வியாழன், 19 பிப்ரவரி, 2009

புத்தாண்டு

கிட்டத்தட்ட முழுவதுமாய் காலி ஆகி விட்டிருந்த அந்த அலுவலக வளாகத்தினுள் ப்ரீத்தியின் பேச்சுக்குரல் மட்டுமே நிசப்தத்திரையை கிழித்துக்கொண்டிருந்தது.
"ஒ.கே சார். இந்த வாரத்துக்குள்ள முடிக்க ட்ரை பண்ணறேன். அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர்..." பெருமூச்சுடன் தொலைபேசியை துண்டித்து விட்டு கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தாள். வருடத்தின் கடைசி நாளில் கணினிக்குள் அடைபட்டுக்கிடப்பதும், அதை உறுதி செய்ய தொலைபேசியில் அழைத்த மேலாளரும் எரிச்சல் மூட்டினாலும், அதை விட பெரிய பாரமொன்று அவள் மனதை அழுத்திக்கொண்டிருந்தது. மறுதினம் பிறக்கவிருந்தது புத்தாண்டு மட்டும் அல்ல, ப்ரீத்தியின் இருபத்தி நான்காம் வயதும் தான். எப்பொழுதும் இந்நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் வலம் வருபவள் முகத்தில் இம்முறை சோக ரேகைகள் மட்டுமே இழையோடின. அமெரிக்க வாழ்வின் தனிமை நன்றாகவே பழகி இருந்தும் ஊரே ஆரவாரமாய் கொண்டாடும் தன் பிறந்த நாளில் தனித்திருப்பதை ஏனோ அவள் மனம் ஏற்கவில்லை.

"ஆதி கூட விட்டுட்டு போயிட்டானே" என்பதே அவளது பிரதான கவலை. வருட இறுதியில் விடுமுறையில் செல்வது அமெரிக்கர்களுக்கோ அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கோ புதிதல்ல என்ற போதும் ஆதி அவளை தனியே விட்டுச்சென்றதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆதி - ஆறு மாதங்களுக்கு முன் ப்ரீத்தி அமெரிக்கா வந்த போது சூழ்நிலை காரணமாய் அவனுடன் தங்க வேண்டிய கட்டாயம். காலப்போக்கில் அந்தக்கட்டாயம் இவளுக்குள் காதலாய் பூத்திருந்தது. பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளாத போதும் இருவருக்குமே தெரிந்த ரகசியம் அது. "யார் எப்பிடி போனா எனக்கென்ன... நான் சந்தோஷமா தான் இருப்பேன். இன்னைக்கி இளையராஜா பாட்டு கேப்பேன். நல்லா சமைச்சு சாப்பிடுவேன்... அடுத்த வருஷம் என்னல்லாம் பண்ணனும்னு யோசிப்பேன்... ஆனாலும் ஆதி இப்பிடி பண்ணிருக்கக்கூடாது..." எங்கு சுற்றியும் அவள் மனது அந்த வாக்கியத்தை மட்டும் தாயைத்தேடும் குழந்தை போல் மறக்க மறுத்தது. வேண்டா வெறுப்பாய் வீடு வந்தவளுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. "என்னது கதவு இப்பிடி திறந்திருக்கு... ஆதி கூட ஊர்ல இல்லையே... ஐயய்யோ" என்று பதட்டமாய் உள்ளே நுழைந்தவள், காற்றில் கருப்பு மை கலந்தது போன்ற இருட்டில் கைகளை சுவற்றில் படர விட்டு விளக்கை உயிர்ப்பித்தாள். கூடத்தின் நடுவில் கேக் சகிதமாய் உட்கார்ந்திருந்த ஆதியை கண்டு சற்றே திருக்கிட்டவள் "ஆதி... நீ என்னடா பண்ணற இங்க" எனக்கேட்டாள். "உன்ன விட்டுட்டு போயிட்டேன் னு நம்பிட்டல்ல" குறும்பாய் கண்ணடித்து சிரித்த அவனிடம் ப்ரீத்தி "நீ ஒண்ணும் என் கூட பேச வேணாம் போ" என பொய்க்கோபம் காட்டினாலும், அவள் கண்ணோரத்தில் சாகசம் செய்து விழாமல் தப்பிய கண்ணீர் முத்து உண்மையை உரக்கக்கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக