீட்ல தனியா இருக்கால்ல மாப்ள... ஊர்ல இருந்தாலாவது பேச்சுத் துணை இருக்கும். அங்க கஷ்டமல...”

“அது தெரிஞ்சு தான மாமா கம்ப்யூட்டரே வாங்கிக் குடுத்தேன். படிச்ச புள்ள... கொஞ்சம் பொழுது போனாப்புல இருக்கும்னு...”

சுவாமிநாதன் அடுத்து என்ன கூறப் போகிறாய் என்பது போல் அமர்ந்திருக்க, ஜெகன்னாதன் தொடர்ந்தான்.

“பொழுது போக்குக்கு வாங்கின கம்ப்யூட்டர் இப்போ புருசனாகிப் போச்சு... நானும் பாலாஜியும் பொழுது போக்கு ஆயிட்டோம்...”

“என்ன மாப்ள சொல்லறீங்க...”

“சொல்லறதுக்கு என்ன இருக்கு... இருவத்தி நாலு மணி நேரமும் இதே வேலையா இருக்கா... எப்போ பாரு எதோ ஒரு கருமம் பிடிச்ச சைட்டுக்கு போய் பிரவ்சிங் பண்ணி ஒக்காந்துட்டு வெட்டிக் கத பேசிட்டிருக்கா... காலேல சாப்பாடு பண்ணறது கூட கெடையாது. மீறி பண்ணா எப்போ பாரு ரசம். விஷம் மாதிரி இருக்கு எனக்கு.... நான் எப்போ போறேன், எப்போ வரேன், சாப்பிட்டேனா சாப்பிடலையா ஒரு எழவும்
கண்டுக்குறதில்ல...”

“ஐயய்யோ...”

“இதுக்கே ஐயோன்னா எப்பிடி? இன்னும் சொல்லறேன் கேளுங்க. பாலாஜிக்கும் இதே நெலம தான். பாவம் பள்ளிகூடத்துல இருந்து வந்தவன் அன்னைக்கி சாயந்தரம் வந்து பாக்குறேன்... யூனிபார்ம் கூட கழட்டாம பசிக்கிதுன்னு கெஞ்சிட்டிருக்கான். மகாராணி ஒக்காந்து ப்ரெண்ட்ஸ் கூட பேசிட்ட்ருக்காங்க... பெத்த மகன் பசில துடிக்கிற சமயத்துல அப்பிடி என்ன ப்ரெண்ட்ஸ் வேண்டி இருக்கு?”

“தப்பு தான் மாப்ள...”

“ரொம்ப தப்பா இருக்கு மாமா... எதையாவது சொன்னா உடனே மூஞ்சிய தூக்கி வச்சுக்குறா. கன்னத்த சேத்து அப்பணும் போல இருக்கு. திட்டினா ஒரு நாள் நல்லா இருக்கும் சாப்பாடு. அடுத்த நாள்ல இருந்து பழைய குருடி கதவ தெரடி. இப்பிடி இருந்தா ஒரு மனிஷன் என்ன பண்ண முடியும் சொல்லுங்க. நான் பிசினஸ் பாப்பேனா, அரசியல பாப்பேனா இல்ல இவ என்ன பண்ணறா, பாலாஜிய பட்டினி போடறாளான்னு பாத்துட்டிருக்கிறதா?”

“நான் அவ கிட்ட பேசி எடுத்து சொல்லறேன் மாப்ள...”

“என்னத்த சொல்லுவீங்களோ... எல்லாத்த விடவும் பிரமாதம் என்னன்னா இந்த வெட்டிக்... கெட்ட வார்த்த பேசக்கூடாதுன்னு பாக்குறேன்... வெட்டிப் பசங்களோட போட்டி போடறதுக்கு பொய் வேற. படிக்காத புஸ்தகத்த படிச்சேன், பாக்காத படத்த பாத்தேன்னு... அப்பறம் சொல்லிட்டோமேன்னு அவசரகதியா அந்த புஸ்தகத்த படிக்கிறது, படத்த பாக்குறது... கேட்டா பெருமையாம். இவ என்ன ஒன்னாங்க்லாஸ் பொண்ணா? இதெல்லாம் ஒரு குடும்ப பொம்பள செய்யிற வேலையா? பாலாஜி கூட இதெல்லாம் பண்ண மாட்டான். எதோ மெண்டல் ஆயிருச்சு. கல்யாணத்துக்கு முன்னாடியே அரசல் புரசலா கேள்விப்பட்டேன். நான் தான் பாலு மாமா பேச்ச கேட்டு உங்கள மதிச்சு பொண்ண எடுத்தேன். எனக்கு கல்யாணத்த பண்ணி வச்சுட்டு நீங்க நிம்மதியா இருக்கீங்க...”

