வாகனப்புகையும், ஒலிப்பான்களின் அலறலும், பரபரப்பு நோய் தொற்றிய மனிதர்களும் தென்படும் ஒரு நகரத்துக் காலைப் பொழுது. சர்தார் படேல் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டு நிற்கும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஒன்று ராகவனுடையது. அநேகமாக அந்த நெரிசலில் சிக்கி நிற்கும் ஒரே வெஸ்பா ஸ்கூட்டர் இவனுடயதாகத் தான் இருக்கும். இன்னும் சற்று உயரமாக இருந்திருக்கலாம், இன்னும் சற்று வசதியுடன் பிறந்திருக்கலாம், இன்னும் சிறப்பாகப் படித்திருக்கலாம், இன்னும் பெரிய வேலையில் இருந்திருக்கலாம்... இப்படிப் பல "இருக்கலாம்"ங்களின் உறைவிடம் ராகவன். பாழாய்ப் போன பட்டணத்தில் வாழ வேண்டுமென்ற கட்டாயத்தில் வாழ்கையின் சுகங்களைத் தொலைத்து, பணத்தைத் தேடி அலையும் நடுத்தர வர்க்கத்தின் உதாரண புருஷன்.
"ஏய் கஸ்மாலம்... காலங்காத்தால ட்ராபிக் ஜாம்ல கண்ணாடிய பாத்துனு கனா கண்டுனிருக்குது பாரு. $^%$^%$ புள்ள."
கண்ணாடியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் கோபமாய்த் திரும்பிப் பார்த்தான். TN 02 AL 4987 ஆட்டோவிலிருந்து தான் அர்ச்சனை விழுந்து கொண்டிருந்தது.
"இன்னா மொறைக்கிற? வுட்டேன்னா செவுலு அவுலாயிடும்"
இறங்கி அவனை அடிக்க வேண்டுமென்று தோன்றினாலும் அவசரத்தில் இருப்பதன் காரணமாக அமைதியாய் வெஸ்பாவை நகற்றினான். "TN 02 AL 4987..." மனதிற்குள் முணுமுணுத்தான்.
துரைப்பாக்கம் தாண்டியதும் வெஸ்பா வெலவெலக்கத் தொடங்கியது. பின் சக்கரம் மூச்சைப் பறிகொடுத்து மடிந்திருந்தது.
"ஆண்டவா... என்ன ஏன் இப்பிடி சோதிக்கிற?" விரக்தியாய் ஸ்கூட்டருக்கு ஒரு உதை கொடுத்து விட்டு, உதைத்த வேகத்தில் அதை துடைத்தும் விட்டு, சுற்றுமுற்றும் பார்த்தான். துரதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டமாய் ஒரு வாகன மருத்துவமனை அருகிலிருந்தது. "முருகன் ஆட்டோ ஒர்க்ஸ்" என்ற பெயர்ப் பலகையின் கீழ் அழுக்கேறிய உடையும், முறுக்கேறிய உடலுமாய் ஒரு நடுத்தர வயதுக்காரன் ஸ்பார்க் ப்ளக்கை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
"Back Tyre பஞ்சர்..."
"அப்பிடி வை சார். டேய் ராஜா... ஸ்கூட்டர் பஞ்சர்... இன்னான்னு பாரு"
ஸ்கூட்டரை விட சற்றே உயரமாயிருந்த சிறுவன் பின் சக்கரத்தை கழற்றி சிகிச்சைக்குக் கொண்டு சென்றான்.
"கௌசல்யா சுப்ரஜாராம பூர்வா சந்த்யா..."
ஊனமாகி விட்டிருந்த தன் கிழட்டுக் குதிரையை வெறித்தபடி கூரை அடியில் நின்று கொண்டிருந்த ராகவனின் கைபேசி அவனை சுப்ரபாதம் பாடி அழைத்தது.
"ஹலோ"
"சார். சொல்லுங்க சார்"
"வண்டி பஞ்சரா போச்சு சார். மெக்கானிக் கடைல இருக்கேன்... இன்னும் ஒரு 15 minutes ல அங்க இருப்பேன் சார்"
"..."
"சாரி சார்..."
"..."
"சார். ஆமாம் சார். 9 மணிக்கு அங்க இருக்கணும்னு சொன்னீக. ஆனா வர்ற வழில traffic jam... இப்போ வண்டி பஞ்சர்... அதான்..."
"..."
"கண்டிப்பா சார்... 9:30 கெல்லாம் நிச்சயமா அங்க இருப்பேன் சார்"
"..."
"அப்பிடி எதுவும் பண்ணிராதீக சார்.. சம்பளத்துல 500 ரூவா பிடிச்சீகன்னா இந்த மாசம் ரொம்ப சிக்கலாகிப் போகும் சார். புள்ளகுட்டிக் காரன்..."
"..."
"Thank You சார். ஓகே சார். ஓகே..."
இணைப்பைத் துண்டித்து நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டான். "வந்ததும் சரியில்ல வாச்சதும் சரியில்ல..." மனதிற்குள் புலம்பினான்.
"இந்தாய்யா மெக்கானிக். இன்னும் எம்புட்டு நேரம் ஆகும்?"
"தோ முஞ்சிச்சி சார். 2 நிமிட்ஸ்"
ஒட்டுப்போட்ட பின்னங்காலைப் பொருத்தி விட்டு பொடியன் "அண்ணாத்த... முஞ்சிச்சு..." என்றான்.
"150 குடு சார்"
"எதுக்குய்யா 150?"
"ஆங்... சிலுக்கு ஸ்மிதா டான்ஸ் ஆட்னுதுக்கு. இன்னா சார் நீ... பஞ்சர்க்கு தான் சார்"
"150 ரொம்ப அதிகம்யா..."
"சார். காலங்காத்தால சொம்மா தொனதொனனு பேசிநிருக்காத சார். 150 குட்த்து எடத்த காலி பண்ணு சார்"
வேறு வழி இன்றி பாக்கெட்டினுள் பார்த்தான்... ஒரு நூறு ரூபாய்த் தாள், இரண்டு பத்து ரூபாய்த் தாள்கள், ஒரு ஐந்து ரூபாய் நாணயம், இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்கள், ஒரு ஒரு ரூபாய் நாணயம்...
"என்கிட்டே 130 தான்யா இருக்கு..."
"இன்னாது 130 தான் இருக்கா? காசில்லன்னா நீயெல்லாம் எதுக்குய்யா ஸ்கூட்டர்ல வர்ற? தோ போவுது பாரு PTC... அதுல புட்போர்டுல போவேண்டித்தான... காயிலான் கட ஸ்கூட்டர்ல வர்சொல்லோவே நெனச்சேன்... பார்டி வண்டி மட்டும் தான் பஞ்சரா பர்சும் சேத்து பஞ்சரானு... இனி இந்த ஏரியா பக்கமே வந்துறாத சாவுக்ராக்கி..." ராகவன் கையிலிருந்த காசைப் பிடுங்கியபடி வசை பாடினான்.
கோபமும், இயலாமையும் வேகமாய் மாற, வெஸ்பா அனுமதித்த உச்சக் கட்ட வேகத்தில் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைந்தான். மணி 9:35.
"கௌசல்யா சுப்ரஜாராம பூர்வா சந்த்யா..."
மறுபடியும் முதலாளியிடம் இருந்து அழைப்பு... ராகவன் அவரது கணக்காளன் மற்றும் நிர்வாக மேற்பார்வையாளன். இந்தப் பணிக்கு ஏன் இவ்வளவு நேரக் கெடுபிடிகள் என்று ராகவனுக்கு இன்றளவிலும் விளங்கியதில்லை.
"சார்... நான் வந்துட்டேன் சார். இப்போ chennai infotech ஆபீஸ்ல தான் சார் இருக்கேன்."
"..."
"சார்... 9:35 சார்"
"..."
"சார்... அது... 9:30 சார்"
"..."
"சார் சார்... கொஞ்சம் அனுசரிச்சுக்குங்க சார்... வழில மாட்டிக்கவும் late ஆகி போச்சு. இல்லைன்னா..."
"...."
"சார்... சார்..." இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
எழுந்து மூன்றரை மணி நேரத்திற்குள் மூன்று நபர்களால் 630 ரூபாய்களையும், நிறைய மரியாதையையும் பறி கொடுத்திருந்தவன், முட்டிக் கொண்டு வந்த கோபத்தை பெருமூச்சாய் மாற்றி அலுவலகத்தினுள் நுழைந்தான்.
இரவு 8:30... ராகவனின் கான்க்ரீட் குடிசை.
"அப்பா... இன்னைக்கி நான் singing competition ல first prize வாங்கினேன் பா" ராகவனின் ஏழு வயது மகள் ரமா பூரிப்புடன் தன் கையிலிருந்த பிளாஸ்டிக் டப்பாவைக் காட்டிக் கொண்டிருந்தாள்.
"வெரி குட்" என்று செயற்கையாய் பாராட்டினாலும், ராகவனுக்கு மனது இன்னும் அமைதி ஆனபாடில்லை.
"சாப்பிட வர்றீகளா..." சுமதியின் குரல் சமையலறையில் இருந்து கேட்டது.
ரமாவைத் தூக்கியபடி உணவருந்தச் சென்றான். உண்ணும் பொழுது மனைவியும் மகளும் பேசிய எதுவும் இவன் மனதில் ஒட்டவில்லை. அவமானமும், கோபமும் மட்டுமே அவன் மனதில் மேலோங்கி இருந்தது.
இரவு 10:30...
"இன்னும் தூங்காம என்ன செஞ்சுடிருக்கீக?"
"நீ படுத்துக்க சுமதி... நான் வர்றேன்"
"மேலுக்கு முடியலையா? ஏன் என்னமோ மாதிரி இருக்கீக?"
"தொந்தரவு பண்ணாம போறயா? நான் கொஞ்சம் தனியா இருக்கணும்"
"வெளில இருக்குற கோவத்த எல்லாம் வீட்ல காட்றதே வேலையா போச்சு" சுமதி சலித்துக் கொண்டே அறைக்குள் சென்றாள்.
இரவு 11:30...
"டானி... நான் ராகவன். வேட்டைக்கு நேரம் வந்தாச்சு" ராகவன் தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். அவன் குரலில் அசாதாரணமான கம்பீரம். நிற்கும் பொழுது லேசாக கூனி நிற்கும் அவன் இப்பொழுது நெஞ்சை நிமிர்த்தி ஜல்லிக்கட்டு வீரனைப் போல் நின்று கொண்டிருந்தான். ஒரு 0.45 ரக துப்பாக்கி முதுகுத்தண்டின் அடியில் முளைத்திருந்தது.
"மூணு பேர்... எல்லாமே South Chennai தான். துரைப்பாக்கம், அடையார், தாம்பரம்... இந்த மூணு ஏரியா லீடர்சையும் வர சொல்லு. ஆளுக்கு ஒரு gun போதும். சப்ப பசங்க தான். Details நோட் பண்ணிக்க... ஒருத்தன் TN 02 AL 4987 ஆட்டோ டிரைவர். கடேசியா அவன பாத்தது அடையார்ல. ரெண்டாவது துரைப்பாக்கத்துல மெக்கானிக் கட வச்சுருக்குற முருகன்... மூணாவது பிளாட்டினம் லைன் காடெரிங் வச்சு நடத்துற ராமசந்திரன்... இவன் வீடு தாம்பரத்துல இருக்கு. மூணு பேரையும் கட்டி தூக்கிட்டு வந்தப்பறம் எனக்கு போன் பண்ணு"
நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட...
சரியாக பதினைந்து நிமிடத்தில் அவனது Nokia 9500 Communicator அறைகூவலிட்டது.
ராகவன் ஒரு கறுப்பு அரியாசனத்தில் வீற்றிருக்க, அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலிகளில் அவமதித்த ஆட்டோக்காரன், அநியாய விலை கேட்ட மெக்கானிக், இரக்கமில்லாமல் நடந்து கொண்ட முதலாளி மூவரும் கட்டப்பட்டிருந்தனர்.
"என்ன பாக்குறீங்க? அதிர்ச்சியா இருக்கா? நான் யாரு தெரியுமாடா? எனக்கு கீழ எத்தன அடியாளுங்க இருக்காங்கனு தெரியுமா உங்களுக்கு? அஞ்சு லட்சம் பேர்... ஒரு தனி army மாதிரிடா என் படை. இப்போ காட்றேன்டா உங்களுக்கு நான் யாருன்னு". டானியை ஓரக்கண்ணால் ராகவன் பார்க்க, மூவருக்கும் தீபாவளி தொடங்கியது.
"ரோட்ல எறங்கி சண்ட போட மாட்டாங்கனு நீ வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவியாடா? பாய்ஸ்... அவன் வாய்லயே அடிங்க..."