“மாப்ள... அவசரப்பட்டு வார்த்தையைக் கொட்டாதீங்க. ரூபா பண்ணது தப்பு தான். கேக்கவே சங்கடமா இருக்கு. அவ பொதுவா ரொம்ப பொறுப்பான பொண்ணு மாப்ள. இத்தன வருஷத்துல அது உங்களுக்கே தெரிஞ்சுருக்கும். இப்போ நீங்க சொல்லி தான் இதெல்லாம் எனக்கு தெரியும். நான் அவ கிட்ட பேசுறேன். நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க. நம்ம பாலாஜிய கூட்டிட்டு பக்கத்துல இருக்குற பெருமாள் கோவிலுக்கு போய்ட்டு வாங்க. அதுக்குள்ள நான் அவ கிட்ட பேசி வைக்கிறேன். சின்னப் பையன வச்சுட்டு இதெல்லாம் பேச வேணாம்...”

“சரி மாமா... நீங்க பெரிய மனிஷன்... சொல்லறீங்க... நானும் உங்க வார்த்தைக்கு கட்டுப்படுரேன். ஆனா இதுக்கப்பறம் அவ இதே மாதிரி நடந்துகிட்டா அப்பறம் நான் என்ன முடிவெடுத்தாலும் என் மேல வருத்தப் படக் கூடாது.” மெலிதான குரலில் சொன்னாலும் அழுத்தம் திருத்தமாய்க் கூறி வெளியேறினான் ஜெகன்னாதன்.

சுவாமிநாதனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நாளாக நாளாக ரூபா சிறிது சிறிதாய் புரிதல் எல்லையைத் தாண்டிப் போவது போல் உணர்ந்தார். அவளை முழுதாய்ப் புரிந்து கொண்டதாய் அவர் என்றுமே எண்ணியதில்லை என்றாலும் ஜெகன்னாதன் கூறியதைக் கேட்கையில் அவள் ஏதோ முன்பின் தெரியாத ஒரு பெண்மணி போல் தோன்றியது. யோசனையில் ஆழ்ந்தபடியே சமையலறையை நோக்கிச் சென்றார்.

ரூபா சமைத்துக் கொண்டிருந்தாள். அருகிலே அவளது அலைபேசி அவ்வப்போது சிணுங்கியது. இவளும் அதை சீரான இடைவெளியில் பார்த்த வண்ணம் இருந்தாள். சுவாமிநாதனுக்கு மருமகன் கூறியது முழுக்க முழுக்க உண்மை என்பது புரிந்தது.

“ரூபா...” என்று அவர் அழைத்ததும் லேசாய்த் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

“என்னப்பா... சத்தமில்லாம வந்து பயமுருத்துறீங்க...”

“எதுவும் முக்கியமான காலுக்காக காத்துருக்கியாம்மா?”
“என் ப்ரெண்ட்ஸ் தான்பா மெசேஜ் பண்ணிட்ருக்காங்க... அதான்...”

“சமைக்கிறப்போ இதெல்லாம் தேவையாம்மா... இப்பிடி ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்ன்னு இருந்தா எப்பிடிம்மா? உன்ன அப்பிடியா நான் வளத்தேன்?”
ஒரு நிமிடம் சமையலை நிறுத்தியவள், அடுப்பை அனைத்து விட்டுத் திரும்பினாள்.

“என்னாச்சு? உங்க கிட்டயும் பொலம்பியாச்சா அந்த மனுஷன்?”

“அவர் சொல்லறதுல என்னம்மா தப்பிருக்கு?”

“என்ன தப்பில்ல? பொண்ணா பிறந்தா விருப்பு வெறுப்பு சந்தோஷம் எல்லாத்தையும் தியாகம் பண்ணிறணுமா? எனக்குன்னு ப்ரெண்ட்ஸ் இருக்க கூடாதா? அவங்க கூட நான் சந்தோஷமா சிரிச்சு பேச கூடாதா? நாள் முழுக்க வேலைக்காரி மாதிரி வடிச்சு கொட்டிட்டு, வீட்ட பாத்துட்டு தான இருக்கேன். இது கூட பொறுக்கலையா? இதுக்கு நீங்க ஜால்ரா வேற... அருவருப்பா இருக்கு எனக்கு... இது எங்க பிரச்சனை... நான் பாத்துக்குறேன்” என்று பொரிந்து தள்ளி வெளியேறினாள்.

சுவாமிநாதன் வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார். அனிச்சையாய் கண்ணோரம் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்திருந்தது.

அன்று முழுவதும் ரூபா ஜெகன்னாதனுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க பாலாஜி மறுபடியும் பாலாஜியை தரிசிக்கச் சென்றான். இம்முறை தாத்தாவுடன்.

2011 – சென்னை

மனோகர் அர்ச்சனா தம்பதியரின் இனிய திருமண வாழ்கையின் சான்றான அவர்கள் மகன் அர்ஜுன் வெளியே கிளம்பத் தயாராய் வெள்ளை டி ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் சகிதம் அமர்ந்திருந்தான். அவன் தலை படிய வாரப்பட்டிருக்க நெற்றியில் லேசான விபூதிக் கீற்று. அர்ச்சனா அவனுடன் பேச்சுக் கொடுத்து அவன் மழலைச் சொற்களை ரசித்துக் கொண்டிருந்தாள். மனோகர் திட்டப் பணி நெருக்கடி காரணமாக அலுவலகம் செல்ல வேண்டி வந்ததால், திவ்யாவுடன் பள்ளிக்குச் செல்வதாய் திட்டம். திவ்யா வயதில் எட்டு ஆண்டுகள் பெரியவள் என்றாலும் அர்ச்சனாவுடன் சகஜமாய்ப் பழகுவாள்.
எதேச்சையாய் அழகு நிலையத்தில் சந்தித்து அறிமுகமாகி, திவ்யாவின் மகன் கேசவன் படிக்கும் பள்ளியில் தான் அர்ச்சனா பணியில் இருக்கிறாள் என்று தெரிந்ததும் பரஸ்பரம் நெருக்கம் கூடியது. தவிர இருவரும் அடுத்தடுத்த தெருக்களில் வசிப்பது கூடுதல் சௌகரியமாகிப் போனது. பண்டிகை நாட்களில் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் செல்வது, ஒருவருக்கொருவர் உதவி புரிவது என வளர்ந்த இவர்கள் நட்பு இப்பொழுது ஏறத்தாழ சகோதரிகள் அளவில் பழகியிருந்தனர். திவ்யா தமிழில்... அதாவது தமிழிலும்... உரையாடும் மிகச் சிலரில் அர்ச்சனாவும் அடக்கம்.

அர்ஜுன் தன் வகுப்பைப் பற்றி ஏதோ அழகாய்ச் சொல்லிக் கொண்டிருக்கையில் அர்ச்சனாவின் அலைபேசி அழைத்தது. மறுமுனையில் திவ்யா.

“ஹே அர்ச்சனா... ஐ யாம் ஆன் மை வே யா... பீ ரெடி நோ...”

“யா திவ்யாக்கா... ஐ யாம் ரெடி... கால் மீ வென் யூ ரீச்... ஐ வில் கம் அவுட். சலோ பை...”

அடுத்த ஐந்து நிமிடங்களில் திவ்யாவின் இண்டிகோ அர்ச்சனா, அர்ஜுனை  அழைத்துக் கொண்டு பள்ளி நோக்கிப் பிரயாணிக்கத் தொடங்கியது.

“உங்க ஸ்கூல் மீட்டிங் ஸ்டூடன்ட்ஸ விட பேரன்ட்ஸ்க்கு பெரிய பயம்மா இருக்கு...”

“டீச்சர்ஸ்க்கு கூட அதே நிலைமை தான் அக்கா... இந்த தடவ நான் எந்த கிளாசுக்கும் கிளாஸ் டீச்சர் இல்லை... தப்பிச்சேன். இல்லைன்னா ஒவ்வொரு மீட்டிங்கும் பெரிய தல வலி...”