ஆட்டோக்காரனின் வாய் வீங்கியதும் ராகவனின் பார்வை முதலாளியின் மேல் விழுந்தது.
"ஏன்டா... சேத்த காசெல்லாம் போதாதா உனக்கு? அடுத்தவன் காசுக்கு ஏன்டா ஆசைப்படற ஈனப்பயலே... ஒவ்வொருத்தன் எவ்ளோ கஷ்டப்பட்டு வாழ்க்கைய ஒட்டிட்டிருக்கான்னு தெரியுமாடா உனக்கு? பணக்காரப் _______. இவன நிர்வாணமாக்கி ஒரு எடம் விடாம அடிச்சு நொறுக்குங்கடா"
முதலாளி அலறிக் கொண்டிருக்க, ராகவனின் கவனம் இப்பொழுது மெக்கானிக்கின் மேல்...
"கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவன் எல்லாம் உனக்கு இளக்காரமா போய்ட்டான்ல... ஒரு பஞ்சர் ஒட்றதுக்கு 150 ரூவாயாடா? அது அதிகம்னு சொன்னா சாவுக்ராக்கி, காயிலான் கட வண்டினு சொல்லுவியா? அந்த வெஸ்பா அந்தக் காலத்துலயே 5000 க்கு வாங்கினது தெரியுமா உனக்கு? இப்பிடி பல பேர் கிட்ட திருடின காசுல தான ஒடம்ப வளத்துருக்க? இவன பட்டினி போட்டு வேளா வேளைக்கு அடி தாராளமா குடுங்கடா. இனிமே இவனுக்கு பணத்து மேல ஆசையே இருக்கக் கூடாது. ஏதாவது பேசினா ரெண்டு அடி bonus குடுங்க."
"அய்யா... எங்கள தயவு செஞ்சு மன்னிச்சுருங்க... நாங்க ரொம்ப தப்பா நடந்துகிட்டோம். நீங்க யாருன்னு தெரியாம போச்சு... கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்கய்யா." மூவரும் ராகவன் கால்களில் விழுந்து கதறினர்.
"மன்னிப்பு எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்த" என்றவன் டானியின் பக்கம் திரும்பி
"டானி... ஒரு வாரம் இவங்கள ட்ரீட் பண்ணிட்டு விட்டுடு.... எவனாவது ரொம்ப பேசினா போட்டு தள்ளிடு."
"ஓகே பாஸ்"
"என்னங்க..." சுமதி அழைக்க, ராகவன் திரும்பிப் பார்த்து "நீ இதெல்லாம் பாக்க கூடாது சுமதி. உள்ள போ..." என்றான்.
"என்ன பண்ணறது... இதெல்லாம் பாக்கணும்னு என் தலையெழுத்து... என்னங்க... எந்திரிங்க. chair லயே தூங்கிட்டீங்களா?"
"ஆங்... ஓ... ஆமா... குட் மார்னிங்" கண்விழித்த ராகவனின் முகத்தில் பிரகாசமான புன்னகை...
"குட் மார்னிங் எல்லாம் அப்பறம் இருக்கட்டும். இந்தாங்க உங்க cell phone. ராமசந்திரன் சார் பேசணுமாம்..."
"குட் மார்னிங் சார். 8:30 க்கா சார்? சரி சார். நான் போய் பாக்கறேன் சார். Thank You சார். சார் அந்த 500 ரூவா... கொஞ்சம் பாத்து செய்ங்க சார்"
"ஓகே சார். ஓகே சார்."
"சுமதி அவசரமா கெளம்பணும். என் வெள்ளச் சட்டைய iron பண்ணிறியா? நான் மேலுக்கு குளிச்சுட்டு வந்துர்றேன்"
ராகவன் பரபரக்கத் தொடங்க ஜன்னலுக்கு வெளியே சூரியன் வானுக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்தான்.
-- கற்பனைகளால் கவலைகளைக் கொன்று வாழும் கோடிக்கணக்கான சாமானியர்களுக்கு என் சமர்ப்பணம்.
சனி, 24 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யோகேஷ் ரொம்ப அருமையான கதை. ஒரு நடுத்தர மனிதனின் வாழ்க்கை அவனது கனவு எல்லாம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும்
பதிலளிநீக்கு