“ஓ...”

“ஆமா... பசங்கள ரொம்ப க்ளோசா வாட்ச் பண்ணி ரிபோர்ட்ஸ் குடுக்கணும். தப்பா எதுவும் சொல்லிற கூடாது. அப்பிடியே ஏதாவது வில்லங்கம் இருந்தாலும் சாட்சியோட தான் பேசனும். ஏதாவது சொதப்பினா வேலை காலி...”

“அப்பிடி ஒன்னும் அவங்க மெனக்கெட்டு பண்ணறா மாதிரி தெரியலயே... கேஷவ்க்கு ஒவ்வொரு தடவையும் நெகடிவ் பீட்பாக். அவன் பேசுறதில்ல பழகுறது இல்ல... கவுன்சலிங் கூட்டிட்டுப் போங்கன்னு... எங்களால எதித்து கூட பேச முடியல. அடுத்த நிமிஷம் டி.சி கைல இருக்கும். இன்னைக்கும் அநேகமா அதே புராணம் தான் பாடுவாங்க...”

“அவங்க அவ்ளோ தூரம் சொல்லறாங்கன்னா காரணம் இல்லாமலா இருக்கும்” என்று மனதிற்குள் நினைத்தவள், “நீங்க சொல்லறா மாதிரி அவங்கள நீங்க எதுத்து பேசுறது கஷ்டம் தான். பொதுவா அதை என்கரேஜ் பண்ண மாட்டாங்க. ஆனா நீங்க காரணம் கேக்கலாமே...” என்று மழுப்பலாய்க் கூறினாள். கேசவனின் மேல் அர்ச்சனாவிற்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததே இல்லை. எப்பொழுதுமே கணினி, வீடியோ கேம்ஸ், டி.வி என்று ஒரு தனி உலகத்தில் விட்டேத்தியாய் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவ்வளவு நெருங்கிப் பழகிய பின் கூட அவன் அர்ச்சனாவையோ, மனோகரையோ பார்த்துச் சிரித்தது கூட கிடையாது. வலியப் போய் பேசினால் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் வரும். அவ்வளவு ஏன்... அவர்களுக்கு அறிமுகனாவர்களிலேயே அர்ஜுனைக் கொஞ்சாத ஒரே ஆள் கேசவன் தான். “சரியான சைகோ” என்று மனோகர் கூட பல முறை கூறியதுண்டு. அதனாலேயே அவன் திவ்யா, ரெங்கநாதன் தம்பதியருடன் கூட பெரிதாய்
ஒட்டியது இல்லை. சம்பிரதாயமாய்ச் சிரித்துப் பேசுவதுடன் சரி.

“நான் காரணம் கேட்டா என்ன சொல்லுவாங்க தெரியுமா? அவன் இவங்க கூட பேசல. அவங்க கூட பேசல. தனியா இருக்கான்னு சொன்ன கதையே தான் சொல்லறாங்க. அரே அவன் தான் இன்ட்ரோவர்ட்ன்னு எல்லாருக்கும் தெரியுமே. ஆனா அதுக்கு இப்பிடி ஒரு பிராண்ட் தேவையா?”

“ஸ்கூல்ல மத்த பசங்களுக்கும் இதே மாதிரி பீட்பாக் வருதான்னு கேட்டீங்களாக்கா?”

“என்ன அர்ச்சனா பேசுற நீ? நான் ஒவ்வொருத்தர் கிட்டயா போய் உங்க பைய்யனுக்கு நல்ல பீட்பாக் வந்ததா? என் பைய்யன் சரியில்லன்னு சொல்லறாங்கன்னு சொல்லி கேக்கவா முடியும்?”

“அப்பிடின்னு இல்லக்கா... நீங்க கேஷவ் கிட்ட கேட்டீங்கன்னாலே அவங்க கிளாஸ்ல வேற யாரெல்லாம் ரிசர்வ்ட்ன்னு தெரிஞ்சுரும் இல்லையா? அவங்க பேரன்ட்ஸ் கிட்டயும் நீங்க பேசி பாத்தா ஒரு ஐடியா கெடைக்கும் இல்லையா?”

“அவங்களுக்கு அந்த மாதிரி சொல்லலன்னா உடனே என் ஒரே பைய்யன பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக முடியுமா?” திவ்யாவின் குரலில் கோபம் கொப்பளித்தது.

அர்ச்சனாவிற்கு கோபம் வந்தாலும், உறவை சிதைத்துக் கொள்ள வேண்டாம் என்று எண்ணி “சாரி அக்கா... நான் அப்பிடி சொல்ல வரல...” என்று கூறி சுருக்கமாய் முடித்துக் கொண்டாள்.

பிள்ளைப் பாசத்தில் அவனை ஆதரித்துப் பேசினாலும் நிஜத்தில் திவ்யாவின் கோபம் கேசவனின் போக்கினால் வந்த வருத்தத்தின் வெளிப்பாடு தான். எங்கே மன நல மருத்துவரிடன் அழைத்துச் சென்றால் கேஷவிற்கு ஏதோ கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்துக் கூறி விடுவார்களோ என்ற பயத்தினாலேயே அவள் அதை தவிர்த்து விட்டாள். ரெங்கநாதனுடன் இதைப் பற்றிப் பேசினாலும் “அதெல்லாம் தானா சரியா போயிடும். நான் கூட சின்ன வயசுல கொஞ்சம் ரிசர்வ்ட் டைப் தான். அனாவசியமா குழம்பாத...” என்று கூறி முற்றுப் புள்ளி வைத்து விடுவார்.

“சாரி டா. நான் கொஞ்சம் கோவமா பேசிட்டேன். டின்ட் மீன் டூ...” சற்று நேர அமைதிக்குப் பின் திவ்யா மெல்லிய குரலில் தொண்டகினாள்.

“நோ ப்ராப்ளம் அக்கா... நான் தான் கொஞ்சம் அனாவசியமா அட்வைஸ் பண்ணிட்டேன்...”

“ச்சே ச்சே... அப்பிடியெல்லாம் இல்ல அர்ச்சனா. நீ என் தங்கை மாதிரி... ஜஸ்ட் தட் திஸ் ஹோல் திங் ஈஸ் டிரைவிங் மீ நட்ஸ்...” திவ்யா குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.

“புரியுது அக்கா... டோன்ட் ஒரி... திங்க்ஸ் வில் பீ பைன்.” என்று அர்ச்சனா கூறிக் கொண்டிருக்கையிலேயே பள்ளி வந்திருக்க “என்னை இங்கயே எறக்கி விட்டிருங்கக்கா... கே.ஜி ஈஸ் ஜஸ்ட் எ ப்ளாக் அவே...” என்று கூறி திவ்யாவிடமிருந்து விடை பெற்றாள்.

2012 – சென்னை

அந்த நள்ளிரவில் அண்ணா நகரே நிசப்தமாகியிருந்தது. கம்பீரமாய் வீற்றிருந்த அந்த மூன்று மாடி பங்களாவின் பக்கவாட்டில் ஒரே ஒரு காவல் துறை வாகனம் மட்டும் நின்று கொண்டிருந்தது ஏறத்தாழத் தென்படவே இல்லை. ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளரின் வீடு என்பதற்குண்டான அனைத்து லட்சணங்களும் அந்த வீட்டில் இருந்தன.

இன்ஸ்பெக்டர் நடராஜன் அந்த வீட்டினுள் விஸ்தாரமான அரக்கு நிற சோபாவில் அமர்ந்து ஜெகன்நாதனிடம் பேசிக் கொண்டிருந்தார். குளிரூட்டப்பட்ட கூடத்தில் அமர்ந்திருந்த போதும் ஜெகன்னாதனுக்கு வியர்த்துக் கொட்டியது.

“என்ன ஆச்சுண்ணே? ஏன் இந்த ராத்திரில கூப்பிட்டீங்க? ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க?” நடராஜன் தொப்பியைக் கழற்றி வழுக்கையை ஒரு முறை தடவிய வண்ணம் வினவினார். ஜெகந்நாதனின் ஊர் என்பதோடு மட்டுமல்லாமல் தூரத்துச் சொந்தமும் கூட என்பதால் நடராஜன் ஏறத்தாழ ஜெகந்நாதனின் வலது கை.

“பெரிய பிரச்சனை ஆகிப் போச்சுடா...” ஜெகன்னாதன் குரலில் பதட்டம் தெறித்தது.

“பொறுமையா சொல்லுங்கண்ணே... என்ன ஆச்சு?”

“என் பொண்டாட்டி தற்கொலை செஞ்சுகிட்டா...”

“என்னண்ணே சொல்லறீங்க?” அதிர்ச்சியில் தன்னை அறியாமல் நடராஜன் எழுந்து நின்றிருந்தார்.

“பாடி உள்ள தான் இருக்கு... போய் பாரு...”

நடராஜன் அவசரமாய்ச் சென்று சடலத்தைப் பார்த்து வந்தார். அங்கு நீலம் பாய்ந்து கோரமாய் மடிந்து கிடந்தாள் ரூபா. மறுபடி கூடத்திற்கு வந்தவர் ஜெகன்னாதனைப் பார்த்துத் தொடர்ந்தார்.

“எப்பிடிண்ணே...”

“உன்கிட்ட சொல்லறதுக்கு என்ன நடராஜா... ஏன்டா இவள கல்யாணம் பண்ணோம்ன்னு இருக்கு... கொஞ்ச வருஷம் முன்னாடி வரைக்கும் அடக்கமா தான் இருந்தா. இந்த சனியன் பிடிச்ச கம்ப்யூட்டர வாங்கினதுல இருந்து புத்தி பேதலிச்சுப் போச்சு. பைய்யன் கஷ்டப்படறான்னு அவன கூட ஹாஸ்டல்ல சேத்துட்டேன். இப்போ இந்த கழுத செத்து ஒரு புது பிரச்சனைய கெளப்பி விட்டிருக்கு... இன்னும் ஒரு வருஷம் கூட இல்ல எலெக்ஷனுக்கு. இந்த தடவ எம்.எல்.ஏ சீட்டு உறுதி... இப்போ போய் இதெல்லாம் வெளில வந்தா பெரிய சிக்கலாகிப் போகும் நடராஜா...”

“புரியுதுண்ணே... என்ன பண்ணலாம்னு சொல்லுங்க...”

“இயற்கையா செத்துப் போனா மாதிரி இருக்கணும். ஆனா உடம்பு நீலம் பாஞ்சுருக்கு. என்னத்த முழுங்குச்சோ சனியன்... அதான் ஒண்ணும் புரியல... இவங்கப்பா வேற உசிரையே வச்சுருக்காரு பொண்ணு மேல... கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் கொடஞ்சு எடுத்துருவாங்க... இந்த மாதிரி குழப்பம் எல்லாம் வந்தா கட்சி மேலிடத்துல நம்ம பேர் ரிப்பேர் தான்.”

“ஹார்ட் அட்டாக்ன்னு வேணா சொல்லிருங்க.”

“எப்பிடிய்யா? கண்டுபிடிச்சுட்டா?”

“அதெல்லாம் ஆகாதுண்ணே... நான் போன வாரம் தான் ஒரு பாடிய பாத்தேன். நீலமா சூசயிட் கேஸ் மாதிரி தான் இருந்தது. அந்த டாக்டர் ஹார்ட் அட்டாக்ல செத்து போயிட்டதா சொன்னாரு. நம்ம ஜாதில எரிக்கிறது தான் வழக்கம். ஒரே ஒரு நாள் சமாளிச்சுட்டீங்கன்னா அதுக்கப்பறம் ஒரு பஞ்சாயத்தும் இல்ல. எவனாவது கிளறினா கூட ஒரு தடயமும் மிஞ்சி இருக்காது!”

“ஹ்ம்...”

“இப்போ மெத்த மேல இருக்குற பாடிய தரைல சரிஞ்சு விழுந்தா மாதிரி படுக்க வச்சுருவோம் போன் பக்கத்துல போடுவோம். அப்போ தான் நெஞ்சு வலி வந்து போன் பண்ண வந்தப்போ அப்பிடியே விழுந்து தவறிட்டா மாதிரி இருக்கும். தற்கொலைன்னு எந்தத் தடையமும் இல்லாம செஞ்சுருவோம். நீங்க இப்போ தான கட்சி மீட்டிங்க்ல இருந்து வர்றீங்க... எனக்கு உடனே நீங்க தகவல் சொன்னதா சொல்லிருவோம். நான் வந்து பாத்தப்போ அம்மா சரிஞ்சு செத்துக் கெடந்தாங்க. போஸ்ட் மார்டம் தேவை இல்லைன்னு ரிபோர்ட்டு குடுத்துர்றேன். நீங்க ஆக வேண்டிய காரியத்த பாருங்க...”

“ஒன்னும் பிரச்சனை வந்துறாதுல்ல...”

“ஏரியா இன்ஸ்பெக்டர்ன்ற முறைல நான் தான் ரிப்போர்ட் எழுதணும். இது பிரச்சனை ஆறதுக்கு வாய்ப்பே குடுக்காம நாளைக்கே பாடிய எரிச்சுருங்க. அதுக்கப்பறம் நீங்க கவலையே படாதீங்க. எல்லாம் நான் பாத்துக்குறேன்...”

“நன்றி நடராஜா... ”

“இதுகூட பண்ணலன்னா அப்பறம் சொந்தம்னு என்னன்னே இருக்கு...”

தலை ஆட்டிய ஜெகன்னாதன் ஒரு நிமிட யோசனைக்குப் பின் தொடர்ந்தான்... “என்ன நடந்ததுன்னு கண்டுபிடிக்க முடியுமா நடராஜா?”

“கம்ப்யூட்டர் சம்மந்தப்பட்ட விஷயம்னாலே சைபர் கிரைம் டிபார்ட்மன்ட்ண்ணே... அங்க நமக்கு வேண்டப்பட்டவங்க கம்மி. கேஸ் இல்லாம கஷ்டம். வேணும்னா இதெல்லாம் அடங்கினப்பறம் டெக்னிஷியன் எவனையாவது ஸ்டேஷனுக்கு கூப்ட்டு காட்டுவோம். நீங்க யாரு என்னன்னு வெவரம் சொல்லாம என்னனு பாக்க சொல்லுவோம்... நீங்க எதுக்கும் கம்ப்யூட்டர அமத்தி வைங்க.”

“சரி நடராஜா... நீ சொன்னபடி செஞ்சுருவோம். பிரச்சனை எதுவும் வராம பாத்துக்க...” என்றபடி ஜெகன்னாதன் கணினியின் மின் இணைப்பைத் துண்டிக்க, அதுவரை ஆர்.ஜே என்ற பெயருக்கருகே இருந்த பச்சை வட்டம் மறைந்தது. நிரந்தரமாக!

எட்டு மணி நேரம் முன்பு...

கேசவன் அசோக் என்ற பெயரில் அனுப்பிய மின்னஞ்சல் ரூபாவிற்கு வந்து சேர, அதைப் படித்து முடித்ததும் நொறுங்கிப் போனாள். என்ன காரணம் என்று தெரியாத போதும் அசோக்கின் மேல் அபரிமிதமான காதல் கொண்டிருந்தாள் ரூபா. அவனுடனான கடந்த இரண்டு வருட பழக்கத்தில் அர்த்தமற்றுப் போன தன் வாழ்க்கையில் ஒரு புதிய ஒளி பிறந்ததைப் போல் உணர்ந்தாள். தனக்கு ஏற்பட்ட அத்தனை கசப்பான அனுபவங்களையும், மனதிற்குள் புதைத்து வைத்திருந்த ஆசைகளையும் அவள் பகிர்ந்து கொண்ட ஒரே நபர் அசோக். இப்பொழுது அவனிடம் இருந்து கேட்கக் கூடாத வார்த்தைகளை மட்டுமே உள்ளடக்கிய ஒரு மின்னஞ்சல். இதயம் உடைந்தது. வாழ்க்கை வழக்கத்தை விட அதிகமாக வெறுத்துப் போக, தூக்க மாத்திரைகள் தொண்டை குழிக்குள் அணிவகுத்தன. கண்கள் சொருகி, மயங்கிச் சரிந்து, உடலில் விஷம் பரவி அல்லல்பட்ட அவள் ஆவியை வெளியேற்றியது.

இறப்பதற்கு முன் அவள் பதிவு செய்த “தாங்க்யூ அசோக்... குட் பை வேர்ல்ட்...” என்ற ஒற்றை வரித் தகவல் அவளது வலைப் பக்கத்தில் தங்கி நூற்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களைத் தாங்கி பூகம்பம் கிளம்பக் காத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக